மார்கோ – pan இந்தியா படமா, ban இந்தியா படமா?

’கருடன்’ படம் மூலமாகத் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் உன்னி முகுந்தன். மலையாளத்தில் குறிப்பிடத்தக்க அளவில் சில படங்களில் நடித்திருக்கிறார். ஒரு ‘பான் இந்தியா’ நட்சத்திரமாக அவர் வெளிப்படும் வகையில் அமைந்தது ‘மார்கோ’ பட விளம்பரங்கள்.

படு ஸ்டைலிஷான, முழுநீள ஆக்‌ஷன் படமாக அது இருக்கும் என்று அப்படத்தின் டீசரும் ட்ரெய்லரும் கூறின. ரத்த ஆற்றில் ரசிகர்களை நனைத்தெடுத்தாற் போன்று படத்தில் வன்முறை ததும்பி நிற்கும் என்பதைச் சொல்லின.

படமும் அப்படித்தான் இருக்கிறதா? எப்படிப்பட்ட அனுபவம் இதில் நமக்குக் கிடைக்கிறது?

மெல்லிய இழையிலான கதை!

ஒரு கேங்க்ஸ்டர் குடும்பம். அடாட்டு என்பது அக்குடும்பத்துப் பெயர். தங்கக் கடத்தலில் ஈடுபடுவதோடு, கேரளா முழுக்க அதன் விநியோகத்தைத் தீர்மானிப்பதாகவும் விளங்குகிறது. அந்த குடும்பத்தின் வாரிசாக இருக்கிறார் மூத்த மகனான ஜார்ஜ் (சித்திக்).

அவரது சகோதரன் விக்டர் கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளி. தங்கைக்குத் திருமணமாகி கணவர், குழந்தைகள் என்றிருக்கிறார். ஆனால், சொத்தில் தனக்கு ஒரு பங்கு வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.

இம்மூவர் தவிர்த்து, அக்குடும்பத்திற்கு இன்னொரு வாரிசு உண்டு. அவரது பெயர் மார்கோ. ’எதுவும் அதீதம்’ என்பதே அவரது தாரக மந்திரம்.

தன்னைத் தத்தெடுத்த குடும்பத்தினர் எவ்வளவு வெறுத்தாலும், அவர்கள் மீது அன்பைக் கொட்ட மட்டுமே அவருக்குத் தெரியும். அவர்கள் மீது துரும்பை வீசுபவர்களையும் செயல்பட விடாமல் முடக்குகிற அளவுக்கு அவரது பாசம் வன்மை நிறைந்தது.

அப்படிப்பட்ட மார்கோ கொதிக்கிற அளவுக்கு ஒரு விஷயம் நடக்கிறது. விக்டர் கொலை செய்யப்படுகிறார். அவரது உடல் கூடக் கிடைப்பதில்லை.

ஜார்ஜ் கொதிப்பின் உச்சத்தில் இருந்தாலும், அதன் பின்னிருப்பது யார் என்று தெரியாமல் தவிக்கிறார். இந்த நிலையில், வெளிநாட்டில் இருக்கும் மார்கோ அங்கு வருகிறார்.

மார்கோவின் மூர்க்கமான குணம் அவரை வீழ்த்தும் என்று நம்புகின்றனர் எதிரிகள். ஜார்ஜ் உடனும், மார்கோ உடனும் அவர்கள் இருக்கின்றனர்.

தொழில் போட்டியில் தொடங்கி தனிப்பட்ட முறையில் குடும்பம் சார்ந்து மோதல் தொடங்கும்போது, அந்த நபர்களின் முகத்திரை கிழிகிறது.

ஜார்ஜ் உடன் இதுநாள் வரை சேர்ந்து பயணித்த கேங்க்ஸ்டர் குடும்பங்கள் இருப்பது தெரிந்ததும், அவர் என்ன செய்தார்? மார்கோ என்ன செய்தார் என்பதைச் சொல்கிறது இப்படத்தின் மீதி.

உண்மையில், ஒரு மெல்லிய இழையிலான கதையில் ரொம்பவும் பலவீனமான முறையில் காட்சிகள் இணைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றின் கனம் தாங்காமல் திரைக்கதை அல்லாடுகிறது.

இதில் விக்டருக்கு ஒரு காதலி உண்டு என ஒரு கிளைக்கதை உண்டு. ஜார்ஜின் தொழில்முறை நண்பர்களாக டோனி ஐசக் (ஜகதீஷ்), அவரது மகன் ரஸ்ஸல் (அபிமன்யு), தேவராஜ் (அன்சன் பால்) ஆகியோரின் சதிச்செயல்கள் இன்னொரு கிளைக்கதையாக விரிகிறது.

