மெட்ராஸ்காரன் – கதை சொல்லல் ‘செறிவாக’ இருக்கிறதா?

சில திரைப்படங்களின் உள்ளடக்கம் ‘வாவ்’ ரகத்தில் இருக்கும். ஆனால், அப்படங்கள் வெளியான காலகட்டத்தில் சில காரணங்களால் கவனிப்பைப் பெறத் தவறியிருக்கும். அப்படியொரு திரைப்படமாக நம் கண்களில் தெரிந்தது ‘ரங்கோலி’.

இயக்குனர் வாலி மோகன்தாஸ் அதனை உருவாக்கியிருந்த விதம் பெருங்கொண்டாட்டத்தை விதைக்காவிட்டாலும், சராசரிக்கு அப்பாற்பட்டதாகவே தெரிந்தது. ‘அடுத்த படத்திலாவது இந்த இயக்குனர் நல்லதொரு கவனிப்பைப் பெற வேண்டுமே’ என்ற எண்ணத்தை விதைத்தது.

அதே இயக்குனர் இரண்டாவதாக இயக்கியிருக்கும் திரைப்படமே ‘மெட்ராஸ்காரன்’. இஷ்க், பூதகாலம், வேலா, லிட்டில் ஹார்ட்ஸ் என்று வித்தியாசமான கமர்ஷியல் படங்களை மலையாளத்தில் தந்துவரும் ஷேன் நிகம் இதில் நாயகனாக நடித்திருக்கிறார். அவருக்கு இணையான பாத்திரத்தில் கலையரசன் இதில் தலைகாட்டியிருக்கிறார்.

எப்படிப்பட்ட திரையனுபவத்தை நமக்குத் தருகிறது இந்த ‘மெட்ராஸ்காரன்’?

நூல் பிடித்தாற் போல கதை!

ஒரு நாளில் நிகழும் ஒரேயொரு சம்பவம், ஒரு சாதாரண இளைஞனின் வாழ்வைப் புரட்டிப் போடுகிறது என்பதே ‘மெட்ராஸ்காரன்’ படத்தின் ஒருவரிக் கதை.

அதற்கேற்றாற்போல, சத்யமூர்த்தி (ஷேன் நிகம்) எனும் இளைஞரின் திருமண நிகழ்வினைக் காட்டுவதில் தொடங்குகிறது இப்படத்தின் திரைக்கதை.

கஷ்டப்பட்டு பின்னர் முன்னுக்கு வந்த குடும்பம் என்பது, உறவினர்களின் பேச்சிலேயே தெரிய வருகிறது. அதேநேரத்தில், இந்த காதல் திருமணத்தில் மணப்பெண் மீராவின் (நிகாரிகா கொனிடலா) தந்தைக்கு (ராஜாராணி பாண்டியன்) இஷ்டமில்லை என்பதும் தெரிய வருகிறது.

ஆனால், சத்யாவின் பெற்றோரோ (பாண்டியராஜன், கீதா கைலாசம்) இதனைத் தங்கள் வாழ்நாள் கனவு நனவாகும் தருணமாகக் காண்கின்றனர்.

இந்த நிலையில், சென்னையில் இருந்து வந்த மணமகளைப் பார்க்க காரை எடுத்துக்கொண்டு தனியாகச் செல்கிறார் மணமகன் சத்யா. போகும் வழியில் ஒரு விபத்து நேரிடுகிறது.
கர்ப்பிணிப் பெண் மீது அவரது கார் மோதியதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.

சத்யா குற்றவுணர்ச்சியில் கூனிக் குறுகுகிறார். அந்த நொடியில், அவரால் ‘அது உண்மையா, இல்லையா’ என்று கூட யோசிக்க முடிவதில்லை. அதனை மறுக்கவும் அவரது மனம் துணிவதில்லை.

