‘Extra Decent’ – இது வேற மாரி ‘சைக்கோ’ படம்!

‘அது வேற வாய் இது நாற வாய்’ என்று ‘பட்ஜெட் பத்மநாபன்’ படத்தில் வடிவேலு பேசும் வசனம் இன்றும் பிரபலம்.

அந்தப் படத்தில், காலை ஆறு மணிக்குப் பயபக்தியோடு பெற்றோர் காலில் விழுந்து வணங்கிவிட்டு ஆட்டோ ஓட்டச் செல்லும் அவரது பாத்திரம்.

மாலை ஆறு மணிக்கு மேல் நன்றாக மது அருந்திவிட்டு அதே பெற்றோரைப் பயத்தில் நடுங்கச் செய்வதாகக் காட்டப்பட்டிருக்கும். காரணம், அந்தப் பாத்திரத்தின் திருவிளையாடல்கள் அவ்வாறாக அமைக்கப்பட்டிருக்கும்.

அந்தக் காமெடி காட்சிகளை ‘எக்ஸ்ட்ரா டீசன்ட்’ படத்தின் ஸ்கிரிப்ட் ரைட்டர் ஆஷிஃப் காக்கொடி பார்த்திருப்பார் போல. அந்தப் பாத்திரத்தையே மையமாக வைத்து ஒரு திரைக்கதையை எழுதியிருக்கிறார்.

கிட்டத்தட்ட ஒரு சைக்கோ பாத்திரத்தை முதன்மையாகக் கொண்ட இப்படத்தை ‘கலர்ஃபுல்’ காட்சியாக்கத்தோடு திரையில் விருந்தாகத் தர முயற்சித்திருக்கிறார் இயக்குநர் அமீர் பல்லிக்கல்.

‘எக்ஸ்ட்ரா டீசன்ட்’ பட டீசர், ட்ரெய்லர் அதனை அடிக்கோடிட்டுக் காட்டின. தற்போது இப்படம் தியேட்டர்களில் வெளியாகியிருக்கிறது.

எப்படி இருக்கிறது இந்த ‘எக்ஸ்ட்ரா டீசன்ட்’?

 ஒரு ‘சைக்கோ’ கதை!

பினு என்ற பாத்திரத்தைச் சுற்றியே மொத்தக் கதையும் சுழல்கிறது.

சிறு வயதில் பள்ளியில் இருந்து இரண்டு சிறுவர்கள் வீடு திரும்புகின்றனர். இருவரும் சகோதரர்கள்.

மூத்த சகோதரன் ஆம்லெட் இடுவதற்காக கேஸ் அடுப்பை திறந்துவிட்டு,

தீப்பெட்டி எங்கே என்று தேடுகிறார். பக்கத்து வீட்டில் இளைய சகோதரன் தீப்பெட்டி வாங்கச் செல்கிறார்.

திடீரென்று கண் முன்னே தட்டுப்பட்ட தீப்பெட்டியைக் கண்டு அந்தச் சிறுவன் அடுப்பைப் பற்ற வைக்க முயல, ஏற்கனவே கசிந்துவிட்ட சமையல் எரிவாயுவால் விபத்து நேரிடுகிறது.

அந்த இளைய சகோதரன் அந்தக் காட்சியைக் காண சகிக்காமல் இதயம் வெடித்துவிடும் அளவுக்கு அழுகிறார்.

அந்த இளைய சசோதரனின் பெயர் பினு. வளர்ந்து பெரியவனான பிறகும், அந்த நிகழ்ச்சியின் தாக்கம் அவருக்குள் பொதிந்திருக்கிறது. அது, அவரது ஆளுமையை மொத்தமாகச் சிதைக்கிறது.

தந்தை (சுதீர் கரமனா) தாசில்தார் ஆக பணியாற்றி ஓய்வு பெறுகிறார். தாய் (வினயா பிரசாத்) ஆசிரியை ஆக இருந்தவர்.

