தீபாவளி, பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகை நாட்களின்போது எப்படி தமிழ் பட வெளியீட்டுக்காக நம்மவர்கள் காத்திருப்பார்களோ, அதே போன்ற எதிர்பார்ப்பைப் பெருமளவில் கொண்டிருப்பவர்கள் தெலுங்கு ரசிகர்கள்.
ஆந்திரா, தெலங்கானா என்று இரு வேறு மாநிலங்களாகப் பிரிந்தபோதும், அவர்களிடையே சினிமா ரசனையில் மட்டும் இன்னும் பேதம் தோன்றவில்லை.
நமக்கு பொங்கல் வெளியீட்டுப் படங்கள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ, அதற்கிணையான வீச்சுடன் அங்கு ‘சங்கராந்தி’ பண்டிகையையொட்டி திரைப்படங்கள் வரிசைக் கட்டி நிற்கும்.
அந்த வகையில், வரும் நாட்களில் அங்கு ரசிகர்களை உற்சாகத்திலும் குதூகலத்திலும் பொங்க வைக்கக் காத்திருக்கின்றன சில திரைப்படங்கள். அவை என்னவென்று பார்க்கலாமா?!
கேம் சேஞ்சர்:
ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண், கியாரா அத்வானி, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி, சுனில், ஜெயராம், நவீன் சந்திரா, வெண்ணிலா கிஷோர் உட்படப் பலர் நடித்துள்ள இப்படத்தில் வில்லனாகத் தோன்றியிருக்கிறார் எஸ்.ஜே. சூர்யா.
இப்படத்திற்கு இசையமைத்திருப்பவர் ஏ.ஆர். ரஹ்மான். திருநாவுக்கரசு ஒளிப்பதிவையும் ஷமீர் முகம்மது மற்றும் ரூபன் இருவரும் படத்தொகுப்பையும் கையாண்டிருக்கின்றனர். இதன் மூலக்கதையை எழுதியவர் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.
‘இது ஷங்கர் பாணி படம்’ என்று சொல்லத்தக்க வகையில் பிரமாண்டமான உள்ளடக்கத்திற்கான ஒரு ‘ஷொட்டு’ ஆக இதன் ட்ரெய்லர் அமைந்திருந்தது.
அந்த பிரமிப்பு திரையில் கொஞ்சமும் மங்காமல் இருந்தாலே போதும், கேம் சேஞ்சர் மைல்கல் சாதனையாக அமையும்’ என்ற எதிர்பார்ப்பினை உண்டாக்கியிருந்தது.
கொத்துக்கொத்தாகத் திரையில் மனிதத் தலைகள் தெரிந்தபோதும், ‘ஐ யாம் அன்பிரிடிக்ட்டபிள்’ என்று சவால் விடுகிற ராம் சரணை மட்டுமே இப்படம் சுற்றிச் சுற்றி நகரும் என்பது நாம் அறிந்ததே.
போலவே முதல்வன், ஜெண்டில்மேன் என்று ஷங்கர் இயக்கிய முந்தைய டங்களின் சாயலோடு விஜயகாந்தின் தென்னவனையும் வல்லரசுவையும் ரமணாவையும் சேர்த்துப் பிணைந்தாற் போன்ற தோற்றமும் ட்ரெய்லரில் வெளிப்பட்டது.
தெலுங்கு பேசும் மக்களின் வாழ்க்கை, கலாசாரம் சார்ந்த கூறுகளைக் கொண்டிருந்தாலும், இது தமிழ் மற்றும் இந்தி, மலையாளம் மொழிகளிலும் ‘டப்’ செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது. வரும் 10ஆம் தேதியன்று இது ரிலீஸ் ஆகிறது.
டாகு மகராஜ்:
‘பகவந்த் கேசரி’ எனும் ப்ளாக்பஸ்டர் வெற்றிக்குப் பிறகு, பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியாகும் படம் இது.
என்னதான் காமெடி, ரொமான்ஸ், ட்ராமாவில் பாலய்யா ‘கதகளி’ ஆடினாலும், அவர் படங்களின் சிறப்பே ரத்தத்தில் தோய்த்தெடுக்கப்பட்ட சண்டைக்காட்சிகள் தான்.