மருத்துவமனைக்கு வரும் அப்பெண்ணின் சகோதரர், சத்யாவின் மீது கொலை வெறியை வெளிக்காட்டுகிறார். கணவரோ சாந்தமான எரிமலையாகக் காட்சியளிக்கிறார்.
அப்பெண்ணின் (ஐஸ்வர்யா தத்தா) கணவர் பெயர் துரைசிங்கம் (கலையரசன்). அந்த விபத்து நிகழ்வதற்குச் சில நிமிடங்களுக்கு முன்னதாகத்தான், அவருக்கும் சத்யாவுக்கும் இடையே ஒரு மோதல் ஏற்பட்டிருக்கிறது.

ஆனால், அந்த நிகழ்வுக்கும் அந்த விபத்துக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை.

அந்த கர்ப்பிணியும் அவரது வயிற்றில் வளரும் குழந்தையும் உயிர் பிழைத்தார்களா? சத்யாவின் திருமணம் என்னவானது என்று நீட்டி முழக்கிச் சொல்கிறது ‘மெட்ராஸ்காரன்’ படத்தின் மீதி.

மிகச்சிறிய கதையொன்றை எடுத்துக்கொண்டு, அதனை நூல் பிடித்தாற்போலத் திரையில் சொல்கிறது ‘மெட்ராஸ்காரன்’.

திருமண நாளுக்கு முன்னதாகத் தனியாக மணமகனோ, மணமகளோ வெளியில் செல்லக்கூடாது என்று நம்மூரில் சொல்லப்படுவதுண்டு. ‘கண் திருஷ்டி உட்பட எதனாலும் எந்தப் பாதிப்பும் வந்துவிடக்கூடாது’ என்பதே அதன் பின்னிருக்கும் காரணம்.

கிட்டத்தட்ட அந்த நம்பிக்கையை மையப்படுத்திய கதை என்றபோதும், அதனைத் திரையில் வலுவுடன் காட்டத் தவறியிருக்கிறது ‘மெட்ராஸ்காரன்’.

நாயகனின் கார் முன்னே அந்த கர்ப்பிணிப் பெண் வந்தது எப்படி என்பதைப் பல திருப்பங்களுடன் சொல்ல முயற்சித்து, அதில் தோல்வியுற்றிருக்கிறது. அதுவே, இரண்டாம் பாதியில் நாம் சோர்வை எதிர்கொள்ளக் காரணமாகிறது.

’மிஸ்’ ஆனது என்ன?

தமிழில் அறிமுகமாக ஏற்றதொரு கதையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் ஷேன் நிகம். பலவித உணர்வுகளை வெளிக்காட்டுவதற்கான வாய்ப்பு. ஆனால், தமிழை டப்பிங்கில் சரியாக உச்சரிக்காமல் நம்மை ஏமாற்றியிருக்கிறார். அதில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்.

இரண்டாவது நாயகனாகவே வந்து போன கலையரசனுக்கு இதில் நாயகனுக்கு இணையான பாத்திரம். இயக்குனர் அதன் குணாதிசயங்களைச் சரியாக வடிவமைக்காமல் போனதால், அவருக்கான முக்கியத்துவம் சரியாகக் கிடைக்காமல் போயிருக்கிறது.

நாயகிகள் திவ்யா தத்தா, நிகாரிகா இருவருமே மிகச்சில காட்சிகளில் தோன்றியிருக்கின்றனர். அந்த இடங்களில் அவர்களது நடிப்பு ‘ஓகே’ எனுமளவில் உள்ளது.

சீரியசான இந்தக் கதையில் கருணாஸ், அவரது மனைவியாக வருபவர், சகோதரியாக வரும் மீரா கைலாசம், தீபா சங்கர் மற்றும் நாயகனின் உறவினர்களாக வரும் பெண்களே கொஞ்சமாய் கலகலப்பூட்டுகின்றனர்.

ராஜா ராணி பாண்டியன் அளவுக்குக் கூட, திரைக்கதையில் பாண்டியராஜனுக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை.

இப்படத்தில் வில்லன் பாத்திரம் சிறப்புற வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், யாரை முதன்மை வில்லனாகக் காட்டுவது என்று குழம்பியிருக்கிறார் இயக்குனர்.

அதனால் சூப்பர் சூப்பராயன், அவரது மகன்களாக வருபவர்கள், கலையரசனின் மச்சானாக வருபவர் என்று எவருக்கும் அந்த இடம் கிடைக்காமல் போயிருக்கிறது.

