ஆரியம் – திராவிடம் – தமிழ்த் தேசியம்: ஆழமான விவாதம் தேவை!

முனைவர் துரை.ரவிக்குமார் எம்.பி.

வரலாற்றறிஞர் நீலகண்ட சாஸ்திரி 60 வருடங்களுக்கு முன்பு பாட்னா பல்கலைக் கழகத்தில் ஆற்றிய 4 உரைகளில் பின்வரும் சில கருத்துகளைத் தெரிவித்துள்ளார்:

“உலகின் அனைத்து நாடுகளிலும், பூமியின் பரவலாகப் பிரிக்கப்பட்ட அட்சரேகைகளுக்கு இடையே உள்ள உடலமைப்பு மற்றும் தட்பவெப்ப நிலைகளில் உள்ள வேறுபாடுகள் காரணமாக வடக்கு மற்றும் தெற்குக்கு இடையே எதிர்மறைப் பண்பு (polarity) உருவானது.”

“இந்தியாவில், இந்த எதிர்மறைப் பண்பு காலங்காலமாக நீடித்து வரும் மொழி மற்றும் கலாச்சாரங்களில் உள்ள வேறுபாடுகளை சில நவீன அனுமானங்கள், அடிப்படையில்லாத கருத்துகள் மூலம் வலியுறுத்தப்படுகிறது.

இத்தகைய எளிமையான அனுமானங்களில் குறிப்பிடத்தக்கது ஆரியர், பிராமணர் மற்றும் சமஸ்கிருதம் ஆகியவற்றை இந்தியாவின் வடக்குப் பகுதியோடும்; திராவிடம், பிராமணர் அல்லாதவர்கள், தமிழ் ஆகியவற்றை இந்தியாவின் தெற்குப் பகுதியோடும் அடையாளப் படுத்துவதாகும்”

“சுமார் பத்தாயிரம் ஆண்டுகள் நீண்ட இடைவெளியில் தழைத்தோங்கி, சில இந்து சமயத் தெய்வங்களையும் சங்க உறுப்பினர்களுள் உள்ளடக்கிய முச்சங்கங்களின் கதையை கி.பி. எட்டு அல்லது ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த இறையனார் அகப்பொருள் உரைக்கு முன்பு எவரும் அறிந்திருக்கவில்லை”

“ஹரப்பாவின் சிந்து சமவெளி நாகரிகமும் அதன் எழுத்துகளும் தமிழர்களின் படைப்புகள் என்ற கூற்று அறிவியல் புலமை உலகத்தால் நிராகரிக்கப்பட்டது”

நீலகண்ட சாஸ்திரியின் இந்தக் கருத்துகள் கடந்த 60 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட மொழியியல், அறிவியல் ஆய்வுகளால் எவ்வாறு உறுதி செய்யப்பட்டன அல்லது மறுக்கப்பட்டன என்பதை விவாதிக்க வேண்டிய நேரமிது.

தமிழ்நாட்டு அரசியல் தளத்தில் முன்வைக்கப்பட்டு வரும் ஆரியம் எதிர் திராவிடம்; திராவிடம் எதிர் தமிழ் என்ற கருத்தாடல்களை விரிவாகவும் ஆழமாகவும் புரிந்துகொள்ள இந்த விவாதம் தேவை.

– முனைவர் துரை.ரவிக்குமார் எம்.பி.

You might also like