ரஞ்சித்தின் படைப்பு – வாழ்வில் இருந்து முகிழ்க்கும் கலை!

தமிழ் திரையுலக வரலாற்றில் முத்திரை பதித்த இயக்குனர்களைத் தனியே பட்டியலிடலாம்.

ஏனென்றால், ‘கெட்ட பையன் சார் இந்த காளி’ என்று வசனம் பேசிக் கைத்தட்டல்களை அள்ளிய ரஜினிகாந்தை ‘தமிழ் படங்கள்ல ஏ கபாலின்ன உடனே கையைக் கட்டிக்கிட்டு குனிஞ்சு சொல்லுங்க எஜமான்னு வந்து நிப்பானே அந்த மாதிரி கபாலின்னு நினைச்சியாடா.. கபாலிடா..’ என்ற ‘பஞ்ச் டயலாக்’ பேச வைத்தவர்.

அதற்கு முன்னதாகவே ‘அட்டகத்தி’, ‘மெட்ராஸ்’ படங்களில் இதுவரை தமிழ் திரையுலகம் கண்டிராத கதைக்களங்களையும் மாந்தர்களையும் திரையில் காட்டியவர்.

இன்றும் ‘வாழ்வில் இருந்து முகிழ்க்கும் கலை’யாகத் தனது படைப்புகளைத் தொடர்ந்து தான் வாழ்ந்த உலகம், மனிதர்கள், அவர்களது கனவுகள் சார்ந்து படைத்து வருகிறார்.

அதன் வழியே ஒடுக்கப்பட்டவர்களுக்கான குரல் ஓங்கி ஒலிக்கும் வகையில் பல திசைகளில் இருந்தும் படைப்புகள் பெருக வழி வகுத்திருக்கிறார்.

அந்த வகையில், ஒரு இயக்குனராகப் பா.ரஞ்சித்தின் இருப்பு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

சில பிரதிபலிப்புகள்!

‘அட்டகத்தி’ படம் முழுக்கவே ஒரு கிராமத்திலிருந்து சென்னை எனும் பெருநகரத்திற்குக் கல்வி கற்க வரும் ஒரு கல்லூரி இளைஞனை மையப்படுத்தி இருந்தது.

பதின்ம வயதின் முடிவில் தொடங்கித் திருமண வாழ்வில் அந்த நபர் கால் பதிப்பது வரை, பல நிகழ்வுகளை உள்ளடக்கியதாக இருந்தது அப்படத்தின் கதை.

என்னதான் காதல் தான் அக்கதையின் அடிப்படை ஒரு மண்ணின், அது சார்ந்த மனிதர்களின் வாழ்க்கை முறையும் கலாசாரமும் நிறைந்திருந்தது என்று சொல்வதே மிகச்சரியானது.

அதனாலேயே, அந்தப் படம் சுவாரஸ்யமானதாக ரசிகர்களுக்குத் தெரிந்தது.

இரண்டாவதாக ரஞ்சித் இயக்கிய ‘மெட்ராஸ்’ படம் குறித்த அறிவிப்பு வெளியானபோது, பெருநகரத்தில் வாழும் சில மனிதர்களின் கதையாகவே அதுவும் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

ஆனால், அந்தப் படத்தில் சமகால அரசியல் கட்சிகள் குறித்தோ, அவை வார்த்துள்ள சமூகச் சூழல் குறித்தோ, அதன் நுட்பங்களைப் புரிந்தும் புரியாமலும் வாழும் சாதாரண மக்கள் குறித்தோ மாபெரும் விமர்சனங்கள் இடம்பெற்றிருக்கும் என்று எவரும் எதிர்பார்க்கவில்லை.

காரணம், அதுவரை அப்படத்தின் நாயகன் கார்த்தியை ஒரு ‘கமர்ஷியல் பட ஹீரோ’வாகவே நாம் கண்டு வந்ததுதான்.

’மெட்ராஸ்’ படத்தின் மையமாக, ஒரு குடியிருப்பின் சுவரைக் காட்டியிருந்தார் பா.ரஞ்சித். கபாலியிலும் காலாவிலும் அத்தகைய கதை சொல்லல் நிச்சயமாக இல்லை என்று சொல்லலாம்.

ஆனால், ரஜினிகாந்த் எனும் சூப்பர்ஸ்டாரை இதுவரை திரையில் இப்படிப் பார்த்ததில்லை என்று சொல்லும் வகையிலான காட்சி சித்தரிப்பு அப்படங்களில் இருந்தன.

அதையும் தாண்டி, இப்படியொரு நடிப்பை சமீபகாலமாக ரஜினி வெளிப்படுத்தி பார்த்ததில்லை என்றும் சொல்லும்படியாகவும் அவை அமைந்தன.

ஐந்தாவதாக படமாக அமைந்த ‘சார்பட்டா பரம்பரை’யானது பெரிய திரையில் வெளியாகாமல் ஓடிடியில் வந்தது. ஆனால், அது ஏற்படுத்திய தாக்கம் அசாதாரணமானதாக இருந்தது. அப்போது, ‘இந்தப் படம் தியேட்டர்ல வருமா’ என்று ரசிகர்கள் கேட்குமளவுக்கு வரவேற்பையும் பெற்றது.

‘இனிமே நம்ம காலம்தான்’ என்று சொல்கிற வசனம் எந்தக் காட்சிக்கு முன்னால், எந்தக் காட்சிக்குப் பின்னால் அமைந்தால் சாலச்சிறந்ததாக இருக்கும் என்ற கணிப்பு ரஞ்சித்திடம் நிறைந்திருக்கிறது.