நாயகனின் நண்பர்களாக வரும் லல்லு உள்ளிட்ட மூவருக்குக் காட்சிகள் இருக்கின்றன. ஆனால், அவை நம் மனதில் பதியும் வகையில் அமையவில்லை.

கலை இயக்குனர் ஆனந்த் மணி, ஒளிப்பதிவாளர் பிரசன்னா குமார், படத்தொகுப்பாளர் வசந்தகுமார், இசையமைப்பாளர் சாம் சி.எஸ். என்று சிறப்பானதொரு தொழில்நுட்பக் குழு இதில் பங்கேற்றிருக்கிறது.

தை தக்க கல்யாணம், என் சாமி பாடல்கள் சட்டென்று நம் மனதைத் தொடுகின்றன. பின்னணி இசையைப் பொறுத்தவரை, காட்சிகளின் தாக்கத்தை அதிகப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகித்திருக்கிறார் சாம்.

இப்படத்தின் டிஐ, கதை உருவாக்க வேண்டிய ‘மூடை’ மிகச்சரியாக நமக்குக் கடத்துகிறது.

இப்படிப் பல சிறப்பம்சங்கள் இதில் இருக்கின்றன. ஆனாலும், இப்படம் நம் மனதோடு ஒட்டாமல் போவதற்கான ஒரே காரணமாக இருக்கிறது இரண்டாம் பாதி காட்சிகள்.
’த்ரில்’ உணர்வை ஊட்டுவதற்கேற்பச் சில திருப்பங்கள் அதிலிருந்தாலும், அவை எதுவும் போதுமானதாக இல்லை என்பதே உண்மை.

அந்த இடத்தை மட்டும் செப்பனிட்டிருந்தால், ‘மெட்ராஸ்காரன்’ படத்தின் வீரியம் பல மடங்கு அதிகரித்திருக்கும்.

’இந்த படத்தில் மிஸ் ஆனது என்ன’ என்று யோசித்தால், நமக்குப் பல விஷயங்கள் பிடிபடுகின்றன.

‘திருமணத்திற்கு முன்பான சில நாட்களில் மணமகனோ, மணமகளோ வெளியிடங்களுக்குச் செல்லக்கூடாது’ என்ற நம்பிக்கை பரவலாகத் தமிழ்நாட்டில் உண்டு. இத்திரைக்கதையில் மணமகனின் தாய் அதனைப் பலமாகக் கொண்டிருக்கிறார். ஆனால், அது திரைக்கதையில் அடிக்கோடிட்டுக் காட்டப்படவில்லை.

குற்றவுணர்ச்சியில் ததும்பும் நாயகனின் மனம் தான் இக்கதையின் பிரதானம். இரண்டாம் பாதியிலும் கூட, தன் எதிரிலிருப்பவர்களின் செயல்பாடுகளைக் கொண்டு அவர்களது மனங்களை அவர் எடை போடுவதாகக் காட்சிகள் இருக்கின்றன. ஆனால், அந்த உத்தி சிறப்புறத் திரைக்கதையில் காட்டப்படவில்லை.

ஒரு மனிதரிடம் உள்ள எதிர்மறைக் குணங்கள், நல்ல அம்சங்களைக் காணாமல் ஆக்கி, அவரைப் போலிருப்பவர்களுடன் மோத செய்து, அவரது வாழ்வையே சின்னாபின்னமாக்குகிறது.

இந்த விஷயமும் இக்கதையில் மறைந்து நிற்கிறது. இதுவும் படத்தில் சரிவரச் சொல்லப்படவில்லை.

இப்படி நம்மைக் காரணங்கள் தேட வைத்த இயக்குனர், அவற்றைச் சரிவரத் திரையில் சொல்லியிருந்தால் ‘செறிவான உள்ளடக்கம்’ மிகுந்த கதையாக ‘மெட்ராஸ்காரன்’னை மாற்றியிருக்கலாம். அது நடவாமல் போனதில், அவரை விட அதிக ஏமாற்றம் ரசிகர்களுக்குத்தான்..!

-உதயசங்கரன் பாடகலிங்கம்

You might also like