‘உருப்படாதவன்’, ‘லாயக்கு இல்லாதவன்’ என்றே பினுவை (சூரஜ் வெஞ்சாரமூடு) எந்நேரமும் திட்டுவது தந்தையின் வேலை. தாயார் மென்மையாக அதனைக் கண்டிப்பார்.

அவ்வளவுதான். தந்தையை எதிர்த்து, மகனுக்காகப் பரிந்து பேச மாட்டார்.

பினுவுக்கு ஒரு சகோதரி (கிரேஸ் ஆண்டனி). சாப்ட்வேர் நிறுவனமொன்றில் பணியாற்றியவர், அமெரிக்கா செல்லத் தயாராகி வருகிறார்.

பினுவுக்கு ஒரு நண்பன் (ஷ்யாம் மோகன்) உண்டு. அவர் எந்நேரமும் அந்த வீடே கதி என்று இருப்பவர். பினுவின் பெற்றோர், சகோதரி சொல்லும் வேலைகளைச் சிரமேற்கொண்டு செய்பவர்.

பினுவின் தந்தை ஒரு கடையையும் நடத்தி வருகிறார். அங்குள்ளவர்களிடமும் சரி, வீட்டின் அக்கம்பக்கத்தினரிடமும் சரி, பினுவைக் குறை சொல்லிக் கொண்டிருப்பது அவரது வாடிக்கை.

இந்த நிலையில், சகோதரி அமெரிக்கா செல்லத் தயாராகிறார். அப்போது தான், அவர் பிறந்த தேதியைக் கவனிக்கிறார் பினு. அதிலிருக்கும் தேதிக்கும் தன் சகோதரன் இறந்த தேதிக்குமான வித்தியாசம் 9 மாதங்களை விடக் குறைவாக இருக்கிறது.

மருத்துவமனையில் தீக்காயம் பட்ட சகோதரர் 3 மாசக் காலம் நோயால் அவதிப்பட்டபிறகே இறந்து போயிருக்கிறார்.

‘கூட்டிக் கழிச்சு பாரு, கணக்கு சரியா வரும்’ என்று ‘அண்ணாமலை’ ராதாரவி போல பினுவின் மனம் கணக்கிடுகிறது. ‘அப்படியென்றால்..’ என்று யோசித்து ஒரு இடத்தில் ‘பிரேக்’ போட்டு நிற்கிறது.

சகோதர பாசத்தில் அதுநாள் வரை வாடி வதங்கிய மனம் சுக்குநூறாக உடைகிறது. அவருக்குள் இருக்கும் ‘வெறியன்’ வேட்கை கொண்டு எழ, பெற்றோரை நோக்கிச் செல்கிறார்.

ஆம். அந்த வார்த்தைகளை வாய்விட்டுக் கேட்டுவிடுகிறார். எதற்கெடுத்தாலும் குறை சொல்லும் தந்தையால் எதுவுமே பதில் சொல்ல முடிவதில்லை. தாயோ விக்கித்து நிற்கிறார்.

அன்றுமுதல் பினுவின் ‘வெறியாட்டம்’ ஆரம்பமாகிறது. ‘குழந்தைகளுக்காக நாங்க எவ்ளோ தியாகம் பண்ணியிருக்கோம் தெரியுமா என்று சொல்வதற்கே தகுதி இல்லாதவர்கள் நீங்கள்’ என்கிறார்.

வெளியுலகத் தொடர்பு அவர்களுக்கு கிடைக்காமல் இருக்கும் வகையில், ஏற்கனவே இருந்த வீட்டை விட்டு அருகிலுள்ள நகரத்தில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்புக்கு குடி போகின்றனர். ‘ஒரு பிளாட் வாங்க வேண்டும்’ என்பது பினுவின் சகோதரியினுடைய திட்டம்.

பச்சைக் காய்கறிகளைத் தின்ன வேண்டும், தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று தொடங்கி காலை முதல் இரவு வரை அவர்கள் அதுநாள் வரை செய்த எதையுமே பினு செய்ய அனுமதிப்பதில்லை.

