சில வேண்டுதல்கள் எல்லா செவிகளுக்கும் கேட்கும்!

கவிஞர் கரிகாலன்

இரு சுவையான முகநூல் பதிவுகள்:

பிப்ரவரி ‘உயிர் எழுத்து’ இதழில் என்னுடைய நேர்காணல் வருகிறது.

நான் கிரிக்கெட் பார்த்த காலத்தில் வாஸிம் அக்ரம் என்றொரு பௌலர் இருந்தார். அவர் பந்து வீசும்போது டென்ஷனாவேன். ஏதோ நானே களத்தில் நிற்பதுபோல.

அப்படிதான் இருந்தன சுதீர் செந்திலின் கேள்விகள். சில பதில்களுக்கு கிருண்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்போல அடித்து ஆடியிருக்கிறேன். சில இடங்களில் கவாஸ்கர் போல தடுத்து ஆடியும் இருக்கிறேன்.

Anyway, அனைத்து கேள்விகளுக்கும் காய்தல் உவத்தில் இன்றி மனத்தூய்மையோடு பதில் அளித்திருக்கிறேன்.

சமகால இலக்கியப் போக்குகள், இலக்கிய ஆளுமைகள் குறித்து இந்நேர்காணலில் மனம் திறக்க வைத்திருந்தார் செந்தில்.

அந்த நேர்காணல் குறித்து, சுதிர் செந்தில் முகநூலில் பதிவிட்டிருந்தார். நெகிழ்ந்த தருணமது. அன்பு, நன்றி போன்ற சொற்கள், சமூக ஊடகங்களால் தேய்க்கப்பட்டு பொருளிழந்த காலம். சுதீர் செந்திலின் ஆதரவுக் கரங்களைப் பற்றிக் கொள்கிறேன்.

இனி, சுதிர் செந்திலின் பதிவு.

பத்திரிகையாளனாக ஆவேன் என்று நான் ஒருபோதும் நினைக்கவில்லை. ஆனால் அதற்கான விதை சிறு வயதிலேயே விதைக்கப்பட்டு விட்டது.

80களில் புதிய கலாச்சாரம் இதழ் மதுரையில் இருந்து வந்தது. அதில் அமைப்பு ரீதியாக வேலை செய்ததும் அதற்கு முன்னரே நண்பர்களோடு இணைந்து கையெழுத்துப் பத்திரிகை நடத்தியதும் நல்ல அனுபவம் தான்.

உயிர்மை காலகட்டத்தில் எதையும் உறுப்படியாக செய்ய மனுஷ்ய புத்திரன் விடவில்லை. உயிர் எழுத்து காலகட்டத்தில் நான் முழுமையான பத்திரிகையாளனாக மாறிவிட்டேன்.

நேர்காணல் எடுப்பது உண்மையில் பெரிய கலை. உயிர் எழுத்திற்காக செய்த முதல் நேர்காணல் தர்மசிறீ பண்டாரநாயகவை. அவர் சிங்கள திரைக் கலைஞர். அதற்காக தோழர் பிரளயன் திருச்சி வந்திருந்தார்.

முழுக்க ஆங்கிலத்தில் எடுக்கப்பட்டு தமிழில் வந்தது. அப்போது பிரளயன் என்னிடம், நீங்களே நேர்காணலை செய்திருக்கலாமே என்று சொன்னார். அது எனக்கு நம்பிக்கையைக் கொடுத்தது.

அதற்குப் பின் நான் தனியாகவும் கூட்டாகவும் பல நேர்காணல்களை செய்துள்ளேன்.

கடந்த வாரம் நண்பர் கரிகாலன் (Karikalan R) எதிர்பாராதவிதமாக திருச்சி வந்திருந்தார். அவரை நேர்காணல் செய்ய வேண்டும் எனப் பல முறை நினைத்திருந்தேன்.

எனக்குப் பிடித்த கவிஞர் கரிகாலன். அவருடைய நூல்கள் மற்றும் அவருடைய மனைவி தமிழ்ச்செல்வி நூல்கள் சிலவற்றை நான் பதிப்பித்து இருக்கின்றேன். ராயல்டி என்று எதுவும் கொடுத்ததாக நினைவில் இல்லை.

கரிகாலனுடைய எழுத்து நடையும் வசீகரமானது. சமீபகாலமாக அவருடைய எழுத்துக்கள் அங்கதமும் பொருளும் நிறைந்து கொப்பளிக்கின்றன.

ஐம்பதிற்கும் அதிகமான கேள்விகளின் மூலமாக இன்று தமிழகத்தின் நிலவும் அரசியல் பண்பாட்டு இலக்கியப் போக்குகளின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை பதிவுசெய்ய நினைத்தேன்.

என்னுடைய கேள்விகளை கரிகாலன் எதிர்கொண்ட விதம் ஒரு தலைசிறந்த தலைவனுக்கு உரியது. எனவே நானும் என் மூர்க்கத்தை குறைத்துக்கொள்ள வேண்டியதாயிற்று.

வாசகர்களுக்கும் நண்பர்களுக்கும் 26 பக்கங்கள் நீளும் இந்த நேர்காணல் மிகவும் பிடிக்கும் என நினைக்கிறேன்.

சூசகமாக புரிந்து கொள்ளும்படியான வேண்டுதல்கள் கண்களுக்குப் புலனாகாமல் செவிகளுக்குக் கேட்கக்கூடும்.

நன்றி: முகநூல் பதிவு

You might also like