மழையில் நனைகிறேன் – அசத்தும் ஒளிப்பதிவு, பாடல்கள்!

’ரொமான்ஸ் படம்லாம் இப்போ உள்ளவங்க பார்க்குறாங்களா’ என்ற கேள்வியை இப்போது அதிகமும் கேட்க நேர்கிறது. ஆனால், அதே நபர்களே ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ போன்று ‘கிளாசிக்’ காதல் படங்கள் ‘ரிரிலீஸ்’ ஆகிறதா என்று இணையத்தில் தேடவும் செய்கின்றனர்.

இந்த முரண் ஏன் வருகிறது? இப்போதிருக்கும் வாழ்க்கைச்சூழலைப் பிரதிபலிக்கும் வகையில் காதல் படங்களை எந்த இயக்குனராலும் உருவாக்க முடியாதா அல்லது கௌதம் மேனன் போன்ற ஒரு சில இயக்குனர்களை மட்டும்தான் அந்த வகைமைக்கான உதாரணமாகச் சுட்டிக்காட்ட வேண்டுமா?

மேற்சொன்ன கேள்விகளுக்கான பதிலாகவே ‘மழையில் நனைகிறேன்’ படத்தைத் தந்திருக்கிறார் இயக்குநர் டி.சுரேஷ்குமார்.

ட்ரெய்லர், பாடல்கள் பார்த்தபோது, நல்லதொரு குழு இதில் பங்காற்றியதாகத் தோன்றியது.

படம் பார்த்தபிறகும், அதே எண்ணம் மீதமிருக்கிறதா?

அதே ‘காதல்’, அதே ‘கதை’!

காதல் படங்களில் நாயகனும் நாயகியும் எப்படி அறிமுகமாவார்கள்? இருவருக்குள்ளும் எப்போது காதல் பிறக்கும்? அதன்பிறகு அவர்களது வாழ்க்கை என்ன ஆகும்?

இந்தக் கேள்விக்கான பதில்களை வரிசையாக எழுதினால், வழக்கமான காதல் படமொன்றின் கதை மனதுக்குள் விரியும்.

கிட்டத்தட்ட அதே காதலை, அதே கதையைச் சொல்கிறது ‘மழையில் நனைகிறேன்’.

ஜீவா செபாஸ்டியன் எனும் இளைஞர் ஐஸ்வர்யா எனும் இளம்பெண்ணை விரும்புகிறார். அவரிடம் தனது காதலைத் தெரிவிக்கிறார். அப்பெண்ணோ, ‘எனக்கு விருப்பமில்லை’ என்று மறுத்துவிடுகிறார். அதன்பின்னும், அவர் பின்னாலேயே சுற்றுகிறார் ஜீவா.

ஒருகட்டத்தில், ‘உங்களுக்கு வேற வேலையே இல்லையா’ என்று ஐஸ்வர்யா அவமானப்படுத்தி விடுகிறார். அன்று முதல் அவர் பின்னால் சுற்றுவதை நிறுத்திவிடுகிறார் ஜீவா.

ஆனாலும், சந்தர்ப்ப சூழ்நிலையால் ஐஸ்வர்யாவின் தங்கையை ஜீவா சந்திக்க நேர்கிறது. அதன்பிறகு, நிலைமை மாறுகிறது.

ஐஸ்வர்யா மனதில் காதல் பூக்கிறது. ‘அமெரிக்கா சென்று எம்.எஸ். படிப்பதே கனவு’ என்று அதற்காக விசா கிடைக்கும் ஏற்பாடுகளை மேற்கொண்டுவரும் அவர், சட்டென்று அதிலிருந்து விலகி ஜீவாவே தன் வாழ்க்கை என்று எண்ண ஆரம்பிக்கிறார்.

அவரிடம் தனது காதலைத் தெரிவிக்க முடிவெடுக்கிறார். எப்போதும் மனதில் இருப்பதை வெளிப்படையாகச் சொல்ல முடியாமல் தவிக்கும் ஐஸ்வர்யா, அன்றும் அவ்வாறே இருக்கிறார்.

காதலைச் சொல்வதற்குப் பதிலாக, ’தன்னை ஒரு இடத்தில் ட்ராப் செய்ய வேண்டும்’ என்று உதவி கேட்பது போலப் பேசுகிறார். அதன் பின்னிருக்கும் அர்த்தத்தைப் புரிந்துகொள்ளும் ஜீவா, நண்பனிடம் பைக் வாங்கிக்கொண்டு வருகிறார். இருவரும் பைக்கில் பயணிக்கின்றனர்.

