விடாமுயற்சி – அஜித் ரசிகர்களுக்குக் கொண்டாட்டமா, திண்டாட்டமா?!

அஜித் நடிக்கும் படங்களின் ‘அப்டேட்’களை வெவ்வேறு நிகழ்வுகளில் கேட்டு செய்திகளில் இடம்பெறுவது அவரது ரசிகர்களின் வழக்கம். அஜித் நடிக்கும் படங்கள் குறிப்பிட்ட இடைவெளியில் வெளியாவது அதற்குக் காரணமாக இருந்து வருகிறது.

அது போதாதென்று ‘கடவுளே.. அஜித்தே..’ வேறு சமூக வலைதளங்களில் ‘வைரல்’ ஆனது.

இப்படிச் சிலகாலமாக அஜித் ரசிகர்களைக் காத்திருப்பில் வைத்த ‘விடாமுயற்சி’ தற்போது தியேட்டர்களில் வெளியாகியிருக்கிறது.

மகிழ் திருமேனி இயக்கியிருக்கிற இப்படத்தில் த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா கசாண்ட்ரா, ஆரவ், நிகில், விஜே ரம்யா உட்படப் பலர் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

‘விடாமுயற்சி ரொமான்ஸ் ஆக்‌ஷன் ட்ராமா படமாக இருக்கும்’ என்று மகிழ் திருமேனியும், படத்தில் பங்கேற்றவர்களும் ‘முன்னோட்ட நிகழ்ச்சி’களில் சொல்லி வந்தனர்.

அதனை மிகச்சரியாகத் திரையில் பிரதிபலித்திருக்கிறதா இப்படம்? ரசிகர்கள் கொண்டாடும்விதமாக, இப்படத்தின் திரையனுபவம் அமைந்திருக்கிறதா?

‘விடாமுயற்சி’ கதை!

அஜர்பைஜான் நாட்டில் நிகழ்வதாக வடிவமைக்கப்பட்டுள்ளது ‘விடாமுயற்சி’ கதை.

அஜர்பைஜான் நாட்டில் பெற்றோரோடு வசித்து வருகிறார் கயல் (த்ரிஷா). அமெரிக்காவில் இருந்து பணி நிமித்தம் அந்நாட்டுக்குச் செல்கிறார் அர்ஜுன் (அஜித்குமார்).

சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்னர் இருவருக்கும் காதல் ஏற்படுகிறது.

ஒருவரையொருவர் மதிக்கும்விதமாக, ஒருவரோடு ஒருவர் குறிப்பிட்ட நேரத்தைச் செலவிடும்விதமாக, அந்தக் ‘காதல் காலம்’ அமைகிறது.

திருமணமானப் பிறகும் அந்தக் காதல் தொடர்கிறது.

குறிப்பிட்ட காலகட்டத்தில், யாரும் எதிர்பாராத வகையில் நிகழும் ஒரு சம்பவம் அக்காதலைக் குலைத்துப் போடுகிறது. பிறகு, அர்ஜுனுக்கும் கயலுக்கும் இடையே இடைவெளி பெரிதாகிறது.

அந்தச் சூழலில், ‘இருவரும் பிரிந்துவிடலாம்’ என்கிறார் கயல். அர்ஜுன் அதனை ஏற்பதாக இல்லை.

அவருக்குத் தெரியாத இன்னொரு விஷயமொன்றைச் சொல்ல, அர்ஜுன் அதிர்கிறார். அவர்து முடிவை ஏற்பதாகச் சொல்கிறார்.

அதற்கடுத்த நாள், தலைநகர் பாகுவில் இருந்து கயலின் பெற்றோர் வசிக்கும் திப்ளிஸ் நகருக்கு இருவரும் செல்வதாகத் திட்டம். மனைவி தன்னைவிட்டுப் பிரியும்போது, தான் அவருடன் இருக்க வேண்டும் என்று அர்ஜுன் விரும்புவதே அதற்குக் காரணம்.

ஆனால், வழியில் ஒரு அசம்பாவிதம் நிகழ்கிறது.

சாலையில் கார் நின்றுபோக, அதனைச் சரிப்படுத்த முடியாமல் திணறுகிறார் அர்ஜுன். அப்போது, சில நிமிடங்களுக்கு முன் தனக்கு அறிமுகமான ரக்‌ஷித் – தீபிகா (அர்ஜுன், ரெஜினா கசாண்ட்ரா) தம்பதி ட்ரக்கில் வருவதைக் காண்கிறார் கயல். அவர்களுடன் ட்ரக்கில் ஏறுகிறார்.

