அழகுக்கான டைல்ஸ்களும் வழுக்கி விழும் உயிரிழப்புகளும்!

ஊர் சுற்றிக் குறிப்புகள்:

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு தினசரிகளில் ‘கவர்னர் பாத்ரூமில் வழுக்கி விழுந்தார்’ என்ற செய்திகள் வெளிவந்திருக்கின்றன.

ஆடம்பரமாக கட்டப்பட்டு குளியல் அறையில் கூட அதிநவீன வசதிகளுடன் தரை முழுக்க டைல்ஸ் பதிக்கப்பட்ட நிலையில், குளியல் அறையில் நடமாடும் எவருமே வழுக்கி விழ வாய்ப்பிருக்கிறது.

முன்பு கவர்னர் பொறுப்பில் இருந்தவர்களும், அதிகாரப் பொறுப்பில் இருந்தவர்களும், சில சினிமா நட்சத்திரங்களும் கூட குளியல் அறையில் வழுக்கி விழுந்து காயம்பட்டோ அல்லது உயிரிழப்பதோ கூட நடந்திருக்கிறது.

ஆனால், கடந்த பத்து-இருபது ஆண்டுகளுக்கு மேல் எங்கு பார்த்தாலும் அப்பார்ட்மெண்ட் குடியிருப்புகளும், மிக நவீனமான பங்களாக்களும் அதிகரித்து வரும் நிலையில், குளியல் அறை என்பது பெரும்பாலும் தரையிலும் சுற்றுச்சுவரிலும் ‘டைல்ஸ்’ பதிக்கப்பட்ட நிலையிலேயே இருப்பதை பார்க்க முடிகிறது.

இந்தவிதமான குளியல் அறையில், சவரில் குளிக்கும்போதோ ஷாம்பு, சோப்பு முதலியவற்றை உபயோகப்படுத்தும்போதோ குளியல் அறையில் உள்ள தரைப்பகுதி மேலும் வழுவழுப்பானதாக மாறிவிடுகிறது.

அதில், குளித்தபடியே அதில் கால் வைப்பவர்கள் குளியல் அறையிலேயே தவறி விழுவதும் அடிக்கடி நடக்கக் கூடிய ஒன்றாக இருக்கிறது.

சிறு குழந்தைகளும், இளைஞர்களும் கூட இந்த விதமான வழுக்கி விழுதலுக்கு ஆளாகும்போது அறுபது வயதுக்கு மேற்பட்ட வயதான மூத்தக் குடிமக்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்.

பலர் அடிக்கடி குளியல் அறையில் வழுக்கி விழுவது நடந்து சிலர் உயிரிழப்பதும் நடந்திருக்கிறது.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் எனக்குத் தெரிந்த, நன்கு அறிமுகமான சிலரும் வீட்டுக் குளியல் அறையிலோ, தங்கும் விடுதிகளில் உள்ள குளியல் அறையிலோ வழுக்கி விழுந்து உடனடியாகவும் இறந்திருக்கிறார்கள்.

பின்தலையில் அடிபட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், சில நாட்களுக்குப் பிறகும் உயிரிழந்திருக்கிறார்கள்.

ஒரு வீட்டை அலங்காரத்துடன் வைத்துக்கொள்வது என்பது அவரவர் விருப்பம் சார்ந்த விஷயம்.

ஆனால், குளியல் அறைகளில் இத்தகைய நவீன வசதிகள் தேவைதானா? என்கின்ற கேள்வியை எழுப்புகின்றன நாம் சந்திக்க நேரும் நடைமுறை அனுபவங்கள்.

இதை உணர்ந்தோ என்னவோ தற்போது குளியல் அறையில் அதிகம் வழுக்காத சொரசொரப்பான தன்மையுடன் இருக்கக்கூடிய டைல்ஸ்கள் புழக்கத்திற்கு வந்துவிட்டன.

வீடு கட்டும்போதே இதில் கவனம் செலுத்தி வாங்கி குளியல் அறையில் பயன்படுத்துபவர்கள் இருக்கிறார்கள்.

அதேசமயம் இன்னும் பழைய பாணியிலேயே சுலபமாக வழுக்கும் தன்மை கொண்ட பளபளப்பான டைல்ஸ்களை வாங்கி பதிக்கிறவர்களும் இருக்கிறார்கள்.

இனியாவது குளியல் அறையில் உள்ளே நுழையும்போது, வயதில் மூத்தவர்கள் கவனத்துடன் குளிப்பதும் குளியல் அறையில் நடமாடுவதும் அவரவர் ஆரோக்கியம் சார்ந்த முக்கியமான விஷயம்.

இதில், பளிச்சென்ற அழகு முக்கியமா? வழுக்கி விழுந்து உயிர்போகும் ஆபத்து முக்கியமா? என்பதையும் அவரவர் பரிசீலிக்கட்டும்.

– தனுஷா

You might also like