கடந்த மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தான் போட்டியிட்ட சிதம்பரம், விழுப்புரம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் வெற்றிபெற்றது.
விசிக தலைவரான முனைவர் தொல்.திருமாவளவன், சிதம்பரம் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். விசிக பொதுச்செயலாளரான முனைவர் துரை.ரவிக்குமார் விழுப்புரம் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். இதேபோல், விசிகவுக்கு நான்கு எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.
இந்த நிலையில், தேர்தல் ஆணையத்தின் சட்ட விதிகளின்படி, இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட கட்சியை மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கும் விதிகளின்படி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை மாநிலக் கட்சியாக இந்தியத் தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அங்கீகரித்துள்ளது.
இதேபோல், கட்சியின் தேர்தல் சின்னமாக பானை சின்னத்தை அங்கீகரிக்க வேண்டும் என்ற விசிகவின் கோரிக்கையையும் தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது.
இதனிடையே, அதிகாரப்பூர்வமாக விசிக மாநிலக்கட்சியாக வலுப்பெற்றிருப்பதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
விசிக பொதுச் செயலாளரும் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் துரை.ரவிக்குமார் இது தொடர்பான நெகிழ்ச்சியான பதிவை சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
அதில், நாடாளுமன்றத் தேர்தலில் விசிக 2 மக்களவைத் தொகுதிகளில் வென்றதால் தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீடு ஆணை 1968, விதி 6A இன் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுவதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது என்றும்
தமிழ்நாட்டில், சுதந்திரத்துக்குப் பிறகான சுமார் 75 ஆண்டுகால தேர்தல் அரசியல் வரலாற்றில் தலித் ஒருவரால் துவக்கப்பட்ட அரசியல் கட்சியொன்று மாநிலக் கட்சியாக அங்கீகாரம் பெறுவது இதுவே முதல் முறை என்றும்
இந்தச் சாதனையை நிகழ்த்தியிருக்கும் தலைவர் எழுச்சித் தமிழர் அவர்களை வணங்கி மகிழ்கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல் சீமானின் நாம் தமிழர் கட்சியும் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. கடந்த மக்களவைத் தேர்தலில் 8.22 சதவீத வாக்குகளைப் பெற்றதால், நாம் தமிழர் கட்சிக்கு மாநில கட்சிக்கான அங்கீகாரம் கிடைத்துள்ளது.