‘ரேகாசித்ரம்’ – காலம் கடந்த குற்ற விசாரணை!

இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் அளித்த பேட்டியொன்றில் தான் ரேகாசித்ரம், காதலிக்க நேரமில்லை படங்களைச் சமீபத்தில் பார்த்ததாகவும், அவை தன்னைக் கவர்ந்ததாகவும் கூறியிருந்தார். அவர் குறிப்பிட்டிருந்த ‘ரேகாசித்ரம்’ எனும் மலையாளத் திரைப்படம் கடந்த 9-ம் தேதியன்று வெளியானது.

ஜோஃபின் டி. சாக்கோ இயக்கியுள்ள இத்திரைப்படத்திற்கு முஜீப் மஜீத் இசையமைத்திருக்கிறார்.

நடிகர் மம்முட்டி, மறைந்த இயக்குனர் பரதன் ஆகியோர் எண்பதுகளில் இருப்பது போன்ற தோற்றம் ஏஐ நுட்பத்தில் இடம்பெற்றிருப்பது இப்படத்தின் சிறப்பம்சமாகச் சொல்லப்படுகிறது.

சரி, ‘ரேகாசித்ரம்’ தரும் திரையனுபவம் எத்தகையது?

நாற்பதாண்டுகளுக்கு முன்..!

ஒரு சிறுவன் இன்னொரு சிறுவனிடம், ‘என்னோட அப்பா சினிமாவுல நடிச்சிருக்காரே’ என்கிறான். அதனை இன்னொருவன் ஏற்பதாக இல்லை. அப்போது, ஒரு இளம்பெண்ணை ஓலைப்பாயில் சுற்றித் தன் தந்தை உட்பட நான்கு பேர் தூக்கிச் சென்ற காட்சி அச்சிறுவனின் மனதில் நிழலாடுகிறது.

நாற்பதாண்டுகளுக்குப் பின்னர், ராஜேந்திரன் (சித்திக்) எனும் நபர் ஒரு காரில் சாலக்குடி அருகிலுள்ள மலைக்கபாறை காட்டுப்பகுதிக்குச் செல்கிறார். ‘நான் மட்டும் செல்கிறேன்’ என்று ஓட்டுநரிடம் சொல்லிவிட்டுச் செல்லும் அவர், ஓரிடத்தில் ஒரு மரத்தின் அடியில் அமர்கிறார். சிறிது நேரம் கழித்து துப்பாக்கிச் சத்தம் கேட்க, அலறியடித்துக் கொண்டு அவ்விடம் நோக்கி ஓடுகிறார் கார் ஓட்டுநர். ராஜேந்திரன் உயிரிழந்து கிடப்பதைக் காண்கிறார்.

மரணத்திற்கு முன்னர், அவர் ஃபேஸ்புக் லைவ்வில் பேசியிருக்கிறார். அதில் ‘நான், பிரான்சிஸ் தடத்தில் மற்றும் ஆலீஸ் மால் உரிமையாளர் வர்கீஸ் மூவரும் சேர்ந்து ஒரு இளம்பெண் சடலத்தை, இப்போது நான் அமர்ந்திருக்கும் இந்த இடத்தின் கீழே புதைத்தோம்’ என்று சொல்லியிருக்கிறார்.

அந்த வனப்பகுதி அமைந்துள்ள மலைக்கபாறை பகுதி காவல் ஆய்வாளராக அன்றுதான் பொறுப்பேற்றிருக்கிறார் விவேக் (ஆசிஃப் அலி). ஆன்லைன் ரம்மி போட்டியில் வெற்றி பெற்ற தகவல் வெளியானதால், அவர் சில காலம் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்திருக்கிறார்.

காவல் துறையில் நேர்மையானவராக அறியப்படும் விவேக், அந்த வழக்கை விசாரிக்கத் தொடங்குகிறார்.

ராஜேந்திரன் மரணித்த இடத்தின் அடியில் இருந்து ஒரு இளம்பெண்ணின் எலும்புக்கூடு கண்டெடுக்கப்படுகிறது. ஒரு காலில் அவர் அணிந்த கொலுசுவும் கிடைக்கிறது. அதையடுத்து, நாற்பதாண்டுகளுக்கு முன்னர் காணாமல்போன பெண்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு விசாரணை நகர்கிறது. ஆனால், சரியான தகவல் ஏதும் கிடைத்தபாடில்லை.

இந்த நிலையில், அருகிலுள்ள காவல்நிலையமொன்றில் ஒரு இளம்பெண் காணாமல்போன புகாரின் மீது ‘மெமோ’ கொடுக்கப்பட்டிருப்பதைக் காண்கிறார் விவேக். ஒரு திருட்டு வழக்கில் அவர் சம்பந்தப்பட்டிருப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

அந்த புகாரைத் தந்தவர் பெயர் சந்திரப்பன் (இந்திரன்ஸ்). திரையுலகில் தயாரிப்பு நிர்வாகியாகப் பணியாற்றியவர். அவரிடம் விவேக் விசாரணை மேற்கொள்ளும்போது, அப்பெண்ணின் பெயர் ரேகா (அனஸ்வரா ராஜன்) என்று சொல்கிறார். நாயகி ஆகும் ஆசையில் வந்த அவரைத் தான் ‘காதோடு காதோரம்’ எனும் படத்தில் நடிக்க வைத்ததாகக் கூறுகிறார்.