இயக்குனர் அனில் ரவிபுடி அந்த பார்முலாவை அப்படியே ‘உல்டா’வாக மாற்றி, ‘பேமிலி ஆடியன்ஸ்’ஸை மனதில் வைத்து ‘கேசரி’ கிண்டியிருந்தார்.
அதில் வெகுவாக ‘இன்ஸ்பையர்’ ஆன இயக்குனர் பாபி கொல்லி, இப்போது அதே ‘ஆக்ஷன் காமெடி’ வகைமையில் ‘டாகு மகராஜ்’ தரவிருக்கிறார்.
இப்படத்தின் ட்ரெய்லரை பார்த்தவுடன் விஜய் கார்த்திக் கண்ணனின் ஒளிப்பதிவும் அவினாஷ் கொல்லாவின் தயாரிப்பு வடிவமைப்பும் தமனின் இசையும் இப்படத்தின் யுஎஸ்பி என்று தெளிவாகத் தெரிந்தது.
அனைத்தையும் தாண்டி வெங்கட்டின் சண்டைக்காட்சி வடிவமைப்பு, ‘பழைய பாலய்யா பராக்’ என்று காட்டியது.
பாலகிருஷ்ணா கடந்த பத்தாண்டு காலத்தில் நடித்த பல படங்களில் ஆங்காங்கே காட்சிகளைப் பிய்த்தெடுத்து ஒன்று சேர்த்தாற்போன்ற தோற்றத்தைக் கொண்டிருந்தாலும், அந்த ‘விஷுவல்கள்’ இயக்குனர் பாபியைப் பாராட்டத் தூண்டியது.
பிரக்யா ஜெய்ஸ்வால், சாரதா ஸ்ரீநாத், ஊர்வசி ரவுதாலா, சாந்தினி சௌத்ரி என்று சில ஹீரோயின்களை கொண்டிருக்கும் இப்படத்தில் பாபி தியோல், ஷைன் டாம் சாக்கோ, சச்சின் கடேகர், ராவ் ரமேஷ், தீக்ஷா பந்த், பூசணி கிருஷ்ண முரளியோடு நம்மூர் விடிவி கணேஷ், மாகரந்த் தேஷ்பாண்டே போன்றவர்களும் தலைகாட்டியிருக்கின்றனர்.
’ட்ரெய்லரில் கிடைத்த கூஸ்பம்ஸ் மொமண்ட்களில் சரிபாதி அளவு தியேட்டரில் காணக் கிடைத்தாலும் இப்படம் வெற்றி’ என்கிற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது ‘டாகு மகராஜ்’.
இப்படம் ஜனவரி 12ஆம் தேதியன்று வெளியாகிறது.
சங்கராந்திக்கு வஸ்துனாம்:
‘பொங்கலுக்கு வர்றோம்’ என்ற டைட்டில் உடன் ‘பொங்கல் வெளியீடாக’ ஒரு திரைப்படம் வந்தால் எப்படியிருக்கும்? கொண்டாட்ட மனநிலையைத் திரையரங்குகளில் உருவாக்கும் உத்தரவாதத்தைக் கொண்டிருந்தால் மட்டுமே, அப்படியொரு டைட்டிலை அமைக்க முடியும்.
‘அதுக்கு ஏத்த மாதிரி இந்த படத்துல பாட்டு இருக்கு, பைட்டு இருக்கு’ என்று களமிறங்கியிருக்கிறது இப்படக் குழு.
தெலுங்கில் கடந்த முப்பதாண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கும் வெங்கடேஷ் நாயகனாக நடித்த இப்படத்தில் மீனாட்சி சவுத்ரி, ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரும் நாயகிகளாக இடம்பெற்றுள்ளனர்.
ஒருவர் நாயகனின் முன்னாள் காதலியாகவும், இன்னொருவர் மனைவியாகவும் நடித்திருக்கின்றனர். அவர்களது ஆடை வடிவமைப்பைப் பார்த்தாலே, அந்தப் பாத்திரங்கள் என்னவென்று புரிந்துவிடும்.
