மருதோவியம் – மாறுதலான மானுடக் கூடல்!

ஜனவரி 29, நவீன ஓவியராகவும், அரசியல் சமூக உணர்வை தனது ஓவியங்கள் வழியே தொடர்ந்து பிரதிபலிக்கும் விதமான ட்ராஸ்கி மருதுவுக்குப் பாராட்டுத் தெரிவிக்கும் விதத்தில், சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் “மருதோவியம் விழா“.

முழு நாள் நடந்த கருத்தரங்கம் மற்றும் பலதரப்பட்ட திரையிடல் உள்ளிட்ட நிகழ்வுகளில், தமிழகத்தைச் சேர்ந்த வெவ்வேறு அரசியல், இலக்கியம், ஊடகம், ஓவியப் பின்புலம் கொண்ட பல்வேறு நபர்களின் ஒரு சேர அரங்கில் காண முடிந்தது.

இலங்கையிலிருந்து வந்திருந்த மருதுவின் நண்பர் மேடையில் சொன்னபடி, “இந்த விழா ஒரு மானுடக் கூடல் தான்.”

அரங்கில் காலை நிகழ்வில் ஆய்வாளரான ஆர்.பாலகிருஷ்ணன் உரையாற்றிய பிறகு, தொல்.திருமாவளவன், வீ.அரசு, நடிகர் நாசர் உள்ளிட்ட பலர் பங்கேற்றுப் பேசியிருக்கிறார்கள்.

மதியம் மருது குறித்த சிலருடைய உரையல் அடங்கிய காட்சித் தொகுப்பைத் திரையிட்டார்கள்.  அதில், ஊடகவியலாளரான ப.திருமாவேலனின் வரையும் அடக்கம். 

ஓவியர் மருதுவுடனான தன்னுடைய அனுபவங்களை விவரித்துக் கொண்டு போன அவர், “எத்தனையோ பத்திரிகைகளுக்காக மருதுவின் ஓவியங்களை வாங்கி இருக்கிறோம். அவைகளில், பலவற்றிற்கு அவர் உரிய பணம் பெற்றுக்கொள்ள ஆர்வம் காட்டியதில்லை.” என்றவர்,

“மருதுவைப் பொறுத்தவரை சமகாலத்திய நவீனத்துவமும் தமிழ் மரபின் வேர்களும் ஒன்றிணைந்த கலைஞர். 2025-ல் இருந்தாலும் 2050-ம் ஆண்டுக்கான முன்னோட்டச் சிந்தனையுடன் செயல்படுகிறவர்.” என்றார். 

திமுக சட்டமன்ற உறுப்பினரும் மருத்துவருமான நா.எழிலன் பேசும்போது, “மருதுவுடனான வெவ்வேறு தருணத்து உரையாடல்களை நினைவு கூர்ந்து, அவருக்கு மருத்துவம் செய்ய நேரிட்ட அனுபவத்தையும் விளக்கிக்கொண்டு போனபோது, குறிக்கிட்டுப் பேசினார், ஓவியரான மருது.

“அண்மையில், வீட்டில் இருந்தபோது, திடீரென உடலில் வாயுப் பிரச்சனை போன்ற உணர்வு. சாப்பிட்டுப் பார்த்தேன், நடந்தும் பார்த்தேன். ஆனாலும், அந்த வலி தீர்ந்தபாடாக இல்லை.

பின்னர் சட்டென்று மருத்துவர் எழிலின் நினைவு வந்ததும், அவருடைய தொலைபேசி எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுத்தேன். இரண்டு முறை கொடுத்தேன். அடுத்த முறை கொடுப்பதற்குள் எழிலே தொடர்புக்குள் வந்துவிட்டார்.

உடனே ஒரு ஆம்புலன்ஸை அனுப்பி, என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். உடனடியாக சோதனைகளெல்லாம் நடந்தன. அப்போதுதான் இதயத்தில் அடைப்பு வந்ததே கண்டுணர்ந்து அதற்கான ஆபரேசனை உடனே செய்து முடித்தார்கள்.

இதை ஏன் இப்போது சொல்கிறேன் என்றால், நம்முடைய உடலுக்குள் எந்தவிதமான வலிகளை நாம் உணர்ந்தாலும் அதை அலட்சியமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

உடனடியாக அன்று நாம் மருத்துவரைத் தொடர்பு கொள்ளாவிட்டால், என்னுடைய நிலை வேறுமாதிரி இருந்திருக்கும். நல்ல வேளையாக நண்பர் எழிலன், தலையிட்டுக் காப்பாற்றி இருக்கிறார். 

இதேமாதிரியான அனுபவம்தான் மதுரையில் என்னுடைய அப்பாவிற்கும் நடந்திருக்கிறது. வலி வந்து அவர் சொன்னதுமே அவரை மருத்துவமனைக்கு அழைத்துக் கொண்டுபோய் விட்டார்கள். பிறகு என்ன நடந்தது என்று அவருக்குத் தெரியவில்லை.

சென்னையிலிருந்து நாங்கள் போய் அவரை மருத்துவமனையில் பார்த்தபோது, தனக்கு நேர்ந்த அனுபவம் குறித்து ஒரே வரிதான் சொன்னார், “சுவிட்சை ஆஃப் பண்ணி, ஆன் பண்ண மாதிரி இருக்கு”.

தொடர்ந்து பொதுவுடைமைப் பார்வையோடு, தோழர் சி.மகேந்திரனும் தமிழ்த் தேசியப் பார்வையோடு மே 17 இயக்க திருமுருகன் காந்தியும் அடுத்து, திராவிட இயக்க அருள்மொழியும் பேசிய பிறகு, பழ.நெடுமாறனின் உரைக்குப் பிறகு மருதுவின் நெகிழ்ச்சியான நன்றியுரையுடன் நிறைவடைந்தது. 

நிறைவடைந்த விழா உண்மையிலேயே பலதரப்பட்ட கருத்தியல் கொண்டவர்களை ஒருங்கிணைத்த மானுடக் கூடல்தான்”.

இதை பொறுமையுடன் ஒருங்கிணைத்து சாத்தியப்படுத்திய வையம் குழுவினருக்கும் திரு.சந்திரசேகருக்கும் குறிப்பாக நன்றி சொல்ல வேண்டும்.

– மணா

You might also like