அதனாலேயே, ’சார்பட்டா பரம்பரை’யின் ஒவ்வொரு பிரேமிலும் ‘கமர்ஷியல் படத்திற்கான அத்தனை சுவாரஸ்ய அம்சங்களையும்’ நிறைத்திருந்தார்.

அந்த தெளிவும் திறமையுமே, அவரை ‘நட்சத்திரம் நகர்கிறது’ மாதிரியான பரிசோதனை முயற்சிகளில் இறங்க வைக்கிறது.

இப்படங்கள் எல்லாவற்றிலும் தனது தனிப்பட்ட அனுபவங்கள் தொடர்பான சிலவற்றை இடம்பெறச் செய்திருக்கிறார் பா.ரஞ்சித். அந்தப் பிரதிபலிப்புகள் தான் அப்படங்களுக்கான கச்சாப் பொருள்.

சட்டென்று அதீதமாக உணர்ச்சிவயப்பட்ட மனநிலைக்கு ஆளாகும் தனது இயல்பு அதற்குச் சரியானதாக இருக்காது என்று தெரிவித்திருந்தார்.

அந்த வார்த்தைகள், அவரது அனுபவங்களின் அடிநாதம் எப்படிப்பட்டதாக இருக்குமென்ற கேள்விகளை எழுப்புகின்றன.

ஒரு திறவுகோல்!

ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வையும் கலாசாரத்தையும் சொல்கிற படங்கள் இதற்கு முன்னும் வந்திருக்கின்றன.

மலையாளம், பெங்காலி மொழிகளில் வருவது போன்று தமிழில் யதார்த்தத்திற்கு நெருக்கமானதாக அந்தப் படங்கள் இருந்ததில்லை. போலவே, அவை பறவைப் பார்வையில் கருத்து சொல்வதாகவும் இருந்தன.

அவற்றில் இருந்து விலகி, உண்மைகளைத் தெளிவாகக் காண உதவும் ‘பூதக்கண்ணாடி’யாக அமைந்தன பா.ரஞ்சித்தின் படங்கள்.

பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு, ரைட்டர், சேத்துமான், நட்சத்திரங்கள் நகர்கின்றன, பொம்மை நாயகி, ப்ளூஸ்டார், ஜெ பேபி, பாட்டில் ராதா என்று தொடர்கிறது அந்த வரிசை.

அப்படங்கள் ஒவ்வொன்றிலும் கதை சொல்லல் வெவ்வேறுவிதமாக அமைந்தன. அவை ரசிகர்களின் நெஞ்சங்களில் பாய்ச்சலை ஏற்படுத்தின.

இதனிடையே, சமூகத்தின் அடித்தட்டில் வாழ்கிற மக்கள் குறித்த திரைப்படங்கள் வேறு சில இயக்குனர்கள், தயாரிப்பாளர்களிடம் இருந்தும்  வெளிவரத் தொடங்கியிருக்கின்றன.

அந்த வகையில், பா.ரஞ்சித் ஒரு திறவுகோல் ஆகச் செயல்பட்டிருக்கிறார் என்றும் சொல்ல முடியும்.

புதிய திசையில்..!

சென்னை நுண்கலைக் கல்லூரியில் பயின்றவர் பா.ரஞ்சித். அதனாலோ என்னவோ, மக்களிடம் பிரபலமாகாத கலைகளை, இதுவரை பொதுவெளியில் வெளிப்படுத்தப்படாத படைப்புகளைச் சொல்கிற வகையில், தமிழ்நாட்டின் மூலைமுடுக்கில் இருக்கும் சிறந்த கலைஞர்களை அடையாளம் காண்கிற வகையில் சில முயற்சிகளை முன்னெடுத்திருக்கிறார்.

மார்கழியில் மக்களிசை, தி காஸ்ட்லெஸ் கலெக்டிவ் போன்றவை இசைத்துறையில் மாற்றங்களை முன்னெடுக்கும் வகையில் செயல்படுத்தப்படுகின்றன.

நீலம் பண்பாட்டு மையம் வழியே வானம் கலைத் திருவிழாவை நான்கு முறை நடத்தியிருக்கிறார்.

கூகை திரைப்பட இயக்கம் வழியே இலக்கியத்திற்கும் திரைப்பட ஆக்கத்திற்கும் இடையே ஒரு பிணைப்பை உருவாக்க முயன்றிருக்கிறார். கூகை எனும் நூலகத்தையும் மக்கள் பயன்பாட்டிற்காக அமைத்திருந்தார்.

அரசியல், சமூகம் சார்ந்து பொதுவெளியில் கருத்துகளைத் தெரிவிப்பது கலைஞர்களின் கடமை என்றால், அதன் அடுத்தகட்டமாகவே இச்செயல்பாட்டினை நோக்க வேண்டும்.

அனைத்தையும் தாண்டி, இன்றும் மக்களோடு மக்களாகத் தனது இருப்பும் செயல்பாடும் அமைய வேண்டும் என்று மெனக்கெடுகிறார்.

இவையனைத்துமே அவரைப் பின்பற்ற நினைக்கிற, அவரது படைப்புகளைக் காண்பதில் ஆர்வம் காட்டுகிற இளைய தலைமுறையினருக்கும் நம்பிக்கை அளிப்பதாக உள்ளன. எதிர்காலத்திலும் இது தொடர வேண்டும். புதிய திசைகளில் பயணித்து, பல வித்தியாசமான திரைப்படைப்புகளை பா.ரஞ்சித் தர வேண்டும் என்பதே நமது விருப்பம்.

நாற்பத்தி மூன்றாவது வயதில் அடியெடுத்து வைக்கும் இயக்குனருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!

– மாபா

You might also like