சில திரைப்படங்களின் ட்ரெய்லர் பார்த்தாலோ, அது தொடர்பான தகவல்களை அல்லது வெளியீட்டு அறிவிப்புகளைக் கண்டாலோ, ‘உடனடியாக இதனைப் பார்த்தாக வேண்டும்’ என்று தோன்றும். கனமான உள்ளடக்கம் அதிலிருக்க வேண்டும் என்பதில்லை. ‘எண்டர்டெயின்மெண்டுக்கு கியாரண்டி’ என்ற எண்ணத்தின் உடனடி விளைவு அது. ’அப்படியொரு படமாக இருக்குமா’ என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது ‘ஒரு ஜாதி ஜாதகம்’ குறித்த புரோமோஷன்கள்.
சரி, இப்படம் தரும் திரையனுபவம் எப்படிப்பட்டதாக இருக்கிறது?
’ஒ.ஜா.ஜா.’ கதை!
இந்தப் படத்தின் கதை மிகச் சிறியது.
முப்பத்தெட்டு வயதைத் தொடுகிற ஜெயேஷுக்கு (வினீத் சீனிவாசன்) இன்னும் திருமணமாகவில்லை. சுமார் 12 ஆண்டுகளுக்கும் மேலாக, குடும்பத்தினர் அவருக்கு வரன் தேடி வருகிறார். ‘பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்’ என்று பழமையான எண்ணங்கள் பலவற்றைத் தன் மனதில் ஜெயேஷ் வகுத்து வைத்திருப்பதே இதற்குக் காரணம்.
அவர் ‘வேண்டாம்’ என்று நிராகரித்த பெண்கள் பலர், வேறொரு நபரைத் திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில், ‘எனக்கு 78 வயசாகறப்போ உனக்கு கல்யாணம் முடியலேன்னா என்னோட ஆயுசு முடிஞ்சிரும்னு ஜோசியர் சொல்லியிருக்காரு’ என்று ஒரு குண்டைத் தூக்கிப் போடுகிறார் ஜெயேஷின் தந்தை.
அதையடுத்து, துரித கதியில் ஜெயேஷுக்கு பெண் பார்க்கப்படுகிறது. சில பெண்களை அவர் காண்கிறார். வழக்கம்போல நிராகரிக்கிறார். சில வரன்கள் திருமணம் வரை சென்று, பின்னர் தங்களது பயணத்தை நிறுத்திக் கொள்கின்றன.
இதற்கிடையே, ஜெயேஷை சந்திக்கும் ஒரு பெண் ‘நிறைய அவமானங்களைக் கடந்தபிறகுதான் உங்களுக்கு திருமண வாழ்க்கை அமையும்’ என்கிறார். அது, அவரது மனதைக் குலைத்துப்போடுகிறது. அவர் சொன்னதுபோலவே சில விஷயங்கள் நிகழ்கின்றன.
ஒருகட்டத்தில் தனது நிபந்தனைகளைத் தூக்கிக் கடாசிவிட்டு திருமணம் செய்துகொள்ளும் முடிவுக்கு வருகிறார் ஜெயேஷ். ஆனால், அம்முடிவுக்கு வருவதற்குள் அவரைச் சில அவமானங்கள் சூழ்கின்றன.
அந்த அவமானங்கள் எத்தகையவை? அதனை அவர் எதிர்கொண்டாரா, இல்லையா? இறுதியாக, அவருக்குத் திருமணம் ‘சுபமாக’ முடிந்ததா என்று சொல்கிறது ‘ஒரு ஜாதி ஜாதகம்’ படத்தின் மீதி.
ஆங்கிலத்தில் ‘தி 40 இயர் ஓல்டு வர்ஜின்’ உட்படப் பல படங்கள் உரிய காலத்தில் திருமணமாகாமல் வாழ்கிற ஆண்களின் கதையைச் சொல்லியிருக்கின்றன. அதனைப் பின்பற்றி உருவாக்கப்பட்ட ‘ரொமான்ஸ் காமெடி ட்ராமா’வாக உள்ளது ‘ஒரு ஜாதி ஜாதகம்’. இந்த டைட்டிலுக்கு ‘ஒரு வினோதமான ஜாதகம்’ என்று பொருள் கொள்ளலாம்.