முதல்நாள் பாடல் படப்பிடிப்பு ரத்தான நிலையில், அடுத்த நாள் அப்பெண் வராத காரணத்தால் மீண்டும் அது ரத்து செய்யப்பட்டதாலேயே அந்த புகாரைத் தான் அளித்ததாகச் சொல்கிறார் சந்திரப்பன்.

ஒரு திரைப்படத்தில் ஒரு ஷாட்டில் வந்து போயிருக்கிறார் அப்பெண் எனும் தகவல், அடுத்த படி நோக்கி அவ்வழக்கை நகர்த்துகிறது. மெதுவாக, உயிரிழந்தவர் ரேகாதான் என்பதை அறிகிறார் விவேக். ஆனாலும், சில அரசியல்வாதிகளின் அழுத்தம் காரணமாக அவ்வழக்கு முடக்கப்படுகிறது.

ராஜேந்திரன் தனது மரண வாக்குமூலத்தில் குறிப்பிட்ட தொழிலதிபர் வர்கீஸே அதற்குக் காரணம் என்று உணர்கிறார் விவேக். ஆனால், அதனை நீதிமன்றத்தில் ஆதாரத்தோடு நிரூபித்தால் மட்டுமே கொலையான ரேகா எனும் பெண்ணுக்கு நீதி கிடைக்கும்.

வழக்கில் இருந்து வெகுதூரம் விலக்கி வைக்கப்பட்டாலும், இருக்கும் ஓரிரு சாட்சியங்களும் அழிக்கப்பட்டாலும், தொடர்ந்து தனது விசாரணையை மேற்கொண்டு வருகிறார் விவேக். இறுதியாக, ரேகாவின் உயிரிழப்பில் வர்கீஸின் பங்கை அறிந்தாரா? அவ்வழக்கில் அவரது குற்றத்தை உலகம் அறியச் செய்தாரா என்று சொல்கிறது இப்படத்தின் மீதி.

மலையாள சினிமா ரசிகர்கள் நன்கறிந்த ‘காதோடு காதோரம்’ திரைப்படத்தையும், அதில் இடம்பெற்ற ‘தேவதூதர் பாடி’ பாடலையும் அதற்கான அஸ்திவாரமாகப் பயன்படுத்தியிருப்பதுவே இப்படத்தின் யுஎஸ்பி.

அதிலும், காலம் கடந்து நிகழும் குற்ற விசாரணையாக இப்படத்தின் திரைக்கதை வடிவமைக்கப்பட்டிருப்பது அருமை.

சமகாலத்தில் நிகழும் கொலையையும் அது தொடர்பான விசாரணையையும் சொல்கிற கதைகளுக்கு நேர்த்தியாகத் திரைக்கதை ஆக்க முடியாமல் சிலர் திணறிவரும் சூழலில், இப்படத்தில் ஒரு பிரேம் கூட போரடிக்காமல் இருப்பது நிச்சயம் ஆச்சர்யம் தான்.

’ரெட்ரோ’ எபெக்ட்!

சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு கதை நிகழ்வதாகக் காட்டுவதும், அப்போதிருந்த மனிதர்கள், சூழலைக் கண்டு மகிழ்வதும் ‘ரெட்ரோ’ திரைக்கதைகளின் விளைவுகள். அதனை மக்கள் கொண்டாடுவார்கள் என்று நம்பிக் களமிறங்கியிருக்கிறார் இயக்குனர் ஜோஃபின் டி.சாக்கோ.

அவரது நம்பிக்கையைக் காக்கும்விதமாக அப்பு பிரபாகரின் ஒளிப்பதிவு, ஷமீர் முகம்மதுவின் படத்தொகுப்பு, ஷாஜி நடுவிலின் தயாரிப்பு வடிவமைப்பு, முஜீப் மஜீத்தின் பின்னணி இசை ஆகிய நுட்பங்கள் ஒன்றிணைந்து நல்லதொரு காட்சியாக்கத்தைத் திரையில் காணச் செய்திருக்கின்றன.

இது போக ஆடை வடிவமைப்பு, ஒலி வடிவமைப்பு, ஒப்பனை, டிஐ, விஎஃப்எக்ஸ் உட்படப் பல நுட்பங்களில் கலைஞர்களின் பங்களிப்பு சிறப்பாக இருக்கிறது.

ராமு சுனில் ஆக்கிய இதன் கதைக்கு, அவரும் ஜான் மந்திரிகலும் இணைந்து திரைக்கதையாக்கம் செய்திருக்கின்றனர்.