இதற்கு நடுவே மார்கோவின் நிச்சயிக்கப்பட்ட திருமணம், அந்தப் பெண், அவர்களுக்கு இடையிலான உறவு என்று இன்னொரு கிளைக்கதை உண்டு.

இவற்றையெல்லாம் திரைக்கதையில் இணைத்தவர்கள், அதனை அனைத்து ரசிகர்களும் ரசிக்கும்படியாகச் சுவையானதாக மாற்றியிருக்கலாம். அதனைச் செய்யாமல் விட்டதால், தியேட்டரில் பலமுறை நாம் நெளிய வேண்டியதாகிறது.

’ஸ்டண்ட்’ அருமை!

இந்த படத்தில் உன்னி முகுந்தன் நடிப்பைத் தனியாக விமர்சிக்க வேண்டியதில்லை. சித்திக், ஜகதீஷ், அபிமன்யூ, அஜித் கோஷி, அர்ஜுன் நந்தகுமார், அன்சன் பால், லிஷோய், தினேஷ் பிரபாகர், இஷான் சௌகத், ஸ்ரீஜித் ரவி, கபீர் துகான் சிங் உட்படப் பலர் அதனைப் பங்கு பிரித்துக் கொள்கின்றனர்.

யுக்தி தரேஜா, துர்வா தாக்கர் ஆகிய பெண்களும் இப்படத்தில் இருக்கின்றனர்.

’மார்கோ’ ஆக்‌ஷன் பிரியர்களுக்கான திரைப்படம். அதனை மனதில் கொண்டே ‘பான் இந்தியா’ படமாக இதனை ரிலீஸ் செய்திருக்கின்றனர். அதில் தவறில்லை.

அவ்வாறு பரவலான வரவேற்பைப் பெறும் அளவுக்கு, இதன் கதை எளிதில் ஈர்ப்பதாக இருந்திருக்க வேண்டும். ’மார்கோ’ திரைக்கதையோ சம்மணம் இட்டு ஒரு இடத்தை இறுகப் பற்றிக் கொண்டிருக்கிறது. அதனால், திரைக்கதை என்ற வஸ்துவுக்கு பெரிதாக வேலை இல்லை.

கலை கிங்ஸனின் ‘ஸ்டண்ட்’ காட்சிகள் அருமை. அவை திகட்டும் அளவுக்கு அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. அதுவும் மாடிப்படிகளில் அடியாட்களைத் தாக்குகிற காட்சி, அப்படியே ஒரு வீடியோ கேம் விளையாட்டில் பங்கேற்ற உணர்வை நமக்குத் தருகிறது.

ஸ்டண்ட் கொரியோகிராபியின் முக்கியத்துவம் உணர்ந்து காற்றோடு கலந்து இயங்கியிருக்கிறது சந்துரு செல்வராஜின் ஒளிப்பதிவு.

சுனில் தாஸின் தயாரிப்பு வடிவமைப்பானது, திரையில் தெரியும் பிம்பங்கள் அழகியலோடு திகழ்வதை கண்ணும் கருத்துமாகச் செயல்படுத்தியிருக்கிறது.

உயிரிழந்த பிணங்களைத் திரையில் காட்ட ‘பிராஸ்தடிக்’ மேக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

அருவெருப்பாக உணரும் அளவுக்கு, அது நேர்த்தியாக அமைந்திருக்கிறது. சுதி சுரேந்தரின் ஒப்பனை பாராட்டுக்குரியது.

கேஜிஎஃப் தாக்கத்தில் இதிலும் ஹீரோயிசத்துக்கு ஏற்ற பின்னணி இசையைத் தந்திருக்கிறார் ரவி பஸ்ரூர்.

‘ஆக்‌ஷனுக்கு தான் முக்கியத்துவம்’ என்று முடிவு செய்தபிறகு, வசனங்கள் ‘பஞ்ச் வரிகள்’ ஆக கடப்பதே சாலச் சிறந்தது.

அதனைச் செய்யாமல் விட்டதால் முன்பாதியில் சில காட்சிகள் பொறுமையைச் சோதிக்கின்றன. அதற்கு படத்தொகுப்பாளர் சமீர் முகம்மதுவே பொறுப்பு.