ஒருவரது வாழ்வில் நிகழ்கிற சோகங்களை, அவலங்களை, அவமானங்களை ‘காமெடி’ ஆக்கியிருக்கிறது இப்படம். அந்த வகையில் ஒரு காமெடி கலாட்டாவாகத் திகழ்கிறது.
கலக்கல் ‘காமெடி’!
கொஞ்சம் கூன் விழுந்த முதுகு, வயிற்றில் தொப்பை, ஆமை போல நடை என்று நாயகனாக வரும் வினீத் சீனிவாசனை அவரது தந்தையாக வரும் குஞ்சிகிருஷ்ணன் ஒரு காட்சியில் ‘கமெண்ட்’ அடிப்பார். அதனை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு, இப்படத்தில் அவர் தனது தோற்றத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
பேச்சில், பாவனைகளில் ‘இவர் ஒரு பூமர்’ என்று சொல்லும்படியான ‘பெர்பார்மன்ஸ்’ தந்திருக்கிறார். அந்த வகையில், வினீத் மொத்தப்படத்தையும் தாங்கிப் பிடித்திருக்கிறார்.
’ன்னா தான் கேஸ் கொடு’ போன்ற சில படங்களின் வழியே கவனம் ஈர்த்த குஞ்சிகிருஷ்ணன், இதில் நாயகனின் தந்தையாகத் தோன்றி ‘சிக்சர்’ அடித்திருக்கிறார்.
அவருக்கு அடுத்தபடியாக, நாயகனுக்கு ‘வழிகாட்டும் நண்பனாக’ திகழ்கிற பாத்திரத்தை ஏற்றிருக்கும் ம்ருதுல் கலக்கியிருக்கிறார். இது போக அமல் சாஹா, பாபு ஆண்டனி, திவாகரன் விஷ்ணுமங்கலம், ரஞ்சி கண்கோல் உட்படப் பலர் இதில் நடித்துள்ளனர். அனைவருமே சில நொடிகள், நிமிடங்கள் தலைகாட்டினாலும், நம் நினைவில் நிற்கின்றனர்.
இப்படத்தில் நிகிலா விமல், ‘கனா காணும் காலங்கள்’ ஹரிதா, ஷான் ரோமி, ஐஸ்வர்யா மிதுன், காயாடு லோஹர், இஷா தல்வார், சிப்பி தேவஸி, வர்ஷா ரமேஷ், சயனோரா பிலிப் உட்படப் பல பெண்கள் இதிலுண்டு. அவர்களில் சிலர் ‘நாயகி’ எனும் தோற்றத்தை ஏந்தியிருக்கின்றனர். அந்த வகையில் காயாடு லோஹர் மற்றும் இந்து தம்பி நம் மனம் கவர்கின்றனர்.
இது போக நாயகனின் தாயாக, சகோதரியாக நடித்த ரெஜிதா மது, பூஜா மோகன்ராஜ் இருவருக்கும் முக்கியத்துவம் காட்சிகள் இதிலுண்டு.
இதன் கதை திரைக்கதை வசனத்தை எழுதியிருக்கும் ராகேஷ் மண்டோடி, அவருக்கு உதவியிருக்கும் ஷரேஷ் மலையன்கண்டி இருவரும் ‘ரசிகர்கள் சிரித்து மகிழ வேண்டும்’ என்ற நோக்கில் உழைத்திருக்கின்றனர். அதேநேரத்தில், ‘சமகாலத்திற்கு ஏற்றதாக, இக்காலத்து மனிதர்களின் மனப்பாங்குடன் பொருந்துவதாக இருக்க வேண்டும்’ என்பதிலும் நிறையவே அக்கறை காட்டியிருக்கின்றனர்.