யார் கொலையாளி என்பதிலோ அல்லது இளம்பெண் கொலையில் எவர் சம்பந்தப்பட்டிருக்கின்றனர் என்பதிலோ இப்படம் கவனம் செலுத்தவில்லை. மாறாக, அக்குற்றம் எப்படி நிகழ்ந்தது என்றும், கொலையான இளம்பெண் யார் என்றும் சொல்ல முயன்றிருக்கிறது இதன் திரைக்கதை.

அதனை நன்கு பிரபலமான ஒரு திரைப்படத்தின் பின்னணியில் சொல்ல முயன்றது, இப்படத்திற்கு ‘கிளாசிக்’ அந்தஸ்தை தருகிறது. திரையரங்குகளில் வெளியாகி மக்களிடம் வரவேற்பைப் பெற்று வசூலில் முந்திவரும் ‘ரேகாசித்ரம்’, விரைவில் ஓடிடியில் வெளியாகி உலகளவில் வரவேற்பைப் பெறக்கூடும். அதற்கான உள்ளடக்கம் இதில் உள்ளது என்று தாராளமாகச் சொல்லலாம்.

’நாயகன் ஆசிஃப் அலியின் நடிப்பு சூப்பர்’ என்றோ, ’அனஸ்வரா ராஜன் அருமையாகத் திரையில் தோன்றியிருக்கிறார்’ என்றோ குறிப்பிட்டு, இதில் இடம்பெற்ற இதர நடிப்புக்கலைஞர்களின் பங்களிப்பைப் புறந்தள்ளிவிட முடியாது. அந்தளவுக்கு ஒரு ஷாட்டில் நடித்தவர்கள் கூடச் சிறப்பாக இடம்பெறுகிற வகையில் இப்படம் ஆக்கப்பட்டிருக்கிறது.

மனோஜ் கே.ஜெயன், ஹரிஸ்ரீ அசோகன், சாய்குமார், சித்திக், இந்த்ரன்ஸ், சலீமா, டி.ஜி.ரவி, ஜெகதீஷ் போன்ற சீனியர் கலைஞர்களோடு உன்னி லாலு, ஜரீன் ஷிஹாப், நிஷாந்த் சாகர், பாமா அருண், மேகா தாமஸ், ஸ்ரீகாந்த் முரளி, ப்ரியங்கா, நந்து, சுதி கோப்பா, ஸ்ரீஜித் ரவி உள்ளிட்ட இந்நாள் கலைஞர்கள் பலர் இதில் நடித்துள்ளனர்.

குறிப்பாக ஸ்ரீஜித் ரவி, நந்து, சுதி போன்றவர்கள் ஒரு காட்சிக்கு வந்து சென்றிருக்கின்றனர். இவர்கள் அனைவரும், கிட்டத்தட்ட நாயகன் நாயகிக்கு இணையாகப் பல காட்சிகளில் இடம்பெறும் வகையிலான பாத்திரங்களில் நடித்து வருபவர்கள்.

அவ்வளவு ஏன், இதில் ஜெகதீஷ் கௌரவ வேடத்தில் வந்து போயிருக்கிறார். நடிகர் ஜெகதீஷ் ஆகவே இக்கதையில் வெளிப்பட்டிருக்கிறார். மம்முட்டியின் இருப்பு இதில் ஏஐ நுட்பத்துடன் ஆக்கப்பட்டிருக்கிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு, இதே திரைக்கதையில் மம்முட்டியை நடிக்க வைக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர் ஜோஃபின். அதற்கு மம்முட்டியும் சம்மதித்திருக்கிறார்.

பிற்பாடு ஏஐ நுட்பத்தால் அக்கற்பனையைச் சாத்தியப்படுத்த முடியும் என்பதால், அவரது இருப்பைத் தவிர்த்தாராம்.

இது போன்ற பங்களிப்பைத் தமிழ் திரையுலகம் எப்போது பெறும் என்ற எண்ணம் நம் மனதில் எழாமல் இல்லை.

அதாவது, முன்னணி வேடத்தில் நடிக்கும் ஒருவரே இன்னொரு திரைப்படத்தில் ஒரு காட்சியில் வந்து போவதற்குத் தயக்கம் காட்டாமல் இருக்க வேண்டும்.

தமிழில் ஆர்யா போன்ற ஒரு சில நட்சத்திரங்கள் அவ்வப்போது அதனைச் சாதிக்கின்றனர். அது பரவலாகும் சூழல் கனிந்தால், தமிழிலும் ‘ரேகாசித்ரம்’ போன்ற அற்புதமான பரீட்சார்த்த முயற்சிகள் வெளியாகும். கமர்ஷியல் திரைப்படம் குறித்த குழப்பங்களோ, திணிப்புகளோ அற்ற உள்ளடக்கத்தைப் பெற்று, அவை பெருவெற்றியைச் சுவைக்கும் சூழல் உருவாகும்.

  • உதயசங்கரன் பாடகலிங்கம்
You might also like