சில கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஒரு ஹோட்டலில் அர்ஜுனுக்காக காத்திருப்பதாகச் சொல்லிச் செல்கிறார்.

ட்ரக் சென்ற சில நிமிடங்களில், தனது காரில் இருக்கும் கோளாறைச் சரி செய்கிறார் அர்ஜுன். நேராக, அந்த ஹோட்டலுக்கு செல்கிறார். அங்கு கயல் இல்லை.

அதற்கடுத்த சில மணி நேரங்களில், ரக்‌ஷித் – தீபிகா தம்பதி கயலைக் கடத்திச் சென்றதை உணர்கிறார். அது குறித்து போலீசில் புகார் கொடுக்கிறார். ஆனாலும் பலன் ஏதும் இல்லை.

இந்த நிலையில், ‘உன்னோட அக்கவுண்ட்ல இருக்குற பணம் மொத்தத்தையும் எடுத்துட்டு வா’ என்று மிரட்டுகின்றனர் ரக்‌ஷித்தும் தீபிகாவும். கூடவே, ‘இந்த கடத்தலை பிளான் பண்ணதே கயல்தான்’ என்கின்றனர்.

எதனை, யாரை நம்புவது? தான் என்ன செய்ய வேண்டும்? எதுவும் புரியாமல் குழம்புகிறார் அர்ஜுன்.

அதன்பின் என்ன நடந்தது? அவரது பன்னிரண்டு ஆண்டு காலக் காதல் அவரை வழி நடத்தியதா? இக்கேள்விகளுக்குப் பதிலளிக்கிறது ‘விடாமுயற்சி’யின் மீதி.

உண்மையைச் சொன்னால், இது நல்லதொரு கதை. ‘சர்வைவல் த்ரில்லர்’ ப்ளஸ் ‘ரொமான்ஸ் ஆக்‌ஷன் ட்ராமா’ வகைமையில் அமைக்கப்பட்டுள்ள இதன் திரைக்கதையும் அதற்கேற்ற காட்சியாக்கமும் ஒரு ஹாலிவுட் படம் பார்க்கும் உணர்வைத் தருகிறது. அது பாராட்டுக்குரிய விஷயம்.

சரி, அது ரசிகர்களின் மனதைத் தொடுகிறதா? இக்கேள்விக்கான பதில் ஒவ்வொருவருக்கும் வேறுபடும் என்பதே உண்மை.

அதையும் மீறி, சாதாரண அஜித் ரசிகர் ஒருவரை ஈர்க்கிற விஷயங்கள் இப்படத்தில் மிகக்குறைவு என்பதையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

‘பில்டப்’ இல்லா அஜித்!

நரைத்த தலைமுடியும் தாடியுமாக ‘விடாமுயற்சி’யின் பெரும்பாலான காட்சிகளில் தோன்றியிருக்கிறார் அஜித்குமார். மிகச்சில இடங்களில் வேறு ‘கெட்டப்’களில் வருகிறார். அப்போதெல்லாம் ரசிகர்களின் உற்சாகக் கூக்குரல்களைக் கேட்க முடிகிறது.

போலவே, இந்த படத்தில் அவரது நடிப்பு ‘நூல் பிடித்தாற்போல’ ஒரேமாதிரியாக அமைந்திருக்கிறது. அவரது பாத்திரம் பில்டப்கள், பஞ்ச் டயலாக்குகள் ஏதுமின்றி திரையில் காட்டப்பட்டிருப்பதைத் தனியாகப் பாராட்ட வேண்டும்.

‘வாலி’, ‘முகவரி’, ‘வரலாறு’, ‘பில்லா 2’, ‘மங்காத்தா’, ‘வேதாளம்’ உள்ளிட்ட சில படங்களில் தனது ரசிகர்கள் கொண்டாடுகிற நடிப்பைத் திரையில் வெளிப்படுத்தியிருப்பார் அஜித். அதில் இன்னொன்றாகச் சேர்ந்திருக்கிறது ‘விடாமுயற்சி’.