ஆனால், வெளியுலகைச் சேர்ந்தவர்கள் ‘என்ன ஒரு நல்ல பையன்’ என்று சொல்கிற அளவுக்குச் சாந்தமாக நடந்துகொள்கிறார் பினு.

இந்த நிலையில், மகளுக்குத் திருமணம் செய்துவைப்பதன் மூலம் பினுவின் சைக்கோதனத்தில் இருந்து விடுபடலாம் என்று நினைக்கின்றனர் பெற்றோர். ஆனால், அப்பெண்ணோ தனக்கு பினுவின் நண்பனைத்தான் இஷ்டம் என்கிறார்.

அப்போதுதான், சிறு வயது முதலே தனக்குத் தெரியாமல் தன் கண் மறைவில் நண்பனும் சகோதரியும் காதலித்ததை அறிகிறார் பினு. அப்புறமென்ன, அதற்கும் ஆப்பு வைக்கிறார்.

அதைக் கண்டு பெற்றோர் மனமொடிந்து போகின்றனர். தாங்கள் விரும்பியவாறு ஒரு நொடி கூட வாழ முடியாது என்றெண்ணும்போது, அந்தப் பெற்றோர் ஒரு முடிவு செய்கின்றனர்.

அதனை நிறைவேற்ற முயல்வதற்குள், அடுக்குமாடிக் குடியிருப்பின் காவலாளி பினுவைக் கடுமையாகத் தாக்கிக் காயப்படுத்துகிறார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அறுவைச்சிகிச்சைகள் செய்யப்பட்டு விழித்தெழும் பினு, ‘நான் யாரு’ என்கிறார்.

அதன்பின் நடப்பதைச் சொல்கிறது ‘எக்ஸ்ட்ரா டீசன்ட்’ டின் மீதிப்பாதி.

இதனை அறிந்ததுமே, ‘இப்படியொரு சைக்கோ படமா’ என்ற எண்ணம் தோன்றுவதே இயல்பு. ஆனால், இக்கதையைத் திரையில் கண்டு ரசிகர்கள் சிரிக்கும் வண்ணம் ஆக்கியிருக்கிறார் இயக்குநர் அமீர் பல்லிக்கல்.

மிரட்டும் சூரஜ்!

சந்தேகமே இல்லாமல், தொடக்கம் முதல் இறுதி வரை நடிப்பில் ‘கதகளி’ ஆடியிருக்கிறார் சூரஜ் வெஞ்சாரமூடு. மழுங்க ஷேவ் செய்த முகத்துடன் பயந்து நடுங்குவதில் தொடங்கி சிரித்தவாறே வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போலத் தனது பெற்றோரை வதைத்து சித்திரவதை செய்வது வரை, அவர் ஒவ்வொரு பிரேமும் அட்டகாசம்.

திலினா ராமகிருஷ்ணன் இதில் சூரஜின் காதலியாக வருகிறார். அவர் வரும் காட்சிகளில் சிலவற்றுக்கு ‘கத்திரி’ போடப்பட்டிருப்பதால்,

இக்கதையில் அவரது பங்கு என்னவென்பதே தெரியவில்லை. அதுவே, இப்படத்தின் மைனஸ்.

சூரஜின் பெற்றோராக வரும் சுதீர் கரமனா, வினயா பிரசாத் இருவருமே நடிப்பில் அசத்தியிருக்கின்றனர்.

அதிலும் வினயாவின் பாத்திர வார்ப்பு, இதுநாள் வரை நாம் கண்ட ‘அம்மா சென்டிமெண்ட்’ படங்களில் இருந்து முற்றிலுமாக மாறுபட்டது.

‘இவரையா நாம் சந்திரமுகியில் பார்த்தோம்’ என்று எண்ணுகிற அளவுக்கு இதில் அவருக்கு முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது.

கிரேஸி ஆண்டனி ஆதிக்கக் குணம் கொண்ட பெண்ணாக மிரட்ட, அவரை அனுசரித்துச் செல்லும் காதலராகத் தோன்றி சிரிக்க வைத்திருக்கிறார் ‘பிரேமலு’ புகழ் ஷ்யாம் மோகன்.

