தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியான ஆர்.நல்லகண்ணு அவர்களை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிரபல வார இதழுக்காக எடுத்த பேட்டி- மீண்டும் உங்கள் பார்வைக்கு:
***
“தோழர் ஆர்.என்.கே’’ – அன்போடு இப்படித்தான் அழைக்கிறார்கள் 100 வயதைத் தொட்டிருக்கிற மூத்த அரசியல்வாதியான ஆர்.நல்லகண்ணுவை.
இளமைக் காலத்திலேயே பொதுவுடமைக்கட்சி தான் வாழ்க்கை என்றான பிறகு பல தடவை கைதுகள். தலைமுறைவு வாழ்க்கை.
பிடிப்பட்டதும் அவர் மீது தாக்குதல்கள் நடந்திருக்கிறது. அப்படியொரு முறை நல்லகண்ணு பிடிபட்டுக் காவல்துறையால் சித்திரவதைக்கு ஆளானபோது நெருப்பால் பொசுக்கப்பட்டது இவருடைய மீசை.
வயதேறினாலும் சளைக்காமல் வெவ்வேறு கூட்டங்களுக்கு அலைந்து கொண்டிருக்கிறார். உரையாற்றிக் கொண்டிருக்கிறார் வெள்ளை வேட்டியும், துண்டுமான எளிமையுடன்.
அரசு ஒதுக்கிய எளிய வீட்டில் சந்தித்தபோது மெல்லிய புன்னகையுடன் இயல்பாகப் பேசினார்.
கி.ரா மொழியில் சொன்னால் பழுத்த சம்சாரியுடன் உரையாடிக் கொண்டிருந்த உணர்வு.
கட்சியைத் துவக்குவதற்கு முன்னர் கமல் சந்தித்தவர்களில் ஒருவர் நல்லகண்ணு.
அந்தச் சந்திப்பு பற்றித் துவங்கியது பேச்சு.
“கமல் என்னைச் சந்திப்பதற்கு முன்பே அவர் என்னைப் பற்றி எழுதியிருந்தார். அதைப் பற்றிச் சொன்னார். அவர் திரைக்கதை எழுதிய ‘ஹே ராம்’ புத்தகத்தை என்னிடம் கொடுத்தார்.
“ஏற்கனவே இந்தப்படம் பார்த்திருக்கேன்’’ என்று சொன்னேன்.
நான் சால்வையைப் போர்த்தினேன். அரசியலைப் பற்றி அவர் பேசவில்லை.’’
“மக்கள் நீதி மய்யம் – என்று கமல் துவக்கியிருக்கும் கட்சி, முதல் கூட்டம் அதில் அவருடைய பேச்சு – இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’’
“ஊழலை மையப்படுத்தியதாக மட்டுமே அவருடைய பேச்சு இருந்தது. பேச்சோடு கேள்வி-பதில் பகுதியையும் சேர்த்திருந்தது சற்றுப் புதுமை. வார்த்தை ஜாலங்கள் இல்லாமல் இயல்பாக இருந்தது அவருடைய பேச்சு. இருந்தாலும் ஆழமாக இன்னும் அவர் பல விஷயங்களைத் தொட்டிருக்கலாமோ என்று பட்டது.’’
“கமல் பினராயி விஜயனையும் பார்க்கிறார். உங்களையும் பார்க்கிறார். விஜய்காந்தையும் இன்னும் பலரையும் பார்க்கிறார். சில சமயம் பெரியாரியம் பேசுகிறார். ஆனால் மதுரையில் நடந்த கூட்டத்தில் “இடதும் இல்லை; வலதும் இல்லை; மய்யம்’’ என்கிறாரே?’’