இது போக, இந்தப் படத்தில் விடிவி கணேஷ், ஆனந்த ராஜ் உடன் உபேந்திர லிமாயே, சாய்குமார், நரேஷ், ராஜேந்திர பிரசாத், ஸ்ரீனிவாஸ் அவசரலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர் சமீர் ரெட்டி, படத்தொகுப்பாளர் தம்மிராஜு உடன் இசையமைப்பாளர் பீம்ஸ் சிசிரோலியோவும் இணைந்து நகைச்சுவைக்கு முக்கியத்துவம் தரும் ஒரு ஆக்ஷன் படம் பார்த்த திருப்தியை ஏற்படுத்த முயற்சித்திருக்கின்றனர்.
இதனை இயக்கியிருப்பவர் ‘பகவந்த் கேசரி’ தந்த அனில் ரவிபுடி. வெங்கடேஷை நாயகனாகக் கொண்டு ‘ஃபன் அண்ட் ப்ரஸ்ட்ரேஷன்’ இரண்டு பாகங்களைக் கொடுத்தவர். இம்முறை இக்கூட்டணி ஹாட்ரிக் அடிக்கும் என்று நம்பலாம்.
வெற்றி யாருக்கு?
மூன்று படங்களும் இரண்டு நாட்கள் இடைவெளியில் திரைக்கு வரவிருக்கின்றன. அதனால், தியேட்டர்களில் வெளியிடுவதில் பெரிதாகப் பிரச்சனைகள் எழாத வண்ணம் தொடக்க நாளன்று காட்சிகள் கிடைக்கும்.
தந்தை சரி செய்ய நினைத்த சமூக அரசியல் பிரச்சனையொன்றுக்கு மகன் தீர்வு காண்பதாகச் சொல்கிறது ‘கேம் சேஞ்சர்’.
பாலய்யாவின் ‘டாகு மகராஜ்’ படமோ, பயமுறுத்தும் கொள்ளையன் ஒருவரின் அறியப்படாத பக்கமொன்றைச் சொல்வதாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
வெங்கடேஷின் ‘சங்கராந்திக்கு வஸ்துனாம்’ படமோ, ஒரு கடத்தல் வழக்கில் துப்பு துலக்குவதில் தனது முன்னாள் காதலனின் உதவியை ஒரு பெண் அதிகாரி பெற முயற்சிப்பதை விவரிக்கிறது.
அப்போது, ‘இந்த ஆபரேஷன்ல நானும் இருப்பேன்’ என்று அந்த அதிகாரியின் மனைவியும் களத்தில் இறங்க, அதன்பின் என்னவானது என்று போகிறதாம் கதை.
மூன்று படங்களிலுமே ‘ஆக்ஷனுக்கு’ நிறைய இடம் இருக்கிறது. மற்றபடி தெலுங்கு ரசிகர்கள் விரும்புகிற காமெடி, ரொமான்ஸ், ட்ராமா இத்யாதிக்கு எவ்வளவு இடம் தரப்படுகிறதோ, அது எந்தளவுக்கு அவர்களை வசீகரிக்கிறதோ, அதற்கேற்றாற்போல ‘பாக்ஸ் ஆபீஸ்’ வெற்றிகள் அமையும்.
மூன்றில் ‘கேம் சேஞ்சர்’ தமிழ் பதிப்பு நம் பார்வைக்கு வரவிருக்கிறது. மற்ற இரு படங்களும் ஓடிடி வெளியீட்டுக்கு முன்னதாகவே, தமிழிலும் ‘டப்’ செய்யப்பட்டு வெளியிடப்படலாம் என்ற நம்பிக்கையைத் தருகின்றன. வெற்றி யாருக்கு என்பது அடுத்த வாரம் இந்நேரம் தெரிந்துவிடும்..!
– மாபா
#சங்கராந்தி_தெலுங்குப்_படங்கள் #Sankranti_Telugu_movie #கேம்_சேஞ்சர் #Game_changer #டாகு_மகராஜ் #Daaku_maharaj #சங்கராந்திக்கு_வஸ்துனாம் #Sankranthiki_vasthunam