ஆர்ப்பாட்டம் மிகுந்த மனிதராகத் தோன்றி, வழக்கம்போல சிரிப்பில் நம்மை அதிர வைத்திருக்கிறார் வினீத் தட்டில் டேவிட். மருத்துவர்களாக வரும் சஜின் செருகயில், ராஃபியும் சில காட்சிகளில் வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கின்றனர்.

இவர்கள் தவிர்த்து அலெக்சாண்டர் பிரசாந்த் உட்படச் சிலர் இப்படத்தில் உண்டு.

அங்கித் மேனன் பின்னணி இசைப் படத்தின் காட்சிகளோடு கலந்து நிற்கிறது. உண்மையில், இப்படியொரு கதைக்கும் திரைக்கதைக்கும் பின்னணி இசை தருவதென்பது சவாலானது. அதனைச் சமாளித்திருக்கிறார்.

ஸ்ரீஜித் சாரங்கின் படத்தொகுப்பில் காட்சிகள் சில இடங்களில் முன்பின்னாக அடுக்கப்பட்டிருக்கின்றன. அதில் நாயகி திலினாவின் காட்சிகளை மட்டும் வெட்டியெறிந்திருப்பது குழப்பத்தை ஏற்படுத்துகிறது. அதனைச் சரிப்படுத்தாத அளவுக்கு என்ன காரணம் இருக்கிறதோ தெரியவில்லை.

ஷரோன் ஸ்ரீனிவாஸின் ஒளிப்பதிவு இப்படத்தின் பெரும்பலம். ஏனென்றால், ‘சைக்கோ த்ரில்லர்’ என்றாலே இருட்டைத் திரையில் பாதியளவாவது நிரப்ப வேண்டும் என்பதைப் பின்பற்றும் படங்களே அதிகம். இதிலோ, அனைத்து காட்சிகளிலும் முழுக்க வெளிச்சம் பாய்ந்து பரவியிருக்கிறது.

டிஐ, விஎஃப்எக்ஸ், காஸ்ட்யூம் டிசைன், மேக்கப், ஒலி வடிவமைப்பு என்று பல அம்சங்கள் இதில் இயக்குநரின் திரைக்கதை ட்ரீட்மெண்ட் உடன் பொருந்தி நிற்கின்றன.

இப்படத்தின் ஆணிவேராகத் திகழ்கிறது ஆசிஃப் காக்கொடியின் எழுத்தாக்கம். நிச்சயமாக, இக்கதை புதுமையானது கிடையாது.

ஆனால், இதில் எந்த விஷயம் மையமாகச் சொல்லப்பட்டிருக்கிறதோ, அதனை இதுவரை திரையில் எவரும் இப்படிப் பட்டவர்த்தனமாகப் பேசியது இல்லை என்று சொல்லலாம்.

அதனை மனதில் கொண்ட ஒரு பாத்திரம், தனது வலியைத் தான் சார்ந்தவர்களுக்குக் கடத்த வேண்டும் என்று நினைப்பதைத் திரையில் சுவாரஸ்யமாகச் சொல்வதென்பது ஆகப்பெரிய சவால். அதனைச் சாதித்திருக்கிறார் ஆசிஃப். நிச்சயமாக, அவருக்கு விருதுகள் பல சென்று சேர வேண்டும்.

அதோடு, ‘பட்ஜெட் பத்மநாபன்’னில் வரும் வடிவேலு காமெடியை அவர் பார்த்திருக்கிறாரா என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும். ஏனென்றால், இன்னும் சில நாட்கள் கழித்து இரண்டையும் சம்பந்தப்படுத்தி மீம்ஸ்கள் வர வாய்ப்பிருக்கிறது.