கொஞ்சம் முதிர்ந்த, அழகான பெண் ஒருவரின் காதலைத் திரையில் உணரச் செய்திருக்கிறது த்ரிஷாவின் நடிப்பு.

இப்படத்தின் ப்ளஸ், ரெஜினா கசாண்ட்ராவின் இருப்பு. அவர் வரும் காட்சிகள் ‘ப்ரெஷ்’ஷாக தெரிகின்றன.

அவரது ஜோடியாக வரும் அர்ஜுன் முகத்தில் முதுமைச் சாயல். அதையும் மீறி, தன் பாத்திரத்திற்கு அவர் நியாயம் சேர்த்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

இதுபோக வில்லனின் அடியாட்களாக வரும் ஆரவ், நிகில், அஜர்பைஜானைச் சேர்ந்தவர்களாக வருபவர்கள் என்று சிலர், அஜித் ரசிகர்களின் எரிச்சலைச் சம்பாதிக்கும்விதமாகத் திரையில் வந்து போயிருக்கின்றனர்.

இன்னும் ஜீவா ரவி, ரவி ராகவேந்தர், விஜே ரம்யா உட்படச் சிலர் இதில் தலைகாட்டியிருக்கின்றனர்.

ரம்யா, அஜித் சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கு ‘கத்திரி’ போட்டிருக்கிறார் படத்தொகுப்பாளர் என்.பி.ஸ்ரீகாந்த்.

திரையில் குழப்பமின்றிக் கதை சொல்வதில் சமரசம் ஏதுமில்லாமல் இருக்குமாறு பார்த்துக்கொண்டிருப்பது அருமை. அதேநேரத்தில், முன்பாதி மிக மெதுவாக நகர்வதைச் சரிப்படுத்தாமல் விட்டிருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் இந்தப் படத்தில் ‘விஷுவல் ட்ரீட்’ தந்திருக்கிறார். மிக நீண்ட நிலப்பரப்புகள், அதில் உலாவும் சில பாத்திரங்கள் திரையில் தெரிந்தாலும், ஒரு பிரமாண்டப் படம் பார்க்கும் உணர்வை ஏற்படுத்துவதில் வெற்றி பெற்றிருக்கிறார்.

மறைந்த தயாரிப்பு வடிவமைப்பாளர் மிலன் மற்றும் அவரது குழுவினரின் உழைப்பு, பின்பாதியில் நம்மை மெய்சிலிர்க்கச் செய்கிறது.

‘சவாடீகா’ பாடல் வழியே நம்மை உற்சாகப்படுத்துகிறார் இசையமைப்பாளர் அனிருத்.

கிட்டத்தட்ட அதேவிதமான வரவேற்பைப் பெறும் வகையில் ‘பத்திகிச்சு’, ‘தனியே’ பாடல்களைத் தந்திருக்கிறார்.

அனிருத்தின் பின்னணி இரண்டாம் பாதியைச் சிறப்பாக உணர வைக்கிறது.

சில சண்டைக்காட்சிகளில் ‘க்ரீன்மேட்’ பயன்படுத்தப்பட்டிருப்பதை வெளிக்காட்டும்விதமாக விஎஃப்எக்ஸ் அமைந்திருக்கிறது. ஆனாலும், அதிக நொடிகள் நீளாமல் அதனைக் கவனமாகக் கையாண்டிருக்கிறது படக்குழு.

ஹாலிவுட்டில் 1997ஆம் ஆண்டு வெளிவந்த ‘பிரேக்டவுன்’ கதையைத் தமிழில் சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குனர் மகிழ் திருமேனி.

பெரிதாகத் திருப்பங்கள் இல்லாத, சிறப்பம்சங்கள் இல்லாத, ஒரு சுமாரான ‘சர்வைவல் த்ரில்லர்’ கதையாகவே அது சினிமா ரசிகர்களால் பார்க்கப்படுகிறது.

நடிகர் அஜித்குமார் இந்தக் கதையில் நடிக்க விரும்பியது ஏன் என்பது அவருக்கே வெளிச்சம்.

தான் இயக்கும் படங்களின் திரைக்கதையில் சில ஆச்சர்யங்களை ஒளித்து வைப்பது மகிழ் திருமேனியின் வழக்கம். இந்தப் படத்தில் அப்படியான விஷயங்களை உற்று நோக்கித் தேட வேண்டியிருக்கிறது.

