தமிழ்நாட்டில் பள்ளிப் படிப்பை இடையில் விடும் மாணவர்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ”காலை உணவுத் திட்டம், திறன்மிகு வகுப்பறைகள் திட்டம், இல்லம் தேடி கல்வித் திட்டம், எண்ணும் எழுத்தும் திட்டம், வாசிப்புப் பழக்கத்தை வளர்க்கும் திட்டம் மாற்றுத் திறனாளி மாணவர்கள் மீது தனிக் கவனம் செலுத்தும் திட்டம் போன்ற திட்டங்களால் தமிழ்நாட்டில் பள்ளிப் படிப்பை இடையில் விடும் மாணவர்கள் இல்லாத நிலையை அடைந்துள்ளதாகவும்
பீகார், அசாம், ராஜஸ்தான், ஹரியானா ஆகிய மாநிலங்களில் பள்ளிப்படிப்பை இடையில் விடும் மாணவர்கள் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ளதாகவும் ஒன்றிய அரசின் கல்வி அமைச்சக ஆய்வில் தெரியவந்துள்ளது என்றும்
தமிழ்நாட்டில் பள்ளிப் படிப்பைத் தொடங்கிய 100 சிறுவர்களில் நடுநிலைப் பள்ளி முடிப்பை முடித்தவர்கள் 2019-ல் 99 பேர் என்பது 2024-ல் 100 பேர் என உயர்ந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதேபோல், நடுநிலைப் பள்ளி முடிப்பை முடித்தவர்களில் சிறுமியர் எண்ணிக்கை, 97.5-ல் இருந்து 100 ஆக அதிகரித்துள்ளதாகவும் இதனால் இடையில் படிப்பை விடுவோர் தமிழ்நாட்டில் இல்லை என்பது புலனாகியுள்ளது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்த மாணவர்கள், 2019-ல் 81.3 சதவிகிதமாக இருந்தது எனவும் இது, 2024-ல் 89.2 சதவிகிதமாக உயர்ந்துள்ளது எனவும்
மாணவிகளைப் பொறுத்தவரை 2019-ல் 89.4 சதவிகிதமாக இருந்தது எனவும் இது 2024-ல் 95.6 சதவிகிதமாக அதிகரித்து சாதனை படைக்கப்பட்டுள்ளது என்றும் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.