அனைத்துக்கும் மேலே, சற்றே மனநலம் பிறழ்ந்த ஒரு பாத்திரத்தைக் கொண்டு ‘டார்க் ஹ்யூமர்’ நிறைந்த ஒரு படத்தைத் தர முடியும் என்று நம்பிய இயக்குனர் அமீர் பல்லிக்கல்லுக்கு ‘சபாஷ்’ சொல்ல வேண்டும்.

ஏனென்றால், அவரது உறுதியே இப்படத்தின் பெரும்பலம். அது, ‘இது வேற மாரி சைக்கோ படம்’ என்று ரசிகர்களைச் சொல்ல வைத்திருக்கிறது.

வாவ்..!

இதற்குப் பின் சொல்லப்படுகிற விஷயங்கள் ‘நிச்சயமாக’ ஸ்பாய்லர் ரகம். அதனால், அதனை விரும்பாதவர்கள் தவிர்த்து விடலாம்.

இந்தப் படம் தொடங்குகையில் எந்தவொரு ரசிகரும் நாயக பாத்திரத்திற்கு எதிரான நிலையில் தான் இருப்பார்கள். படம் நிறைவடையும்போது, அவர்களது சார்பு நிலை இடம் மாறியிருக்கும். அதற்குக் காரணம், இதர பாத்திரங்களின் வார்ப்பு.

நாயகன் பினு நார்மலான மனிதன் இல்லை என்றால் அவரது குடும்பத்தினர்,

சுற்றத்தினரை ‘நார்மல்’ என்று சொல்லலாமா என்று கேள்வி எழுப்புகிறது இப்படம்.

அதுவே, இப்படத்தினை மீண்டும் பார்க்கத் தூண்டுகிறது. அதன் வழியே, இதிலுள்ள காட்சிகளை,

வசனங்களை அனுஅனுவாக உளவியல் பகுப்பாய்வு செய்யத் தூண்டுகிறது.

அதுவே ‘எக்ஸ்ட்ரா டீசன்ட்’டுக்கு கிளாசிக் அந்தஸ்தை தருகிறது.

வெறுமனே இப்படத்தை பேமிலி ட்ராமா, டார்க் ஹ்யூமர், சைக்கோ த்ரில்லர் போன்ற வகைமைகளுக்குள் அடக்கிவிட முடியாது. அதையும் தாண்டிச் சில கேள்விகளை எழுப்புகிறது இப்படம்.

‘டார்க் நைட்’ டில் வரும் ஜோக்கர் முதல் திரையுலகம் கண்ட ஆகப்பெரிய சைக்கோ கதைகள் எல்லாவற்றுக்கும் அப்பாத்திரங்களின் குடும்பமும் சுற்றமும் சமூகமும் காரணமாக இருப்பது காட்டப்பட்டிருக்கும்.

‘இந்தக் கதையிலும் நாயக பாத்திரம் எப்படிப்பட்ட சைக்கோதனத்தை வெளிப்படுத்தப் போகிறது’ என்பதை இதர பாத்திரங்களே முடிவு செய்கின்றன.

அந்த வகையில், இந்த ஆண்டின் சிறந்த மலையாளப் படங்களின் வரிசையில் இடம்பிடித்திருக்கிறது இந்த ‘எக்ஸ்ட்ரா டீசன்ட்’.

-உதயசங்கரன் பாடகலிங்கம்.

#எக்ஸ்ட்ரா_டீசன்ட் #Extra_Decent #விமர்சனம் #Review #சைக்கோ_கதைகள் #Psycho_story #இயக்குநர்_அமீர்_பல்லிக்கல் #Director_Aamir_pallikkal #சுதீர்_கரமனா #Sudheer_karaman #கிரேஸ்_ஆண்டனி #Grace_antony #ஷ்யாம்_மோகன் #Shyam_mohan #திலினா_ராமகிருஷ்ணன் #Dhilina_ramakrishna #வினயா_பிரசாத் #Vinaya_prasath #அலெக்சாண்டர்_பிரசாந்த் #Alexdander_prasath #ஸ்ரீஜித்_சாரங் #Sreejith_sarang #ஷரோன்_ஸ்ரீனிவா #Sharon_sriniva

You might also like