‘வள்ளி’ படம் எடுத்து, 1945-ல் ரிலீஸ் செய்தேன். பாரகன் தியேட்டருக்கு வந்து படத்தைப் பார்த்தார் எஸ்.எஸ்.வாசன். வாயார, மனமார பாராட்டினார்.
அப்போது என்னிடம் வசதி கிடையாது. மிகச்சிறிய கொட்டகையில் ஸ்டூடியோ நடத்தினேன். மிக எளிய ஆரம்பம். எவ்வளவோ இடர்பாடுகள். எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு, நான் டைரக்ட் செய்த அந்தப் படத்தை வெளியிட்டேன்.
வாசன் பாராட்டியபோது, நான் பட்ட சிரமங்களையும், என் ஸ்டூடியோவின் நிலையையும் சொன்னேன்.
அதற்கு அவர், “மெய்யப்பன், நாம் எப்படிப்பட்ட படம் எடுக்கிறோம், எந்தச் சூழ்நிலையில் நமது ஸ்டூடியோ இருக்கிறது என்பது பற்றி ஜனங்களுக்கு அக்கறை இல்லை. நாம் என்ன கொடுக்கிறோம் என்பதுதான் முக்கியம்.
உங்களுக்கு இருக்கும் இந்தச் சொற்ப வசதியில், நினைத்துக்கூடப் பார்க்கமுடியாத அளவுக்கு மிகப் பிரமாதமான காரியம் செய்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள்” என்றார்.
அதேபோல் ‘நாம் இருவர்’ படத்தைப் பார்த்துவிட்டு, “படம் பார்த்தேன். அப்படியே பிரமித்துவிட்டேன்” என்று கடிதம் எழுதினார்.
சிறப்பு எங்கு இருந்தாலும், தாமாக முன் வந்து பாராட்டும் உயரிய குணம் எஸ்.எஸ்.வாசனிடம் உண்டு.
தமிழ்நாட்டுக்குள் கட்டுப்பட்டு இருந்த நாங்கள், இன்று அகில இந்திய ரீதியில் படங்கள் எடுக்கிறோம் என்றால், அது வாசன் காட்டிய வழிதான்.
அவரின் ‘சந்திரலேகா’தான் இந்திப் படம் எடுக்கும் துணிவை எனக்குத் தந்தது. அவருடைய துணிவுதான் எனக்குத் துணை நின்றது. ‘நன்கு சிந்தித்துச் செயல்படுதல்’ என்பதுதான் எனக்கு வாசன் காட்டிய வழி!”
– நன்றி: ஆனந்த விகடன்