“மக்கள் மத்தியிலும் தெளிவான அரசியல் பார்வை இல்லையே. ஆட்சியில் இருந்தவர்கள் மீது ஊழல் வழக்கு நடந்து தண்டிக்கப் பட்டிருக்கிறார்கள். தண்டிக்கப்பட்ட பிறகும் தமிழகச் சட்டமன்றத்தில் அவர்களுடைய படத்தைத் திறக்கிறார்கள். தனிமனிதத் துதி தான் நடக்கிறது. இதைத் தான் கமல் எதிர்க்கிறார் என்று நினைக்கிறேன். அவருடைய கட்சிப்பணி இப்போது தான் துவங்கியிருக்கிறது. பார்ப்போம்.’’
“கமல் இங்குள்ள ஊழலைப் பற்றி மட்டும் பேசுவதும், ரஜினி ‘இங்குள்ள சிஸ்டம் மட்டும் சரியில்லை’ என்று சொல்வதும் ஒரே மாதிரி தானே இருக்கிறது? தேசிய அரசியலைப் பற்றி இருவரும் இன்னும் பேச வில்லையே.. ஏன்?’’
“இவர்கள் மாநில அரசியலைப் பற்றி மட்டும் தான் பேசுகிறார்கள். ஆனால் இங்கே இருக்கிற சாதாரணக் குடிமகனுக்குக் கூட மத்தியில் உள்ள பா.ஜ.க அரசு தமிழகத்தில் உள்ள ஆளும் கட்சியைப் பயன்படுத்தப் பார்க்கிறது என்பது தெளிவாகத் தெரியும்.
இன்றைக்குள்ள ஆட்சி பா.ஜ.க. தயவில் தான் நீடிக்கிறது. அதுவும் அறுதிப் பெரும்பான்மையில்லாத மைனாரிட்டி அரசாகத் தான் தொடர்ந்து கொண்டிருக்கிறது. கமல், ரஜினி இருவருமே இங்கே உள்ள ‘சிஸ்டத்தைப்’ பற்றி மட்டுமே பேசுகிறார்கள்.
தேசிய அளவில் என்ன பார்வை இருக்கிறது என்பதை வெளிப்படையாகச் சொல்லவில்லை. ஒன்றை மட்டும் பார்க்கிறவர்கள் இன்னொன்றை ஏன் பார்க்க மறுக்கிறார்கள்? ஊழலைப் பார்க்கிறவர்கள் மத வெறியையும் பார்க்க வேண்டாமா?’’
“ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு உருவானதானதாகச் சொல்லப்படுகிற வெற்றிடத்தைப் பிடிக்கத் தான் இந்த முயற்சிகள் நடக்கிறதா?’’
“இவர்கள் மட்டுமல்ல, இங்குள்ள பல கட்சிகளும் அந்த இடத்தைப் பிடிக்கத் திட்டமிடுகிறார்கள். ஒ.பி.எஸ் கூட பிரதமர் மோடி சொல்லித்தான் மறுபடியும் அ.தி.மு.க.வில் சேர்ந்ததாக வெளிப்படையாகச் சொல்கிறார்.’’
“இந்தச் சமயத்தில் ஓ.பி.எஸ் அதைச் சொல்வதற்கு என்ன காரணம்?’’
“அவருக்கும், எடப்பாடி பழனிச்சாமிக்கும் இடையில் நிலவும் உள் அரசியல் தான் காரணம். தமிழக ஆளுநர் ஒருபுறம் ஆய்வு நடத்துகிறார். தி.மு.க அதை எதிர்க்கிறது. தமிழக அரசு சிறு அதிருப்தியைக் கூட வெளியிடவில்லை என்றால் என்ன காரணம்? இயக்குவது யார் என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியுமே. எப்படியாவது ஆட்சி நீடிக்க வேண்டும் என்பது தான் அவர்களுடைய நோக்கமாக இருக்கிறது.’’
“ஆளுநர் ஆட்சி இங்கு வருவதற்கான சூழ்நிலை இருக்கிறதா?’’
“இப்போதைக்கு இங்குள்ள ஆட்சியை எப்படியாவது நீடிக்க வைக்க வேண்டும் என்பது தான் மத்திய அரசின் திட்டமாக இருக்கிற போது உடனடியாக ஆளுநர் ஆட்சியைக் கொண்டுவர மாட்டார்கள் என்று தான் நினைக்கிறேன்.