அந்தக் கணத்தில் தன் காதலை ஜீவாவுக்கு உணர்த்த முடிவெடுக்கிறார். சரியாக அதே நேரத்தில் அவர்கள் செல்லும் பைக் விபத்துக்குள்ளாகிறது.

அதன்பின் ஜீவா, ஐஸ்வர்யா என்ன ஆனார்கள்? அவர்கள் காதல் என்னவானது என்று சொல்கிறது இப்படத்தின் மீதி.

இதில் இருவருக்கும் திருமணமாகிக் குழந்தை பிறப்பதாகக் காட்சிகள் வருகின்றன. அந்தக் காட்சிகள் இருக்கும் நேர்த்தி முன்பாதியில் ‘மிஸ்ஸிங்’. அதுவே இப்படத்தின் மிகப்பெரிய மைனஸ்.

அதேநேரத்தில், பற்களை நறநறவென்று கடிக்கும் அளவுக்கு ‘மழையில் நனைகிறேன்’ நம்மைச் சோதிக்கவில்லை.

ஆக்கம் ‘ஓகே’தான்.. ஆனா..?!

இதில் ஜீவா பாத்திரத்தில் மலையாள நடிகர் அன்சன் பால் நடித்திருக்கிறார். தமிழில் சில படங்களில் சிறிய வேடங்களில் நடித்திருக்கிறார்.

ஆனாலும், இப்படத்தில் முழுநீளப் பாத்திரத்தைத் தயக்கம் ஏதுமின்றித் திரையில் வெளிப்படுத்தியிருக்கிறார்.

பின்பாதிக் காட்சிகளில் அவரது தோற்றம் அழகு.

நாயகி ரெபா மோனிகா ஜான், இதில் ஐஸ்வர்யாவாக வருகிறார். ஜருகண்டி, பிகில் படங்களில் பார்த்தபோதும், இதில் அவரது தோற்றம் சட்டென்று ஈர்க்கும் வகையில் இல்லை. அவரது ஒப்பனை ஏனோ துருத்தலாகத் தோன்றுகிறது.

இதில் அன்சனின் பெற்றோராக மேத்யூ வர்கீஸ், அனுபமா வந்து போகின்றனர். அவர்களது நடிப்பு அளவெடுத்தாற் போல உள்ளது.

ரெபாவின் தாயாக வரும் சுஜாதாவை விட, தந்தையாக வரும் ராஜாவுக்கு முக்கியத்துவம் அதிகம்.

இது போக ரெபாவின் உடன்பிறப்புகள், அன்சனின் நட்பு வட்டம் என்று சிலர் தலைகாட்டியிருக்கின்றனர்.

அவர்களில் கிஷோர் ராஜ்குமாரும் வெற்றிவேல் ராஜாவும் நம்மைப் புன்னகைக்க வைக்கின்றனர்.

ஒளிப்பதிவாளர் கல்யாண், அனைத்து பிரேம்களும் அழகியலுடன் வெளிப்பட வேண்டுமென்று மெனக்கெட்டிருக்கிறார்.

அவருக்கு ஏற்றாற் போல களங்களை அமைத்துக் கொடுத்திருக்கிறார் கலை இயக்குநர் என்.என்.மகேந்திரன்.

தயாரிப்பாளர்களில் ஒருவரான ஸ்ரீவித்யா ராஜேஷ் இதில் ஆடை வடிவமைப்பாளராகப் பணியாற்றியிருக்கிறார். நாயகனும் நாயகியும் பாடல் காட்சிகளில் அழகழகான ஆடைகளில் தோன்றியிருக்கின்றனர்.

இவையெல்லாம் ஒன்றுசேர்ந்தால் ‘திரையில் வண்ணமயம்’ நிறைய வேண்டும். ஆனால், அது நிகழவில்லை.

மேற்சொன்ன அனைத்தும் தனித்தனியாகச் சிறப்பாக இருந்தும், மூன்றும் ஒருங்கிணைந்து திரையை அலங்கரிக்கவில்லை. அதனால், ‘ஆக்கம் ஓகேதான்.. ஆனா..’ என்று இழுவையான ‘கமெண்ட்’ மனதில் பிறக்கிறது.

மிகச்சிறப்பாக ஆக்கப்பட்ட தெலுங்கு அல்லது இந்திப் படங்கள் பார்த்தால் இந்த வித்தியாசத்தை உணரலாம்.

தமிழில் தேர்ந்தெடுத்த சில வண்ணங்கள் மட்டுமே பளிச்சிடுமாறு ‘கிளாசிக்’ கமர்ஷியல் படங்களைச் சில இயக்குநர்கள் தந்திருக்கின்றனர். அவற்றிலும் இதே போன்ற ஒருங்கிணைப்பைக் காண முடியும்.