சில இடங்களில் பழமையின் சாயல் தெரியும் வகையில் எதிர்தரப்பினருக்கான வசனங்களை அமைத்திருக்கின்றனர். ஆனால், அவை நிறையவே சர்ச்சைகளை ஏற்படுத்துவதாக இருக்கின்றன.
இயக்குனர் எம்.மோகனன் இத்திரைக்கதையை சினிமாத்தனமான மட்டுமே கையாளாமல், கொஞ்சம் யதார்த்தத்தையும் கலந்திருக்கிறார். அந்த ‘ட்ரீட்மெண்ட்’ படத்தைக் காப்பாற்றியிருக்கிறது.
ஒளிப்பதிவாளர் விஸ்வஜித் ஒடுக்கத்தில், படத்தொகுப்பாளர் ரஞ்சன் ஆபிரகாம், தயாரிப்பு வடிவமைப்பாளர் ஜோசப் நெல்லிக்கல் உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பு, சிறந்த கமர்ஷியல் படத்திற்கான உள்ளடக்கம் இது என்று திரையைப் பார்த்தவுடன் சொல்ல வைக்கிறது.
இசையமைப்பாளர் குணா பாலசுப்பிரமணியன் தந்திருக்கும் பாடல்கள் முதல்முறை கேட்கும்போதே மனதைத் தொடுகின்றன. அது போதாது என்று பின்னணி இசை வாயிலாகவும் நகைச்சுவையை ஊட்ட முயற்சித்திருக்கிறார். அந்த வகையில் கவனம் ஈர்த்திருக்கிறார்.
இந்தப் படத்தில் தன்பாலின ஈர்ப்பு சம்பந்தப்பட்ட காட்சிகள் உண்டு. அதற்காக, நேரடி விவரணைகள் இருக்குமென்று எண்ண வேண்டாம்.
’ஏழு கழுதை வயசாச்சு இன்னும் மொட்டைப்பயலாவே இருக்கியேடா’ என்று சிலர் ‘கமெண்ட்’ அடிப்பதைக் கேட்டவுடன் இரண்டுவிதமாக ‘ரியாக்ஷன்’ வரும். எதிரிலிருப்பவர் சொல்லும் பதிலைக் கேட்டு அல்லது உடமொழி கண்டு, அவரது நிலைமையை எண்ணிச் சிலர் சிரித்துவிடுவார்கள். ‘ஒருத்தரை புண் படுத்துற மாதிரி கிண்டலடிக்கிறதுக்கு எப்படிங்க சிரிக்க முடியும்’ என்று கேட்கலாம்.
இந்தப் படத்தில் அப்படித்தான் ‘தன்பாலின ஈர்ப்பு’ கையாளப்பட்டிருக்கிறது.
தமிழ் படங்களை விட மலையாளப் படங்களில் இது போன்ற சித்தரிப்புகளை அதிகம் கண்டிருக்கிறோம். ஆனால், சமீபகாலமாக அந்த தோற்றத்தைத் துறக்க முயற்சித்து வருகிறது மலையாளத் திரையுலகம். அதில் பின்னடைவை ஏற்படுத்துவதாக ‘ஒ.ஜா.ஜா’ இருக்கிறது என்று சிலர் விமர்சித்து வருகின்றனர்.
’கமர்ஷியல் படத்துல பார்க்குற எத்தனையோ அபத்தங்கள்ல ஒண்ணா இதையும் சேர்த்துக்கலாம்’ என்பவர்கள், தன்பாலின ஈர்ப்பை அவதூறாகச் சொல்கிற காட்சிகளைக் கடந்து சென்றுவிடுவார்கள்.
ஜெயேஷின் மனநிலையோடு இப்படத்தை அணுகுபவர்கள் அக்காட்சிகளைக் கண்டு கும்மாளமிட்டுச் சிரிப்பார்கள்.
‘இவற்றில் நாம் எந்த ரகம்’ என்று சுயபரிசோதனை செய்துகொள்ள விரும்புபவர்கள் ’ஒ.ஜா.ஜா.’ பார்த்தபிறகு தானாக அறிந்து கொள்ளலாம்!
– உதயசங்கரன் பாடகலிங்கம்