உடனே தேர்தல் வந்தால் அது தி.மு.க.வுக்குச் சாதகமாக அமையும் என்பதால் அதை மத்திய அரசு விரும்பாது. சலுகைகளைக் கொடுத்து இங்குள்ள மக்களின் மனநிலையை மாற்ற நினைக்கிறார்கள்.’’
“அ.தி.மு.க.வுக்கான வாக்கு வங்கி சிதறியதால் யாருக்குப் பலன் கிடைக்கும் என்று நினைக்கிறீர்கள்?’’
“எப்படியாவது ஜெயலலிதாவால் உருவான ஆட்சி நீடிக்க வேண்டும் என்பதற்காகத் தான் ஆளுகிறவர்கள் அவ்வளவு தூரம் முயற்சிக்கிறார்கள். ஆனால் ஜெயலலிதாவுக்குக் கிடைத்த வாக்கு வங்கி இவர்களில் யாருக்குக் கிடைக்கும் என்பதில் நிச்சயமில்லை.
அது பல விதமாகப் பிரிந்தாலும், அ.தி.மு.க.வில் தினகரனுக்கும் ஆதரவில்லாமல் இல்லை. பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்துக் கொள்ள மாட்டேன் என்று தினகரன் இன்றைக்குச் சொன்னாலும், நாளைக்கும் அதே நிலையில் இருப்பாரா என்பதைச் சொல்ல முடியாது’’
“இந்துத்துவா சக்திகள் தமிழகத்தில் இயங்குவதை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’
“எதை வைத்தாவது இங்கு தங்களை வளர்த்துக் கொள்ள முடியுமா என்று பார்க்கிறார்கள். சிறிதாக ஒரு சம்பவம் நடந்தால் கூட அதை ஊதிப் பெரிதாக்குகிறார்கள்.
சமஸ்கிருதத்தைக் கொண்டுவரத் துடிக்கிறார்கள். அதே சமயம் தமிழைப் பின்னுக்குத் தள்ளவும் முயற்சிக்கிறார்கள். இருந்தாலும் பிரதமர் மோடி தமிழைப் பற்றி மறுபுறம் பேசுகிறார். முரண்பாடாகப் பல வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் தமிழக மக்களை இதனால் எல்லாம் ஏமாற்றிவிட முடியாது.’’
“காவிரி வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பினால் தமிழகத்திற்குப் பலன் கிடைத்திருக்கிறதா?’’
“தமிழகத்தை விட, கர்நாடகத்திற்குத் தான் பலன் கிடைத்திருக்கிறது. தமிழர்களுக்கு உரிய நியாயம் கிடைக்கவில்லை. பெங்களூரிலுள்ள குடிநீர்த் தேவையைப் பேசுகிறவர்கள் இங்குள்ள தேவையைப் பற்றிப் பேசவில்லை.
இங்குள்ள நிலத்தடி நீரைப் பற்றிப் பேசுகிறவர்கள் கர்நாடகத்தில் உள்ள நிலத்தடி நீரைப் பற்றி ஏன் பேசவில்லை? அவ்வளவு எளிதில் இதைப் பேசித் தீர்த்துவிட முடியுமா? ஆக கர்நாடகத்தில் தமிழர்களை எதிர்ப்பதில் பா.ஜ.க.வும், காங்கிரசும் ஒரே நிலையில் தான் இருக்கின்றன.’’
“தமிழகத்தில் பொருளாதாரத்திலும், வேலை வாய்ப்பிலும் ஸ்தம்பித்த நிலை இருக்கிறதே? மத்திய அரசும் போதுமான நிதி ஒதுக்கீடும் இல்லாத நிலை தானே நீடிக்கிறது?’’