இயக்குனர் ஹனீப் அடேனி ’மார்கோ’வின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார். இப்படத்தின் எழுத்தாக்கம் மிக மோசமானதாக அமைந்திருப்பதால், அவரது இயக்கத்தைச் சிலாகிக்க வழிகள் அடைக்கப்பட்டிருக்கின்றன.

கதாபாத்திரங்களை வடிவமைத்த விதத்திலாவது கொஞ்சம் புதுமையைக் கைக்கொண்டிருக்கலாம். குறைந்தபட்சமாகச் சில காட்சிகளையாவது ‘ஒரிஜினலாக’ அமைத்திருக்கலாம்.

எதுவுமே நிகழாமல் அல்லது நிகழ்த்தப்படாமல், தியேட்டருக்குள் நுழைந்த நம்மிடம் ‘எதுக்கு வந்தீங்க’ என்று கேள்வி எழுப்புகிறது இப்படத்தின் ஆக்கம்.

’கில்’ படத் தாக்கம்!

இந்தியில் சில மாதங்களுக்கு முன்னர் ‘கில்’ என்றொரு படம் வந்தது. அதுவும் ஆக்‌ஷன் படம் தான். வன்முறை படுபயங்கரமாக இடம்பிடித்திருக்கும்.

வில்லனின் ஆட்களைக் கொடூரமாக நாயகன் கொலை செய்வதை நியாயப்படுத்துகிற வகையில், அதிலொரு காரணம் சொல்லப்பட்டிருக்கும். இக்கதையில் அப்படியொன்று நிகழவே இல்லை. அதனால், அனைத்து பிரேம்களும் செயற்கையாகத் தெரிகின்றன.

’கில்’ படத் தாக்கத்தில் மார்கோ உருவாக்கப்பட்டதில் தவறில்லை. அப்படம் முழுக்கவே சில மணி நேர ரயில் பயணத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கும். இதில் அப்படி எதுவும் இல்லை.

நாயகன் உன்னி முகுந்தனுக்கு ஆக்‌ஷன் என்றால் உயிராக இருக்கலாம். அதற்காகவெல்லாம் இப்படியொரு படத்தைப் பார்க்க முடியாது.

நிச்சயமாக, கதை கேட்கும்போதே அவருக்கு அது புரிந்திருக்கும். அதையும் மீறி, இப்படியொரு படத்தை அவர் உருவாக்கத் துணை நிற்கிறார் என்றால் அடுத்தடுத்த படங்களைப் பார்க்கக் கூட்டம் சேராது.

அனைத்துக்கும் மேலாக, ஆணாதிக்கம் நிறைந்த உலகை முன்னிறுத்த முயற்சிக்கிறது ‘மார்கோ’. ‘இதுதான் ட்ரெண்ட்’ என்ற பெயரில் கற்காலத்தை நோக்கிச் செல்வது சரியானதாக இருக்காது. மார்கோ போன்ற படங்கள் நம்மை அங்குதான் இழுத்துச் செல்கின்றன.

ஸ்டைலிஷான ஒளிப்பதிவு, மேற்கத்திய பாணியிலான ஆடை வடிவமைப்பு, நிலை கொள்ளாமல் ஹேண்டியாக அமைக்கப்பட்ட சண்டைக் காட்சிகள் என்று இப்படத்தில் சில சிறப்புகள் இருக்கின்றன.

வன்முறையைக் கொண்டாடுகிற விதமான காட்சியாக்கமும் இதில் இருக்கிறது.

அந்தவொரு அம்சம், ‘பொழுதுபோக்கா ஒரு படம் பார்ப்போம்’ என்று வருகிற சாதாரண மனநிலை கொண்ட ரசிகர்களைப் பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கும்.

அதேநேரத்தில், இது போன்ற படங்களை ரசிக்கவும் ஒரு கூட்டம் இருக்கிறது என்பதையும் சொல்லத்தான் வேண்டும்.

அந்த எண்ணிக்கையைப் பெருக்குகிற வேலையைப் பார்க்க, ‘மார்கோ’ போன்று பல படங்கள் எதிர்காலத்தில் தயாரிக்கப்படலாம்.

அப்படிப்பட்ட படமொன்று சாதாரண ரசிகர்களுக்கு ’pan இந்தியா படமாகத் தெரியுமா, ban இந்தியா படமாகத் தெரியுமா’ என்பதைக் காலம் மட்டுமே முடிவு செய்யும்!

– உதயசங்கரன் பாடகலிங்கம்

You might also like