தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வியை மேம்படுத்த வேண்டும்!

நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் துரை.ரவிகுமார் வலியுறுத்தல்

தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வியை மேம்படுத்த வேண்டும் என, விசிக பொதுச் செயலாளரும் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் துரை.ரவிகுமார் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேசுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், ஒன்றிய அரசின் கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பள்ளிக்கல்வி மற்றும் படிப்பறிவுத் துறையின் சார்பில் 2023-24 ஆம் ஆண்டுக்கான அறிக்கை வெளியாகி உள்ளது என்றும் அதில், ஒப்பீட்டளவில் பள்ளிக் கல்வியில் தமிழ்நாடு அரசு சிறந்து விளங்குவது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அதோடு, பள்ளிக் கல்வியில் தற்போது முதலிடம் வகிக்கும் கேரளமா நிலத்தைத் தமிழ்நாடு விஞ்ச வேண்டும் என்றும் அதற்குப் பின்வரும் நடவடிக்கைகளைத் தாங்கள் மேற்கொள்ளவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

அதோடு, தமிழ்நாட்டில் ஒரு ஆசிரியர் மட்டுமே இருக்கும் பள்ளிகளின் எண்ணிக்கை 2758 உள்ளது என்றும் அந்தப் பள்ளிகளில் 80,586 மாணவர்கள் படிக்கின்றனர் எனத் தெரியவந்துள்ளது எனவும்

ஓர் ஆசிரியர் மட்டுமே ஒரு பள்ளியை நிர்வகிப்பது கல்வித் தரத்தைக் கடுமையாகப் பாதிக்கும் எனவும் அந்தப் பள்ளிகளில் படிக்கும் 80,586 மாணவர்களின் கல்வித் தரம் என்னவாக இருக்கும் என்பதை நாம் யூகிக்க முடிகிறது எனவும்

இந்தப் பள்ளிகளை உடனடியாகக் குறைந்தபட்சம் இரண்டு ஆசிரியர்கள் கொண்ட பள்ளிகளாக ஆக்க வேண்டும் எனவும் துரை.ரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், தமிழ்நாட்டில் ஆசிரியர்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளது எனவும் இதனால் ஆசிரியர் மாணவர் விகிதம் 24 ஆக இருக்கிறது. தேசிய சராசரியான 25க்கு இது குறைவு என்றாலும் பல மாநிலங்களை ஒப்பிடும்போது இது அதிகமாக இருக்கிறது எனவும்

அது மட்டுமின்றி சராசரியாக ஒரு பள்ளிக்கு 9 ஆசிரியர்கள் மட்டுமே தமிழ்நாட்டில் உள்ளனர் என்றும் அந்த எண்ணிக்கை பல மாநிலங்களில் 20க்கும் அதிகமாக உள்ளது. அதுபோலவே சராசரியாக மாணவர் சேர்க்கை ஒரு பள்ளிக்கு 221 எனத் தமிழ்நாட்டில் உள்ளது என்றும் அது பல மாநிலங்களில் அதிகமாக இருக்கிறது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழகத்தில், ஒரு மாணவர் கூட சேராத பள்ளிகள் 496 உள்ளன என்றூம் அந்தப் பள்ளிகளில் 889 ஆசிரியர்கள் பணி புரிவதாகத் தெரியவந்துள்ளது என்றும் இந்த கவலைக்குரிய நிலை மாற்றப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ள துரை.ரவிக்குமார்,

தமிழ்நாட்டில் தற்போது ஆரம்பக் கல்வியிலும், இடைநிலைக் கல்வியிலும் இடைநிற்றல் முற்றாக ஒழிக்கப்பட்டுள்ளது என்றும் ஆனால், உயர்நிலைப் படிப்பில் இடைநிற்றல் 5. 45% ஆக உள்ளது.

தேசிய சராசரியைவிட இது குறைவு தான் என்றாலும், அருகில் உள்ள கேரள மாநிலத்தில் உயர்நிலைப் படிப்பில் இடைநிற்றல் 2.18% ஆக மட்டுமே உள்ளது என்றும் கூறியுள்ளார்.

எஸ்சி, எஸ்டி மாணவர்கள் எட்டாம் வகுப்பில் அதிக எண்ணிக்கையில் படிப்பை நிறுத்துவதாகக் குறிப்பிட்டுள்ள ரவிக்குமார், உயர்நிலைப் படிப்பில் எஸ்சி மாணவர்களின் மொத்த சேர்க்கை விகிதம் 90.3 சதவிகிதம் என்றும்

அதில் ஆண்கள் 86.5, சதவிகிதம் பெண்கள் 94.3 சதவிகிதம் என்றும் அதே உயர்நிலை வகுப்புகளில் எஸ்டி மாணவர்களின் சேர்க்கை விகிதம் 89.1 ஆக உள்ளது என்றும்

எஸ்சி, எஸ்டி மாணவர்களில் சுமார் 10 சதவீதம் பேர் எட்டாம் வகுப்புடன் படிப்பை நிறுத்துகின்றனர் என்றும் அவர்களில் ஆண்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இடைநிற்றலுக்கும் குழந்தைத் தொழிலாளருக்கும் நேரடித் தொடர்பு உள்ளதாகக் கூறியுள்ள ரவிக்குமார், பள்ளிக் கல்வியில் இடைநிற்றலைத் தடுக்காமல் குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்க முடியாது.

இந்த உண்மையைக் கருத்தில்கொண்டு தமிழ்நாட்டில் இடைநிற்றல் முற்றிலும் இல்லாத நிலையைக் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

அதோடு, இந்திய மாநிலங்களில் மிகப்பெரிய நூலகங்களை உருவாக்கி சாதனை படைத்திருப்பவர் தமிழ்நாடு முதலமைச்சர் என்றும் ஆனால் பள்ளிகளில் உள்ள நூலகங்கள் ஒப்பீட்டளவில் புறக்கணிக்கப்பட்டவையாக உள்ளன.

தமிழ்நாட்டில் சராசரியாக ஒரு பள்ளிக்கு 406 புத்தகங்கள் நூலகங்களில் இருப்பதாகத் தெரிய வந்துள்ளது எனவும் இந்த எண்ணிக்கை அருகில் உள்ள கேரளாவில் 2,783 ஆகவும், டெல்லியில் 5,958 ஆகவும் உள்ளது என்றும் ரவிக்குமார் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் 99.94 % பள்ளிகளிலும், தனியார் பள்ளிகளில் 95.79% பள்ளிகளிலும் நூலகங்கள் உள்ளதாக ஒன்றிய அரசு வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.

ஆனால் அந்த நூலகங்களை மாணவர்கள் பெரும்பாலும் பயன்படுத்துவதில்லை என்பதை எனது நேரடி ஆய்வுகளில் கண்டேன்.

இந்த நிலை மாற்றப்பட வேண்டும் எனவும் அத்துடன் பள்ளி நூலகங்களில் நூல்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட வேண்டும்.

சென்னை புத்தகக் காட்சி நடைபெறும் இந்த நேரத்தில் அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முனைவர் துரை.ரவிக்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.

You might also like