“உண்மை தான். புயல் வந்தால் கூட அதைப் பார்வையிடுவதில் கூடத் தாமதம். கேரள அரசு நிவாரணப் பணிகளில் காட்டுகிற வேகம் கூட இங்கில்லை. மத்திய அரசிடமும் இல்லை. இங்கு ஆளுகிறவர்களும் அதை உரிமையுடன் கேட்கும் நிலையில் இல்லை. மீனவர்கள் விஷயத்தில் அலட்சியம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. பாதிக்கப்படுவது தமிழக மக்கள் தான்!’’
“இப்படிப்பட்ட மந்த நிலையிலிருந்து மாற்றம் வரும் என்று நம்புகிறீர்களா?’’
“எப்படியும் ஒரு மாற்றம் வந்து தான் தீரும். மக்கள் எவ்வளவு காலத்திற்குக் கஷ்டப்பட்டுக் கொண்டே இருப்பார்கள்? மெரினாவில் நம் இளைஞர்கள் அவ்வளவு கட்டுப்பாடுடன் கூடினால் அவர்கள் மீது அடக்குமுறையை ஏவுகிறார்கள். தூத்துக்குடியில் அமைதியாகப் பேரணி போனால் அங்கும் அடக்குமுறை. அதே சமயம் குற்றவாளிகளுக்குச் சுதந்திரம் இருக்கிறது. ஆனால் தொடர்ந்து இந்த மந்தநிலை நீடிக்காது. நீடிக்கவும் கூடாது.
என்ன அச்சுறுத்தல்கள் இருந்தாலும், இளைஞர்கள் இதை எல்லாம் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டு தானிருக்கிறார்கள்.’’ என்று சலிப்பில்லாமல் பேசிக் கொண்டு போனவரிடம் மணல் கடத்தல் வழக்கில் சந்தித்த மிரட்டல்களைப் பற்றிக் கேட்டதும் நிதானித்துப் புன்னகைக்கிறார்.
“பொதுவாழ்வில் சில பிரச்சினைகளைத் தொட்டால் மிரட்டல்கள் வருவது இயல்பானது தான். அப்படித்தான் அதை எடுத்துக் கொள்ள வேண்டும். தளர்ந்துவிடக் கூடாது’’
நிறைவாக “நேர்மையோடு இணைத்துப் பேசப்படும் காமராஜரும், கக்கனும், ஏன் நீங்கள் கூட கோவையில் தோற்கடிக்கப்பட்டீர்கள். அந்த நிலையில் நேர்மைக்கு இங்கே மதிப்பிருப்பதாக நினைக்கிறீர்களா? – கேட்டதும் சொன்ன பதிலில் கனிந்த முதிர்ச்சி.
“கோவையில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் நான் தோற்றேன். ஒவ்வொரு தேர்தலிலும் பல விஷயங்களை மனதில் வைத்து மக்கள் வாக்களிக்கிறார்கள். அதனால் நேர்மைக்கு மதிப்பில்லை என்று எடுத்துக் கொள்ள முடியாது. இதை ஒரு பெரிய விஷயமாகவும் ஆக்கக்கூடாது.
வட இந்தியாவில் மாணிக் சர்க்காரும், நிருபன் சக்கரவர்த்தியும் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார்கள். ஈ.எம்.எஸ் வெற்றி பெறவில்லையா? அதனால் மக்கள் மீது நம்பிக்கை இழந்துவிட வேண்டியதில்லை. இதில் எனக்கு எந்தவிதமான வருத்தமும் இல்லை. அதிருப்தியும் இல்லை.’’
“எந்த நிலையிலும் மக்களை விட்டுக் கொடுக்க மாட்டேன் என்கிறீர்களா?’’
“மக்களை நம்புகிறோம். எதையும் மாற்றுகிறவர்கள் மக்கள் தானே? அவர்கள் மீது எப்படி நம்பிக்கையில்லாமல் செயல்பட முடியும்?’’ – நம்பிக்கை தொனிக்கச் சொல்கிறார் ஆர்.நல்லகண்ணு.
சந்திப்பு: மணா