படத்தொகுப்பாளர் ஜி.பி.வெங்கடேஷ் முடிந்தவரை காட்சிகளை ‘ட்ரிம்’ செய்திருக்கிறார். வேண்டாத பாடல்களை ‘கட்’ செய்யவில்லை. அதையும் செய்திருக்கலாம்.

படத்தின் நீளத்தைத் தாராளமாகச் சுமார் அரை மணி நேரம் வரை கத்தரித்திருக்கலாம்.

டிஐ, நடனம், ஸ்டண்ட் ஆகியன படத்தை மேலும் அழகூட்டியிருக்கின்றன.

விஷ்ணு பிரசாத்தின் இசையில் பாடல்கள் ‘பட்டாசு’ ரகம். ’உன் காதல் பார்வை போதும்’, ’நாட்கள் அழகாய் மாறிப்போகுதே’, ’வேட்டை ஆடும் விழிகள்’, ‘காலம் இருக்கும் வரை’ ஆகியன நல்லதொரு தாக்கத்தைத் தருகின்றன.

பின்னணி இசை ‘ஆஹா’ என்றில்லாவிட்டாலும், தியேட்டரில் நம்மை இருக்கச் செய்கிறது.

உண்மையைச் சொன்னால், ‘மழையில் நனைகிறேன்’ படத்தின் போஸ்டர் வடிவமைப்பு முதல் பல அம்சங்கள் சிறப்பாக அமைந்திருக்கின்றன. அவற்றில் ஒளிப்பதிவும், பாடல்களுக்கான இசையும் அசத்தலாக இருக்கின்றன.

ஆனால், ’அது மட்டுமே படத்தின் யுஎஸ்பியாக இருக்க முடியாதே’ என்றெழும் ரசிகர்களின் குரலைக் கணிக்க மறந்திருக்கிறார் இயக்குநர் டி.சுரேஷ்குமார்.

’இன்றிருக்கும் தலைமுறையிலிருந்து பெரிதும் வேறுபட்டு, ஒரு ஆணும் பெண்ணும் காதல் புரிகின்றனர்’ என்று திரையில் காட்ட விரும்பியிருக்கிறார்.

’இதயம் முரளி மாதிரி ஒரு ஹீரோவா’ என்று 90’ஸ் கிட்ஸ் அலறும் அளவுக்கு இருக்கிறது இதன் கதை. அதையும் தாண்டி, சில காட்சிகள் சட்டென்று நம்மைக் கடந்து செல்கின்றன.

இந்தப் படத்தில் விஜி, கவின் பாண்டியன் வசனங்கள் சிரிக்க வைக்கின்றன. கடினமான தருணங்களைக் காட்டும் காட்சிகளில் மிக எளிமையான வார்த்தைகளால் அதனை விவரிக்கின்றன.

இப்படத்தின் ‘ஸ்கிரிப்ட்’ தமிழில் வந்த எந்தவொரு காதல் படத்திற்கும் குறைவில்லாதது. ஆனால், காட்சிகளை முத்தாய்ப்பாகவோ முடிக்கவோ, அவற்றின் தாக்கத்தை அதிகரிக்கச் செய்யவோ இயக்குநர் முயற்சிக்கவில்லை.

காட்சியாக்கம் இதில் சிறப்பாக இருந்தபோதும், திரையில் கதாபாத்திரங்கள் இருக்குமிடங்களை முடிவு செய்வதில் ஏதோ ஒன்று ‘மிஸ்’ ஆன உணர்வு எழுகிறது.

அதனால், ‘நல்லாத்தான் இருக்கு.. ஆனா கொஞ்சம் நல்லாயில்லையே’ என்ற நம்மை நாமே குழப்பும் சூழலுக்கு ஆளாக வேண்டியிருக்கிறது.

அதனைத் தவிர்த்திருந்தால், காதல் வகைமையில் குறிப்பிடத்தக்க தமிழ் படமாக ‘மழையில் நனைகிறேன்’ சேர்ந்திருக்கும்.

முழுமையாகத் தயார் செய்யப்பட்டு, கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் கழித்து வெளியாகியிருக்கிறது இப்படம்.

அதற்கான சுவடுகள் பெரும்பாலான பிரேம்களில் தெரியவில்லை. ‘அதுவே ஒரு வெற்றிதானே’ என்பவர்கள் இப்படத்தைப் பார்க்கலாம்..!

  • உதயசங்கரன் பாடகலிங்கம்
You might also like