இந்தச் சுடரை அணையாமல் பார்த்துக்கொள்!

உன் மஞ்சள் ஆடைப் புகைப்படத்தைப் பார்த்துக்கொண்டே இருக்கிறேன். இப்போதே கொஞ்சம் எலுமிச்சை வாசனை வேண்டும்போல் இருக்கிறது. தாகம் போல் ஒரு உணர்வு.

தனியாக எங்கேனும் பைக்கில் போக வேண்டும் போல் தோன்றுகிறது. ஆனால், எங்கென்று தெரியவில்லை. வெகு தூரத்திற்கு. அங்கு சென்று உன்னை நினைத்துக்கொள்ளவேண்டும் அவ்வளவுதான்.

நமக்கான தனிமை என்று பாவித்துக்கொள்கிறது மனம். தற்செயல் மாதிரி சில ரசனை ஒற்றுமைகள் அவ்வளவு ஆச்சர்யமளிக்கின்றன.

ஒரே திரைப்படத்தில் அதே பாடலில் வரும் ஒரு துணை நடனக்காரனின் மேன்லினெஸ் பற்றி, பிறகொரு காதல் காட்சியில் பயன்படுத்தியிருக்கும் அரங்க பொருட்கள் ஒரு பாத்திரமாக மாறியிருந்தது பற்றி (சார்லியின் அறை) மழைக்குள்ளே பாடலில் வரும் காமிரா, அந்த குட்டி போன்சாய், இந்த சொற்கள் ஏன் தீர்வதே இல்லை.

நிச்சயமின்மை குறித்த எந்த அச்சமும் இல்லாமல் நதியின் விழும் கரைமரத்தின் நிழல் இந்த உணர்வு.

ஒரு காகிதம் எரிவது மாதிரி ஆர்ப்பாட்டம் அற்ற மெல்லிய வேட்கை. வளர்ப்புப் பறவைகளிடம் பேச இன்னுமோர் ரகசியம் கூடி இருக்கிறது என்கிறாய்.

வளர்ப்புப் பிராணியை இன்னும் அதிகமாய் தழுவிக்கொள்கிறேன். அது மடியுறங்கும் நேரத்தை நீட்டித்து அனுமதிக்கிறேன். எல்லாவற்றுக்கும் அப்பால் ஒரு மென்பதட்டம்.

இடி விழுந்த நிலத்தின் அருகே உள்ள குளத்து நீரின் ஆழத்தில் அசையும் தாவரமாய் ஒரு நடுக்கம் இருக்கத்தான் இருக்கிறது.

சகல அறிதலுக்கும் பிறகு ஒரு சிறிய விசித்திரத்தை நம் உலகில் பரவவிட யாரேனும் வந்து விடுகிறார்கள். தன் கருணையின் தூய பாகத்தை, தன் ரகசியங்களை, தன் குற்றங்களை, தன் தழும்புகளை நமக்காய் காத்திருந்தது போல் திறந்து வைக்கிறார்கள்.

கவிஞர் நேசமித்ரன்

இவ்வளவு பற்றுதலுக்கு முன் நான் எளிய பிராணி, இத்தனை நம்பிக்கைக்கு நான் உகந்தவன் அல்ல என்று மெல்லிதான அச்சத்தோடு நிற்கவைக்கிறார்கள்.

இதுதான் கடைசித் தீக்குச்சி, இந்த சுடரை அணையாமல் பார்த்துக்கொள். இனி வலி தாங்க திராணி இல்லை. ஒப்புக்கொடுக்கிறேன். என்னை இதே திமிரோடு வாழ அனுமதி. என் சுதந்திரத்தின் திசைகளை மதி. உடன் வா என்கிறது ஒரு குரல்…

எங்கிருந்தாய் இவ்வளவு காலம். முன்பே வந்திருந்தால் இவ்வளவு வலியை நான் எதிர்கொண்டிருக்க மாட்டேன் அல்லவா. ஏன் இவ்வளவு தாமதம் என்று கோபிக்கிறது.

இவ்வளவு வலிக்குப் பிறகுதான் உன் அன்பின் ஆழத்தை உணர முடிந்தது. இந்த தருணத்திற்குத்தான் அவ்வளவும் போல என்று சமாதானம் சொல்லிக் கொள்கிறது.

– கவிஞர் நேசமித்ரனின் ஒரு காதல் கடிதத்திலிருந்து…

நன்றி: பேஸ்புக் பதிவு

You might also like