அதேநேரத்தில், எடுத்துக்கொண்ட வகைமைக்கு நியாயம் சேர்க்கிற வகையில் படத்தின் ஒவ்வொரு பிரேமையும் செதுக்கியிருப்பதைப் பாராட்டத்தான் வேண்டும்.

இது தேவையா?

‘தலைவாழை இலை போட்டு விருந்து படைப்போமா’ என்பது போன்று நிறைய நடிகர் நடிகைகள், பல்வேறு லொகேஷன்கள், சமகாலத்தில் வெற்றி பெற்ற கமர்ஷியல் படங்களுக்கு நிகரான உள்ளடக்கம் என்று பெரிய நட்சத்திரங்களின் பல படங்கள் ‘பான் இந்தியா’ அந்தஸ்தை நோக்கிப் பயணித்து வருகின்றன.

அப்படியொரு காலகட்டத்தில், குறிப்பிட்ட வகைமையில் அமைந்த சிறிய கதையொன்றை அஜித் ஏன் தேர்ந்தெடுத்தார்? அதற்கான பதில் அவருக்கு மட்டுமே தெரியும்.

ஆனால், ‘இது தேவையா’ என்று ரசிகர்கள் சொல்லும் வகையில் அமைந்திருக்கிறது ‘விடாமுயற்சி’யின் உள்ளடக்கம்.

காரணம், இதில் ரசிகர்கள் எதிர்பார்த்த ‘ஆக்‌ஷன்’ முன்பாதியில் சுத்தமாக இல்லை. ரசிகர்கள் விசிலடித்து ஆர்ப்பரிக்கும்விதமான ‘கமர்ஷியல் அம்சங்கள்’ பெரிதாக இல்லை.

குறிப்பாக, மகிழ் திருமேனியின் ‘மீகாமன்’ போன்றதொரு கதையில் அஜித்தை பார்க்கலாம் என்று நினைத்தவர்களுக்கு இப்படம் தருவது ஏமாற்றமே.

அதனால், ‘கொண்டாட்டத்தை நிகழ்த்த வேண்டும்’ என்று தியேட்டரில் நுழைந்த அஜித் ரசிகர்கள் திண்டாடிப் போகின்றனர். டைட்டில் காட்சியில் ஒலித்த கைத்தட்டல்கள், விசில்கள் பிறகு கிளைமேக்ஸில் மீண்டும் ஒலித்ததைக் கண்டு அதனை உணர முடிந்தது.

அனைத்தையும் தாண்டி, அஜர்பைஜான் நாட்டில் நிகழ்வதாக வரும் கதை ரசிகர்களை எளிதில் ஈர்க்குமா என்ற கேள்வியைப் பலமாக எழுப்புகிறது ‘விடாமுயற்சி’.

ரஜினியின் ‘கபாலி’ போன்ற படங்கள் அதற்குப் பதிலளிக்கும்விதமாகக் குறிப்பிட்ட அளவில் வெற்றியைப் பெற்றாலும், அப்படிப்பட்ட கதை சொல்லல் இதுவரை பெரிதாகக் கொண்டாடப்படவில்லை என்பதே உண்மை.

அதேநேரத்தில், வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள், இந்தியர்கள் நம்மூரைக் களமாகக் கொண்ட திரைப்படங்களை தியேட்டரில் காண்கையில் ‘அந்நியமாகத்தான்’ நோக்குவார்கள் என்ற வாதங்களையும் மறுக்க முடியாது.

இந்தக் கருத்துகளைச் சீர்தூக்கி, பரிசீலித்து, ‘விடாமுயற்சி’யில் தன் பங்களிப்பைத் தந்திருக்கின்றனர் அஜித்குமார் உள்ளிட்ட படக்குழுவினர்.

ஒரு கதையோடு ரசிகர்கள் ஒன்ற வேண்டுமா? சிறப்பான உழைப்பைக் கொண்ட உள்ளடக்கத்தைத் தந்தாலே, ஒரு திரைப்படத்தை அவர்கள் ஏற்றுக்கொள்வார்களா?

இந்தக் கேள்விக்கான பதிலை, ‘விடாமுயற்சி’ குழுவினர் போலவே நாமும் அறிய ஆவலாக இருக்கிறோம்!

  • உதயசங்கரன் பாடகலிங்கம்
You might also like