ஜானகி எம்.ஜி.ஆர்: நூற்றாண்டு கடந்து வாழும் நினைவுகள்!
முனைவர் குமார் ராஜேந்திரன்
“தோட்டத்தம்மா” என்றுதான் எங்கள் பாட்டியும் தமிழகத்தின் முதன் பெண் முதலமைச்சருமான வி.என்.ஜானகி அம்மா அவர்களை அழைப்போம்.
அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கு உட்பட்ட வைக்கத்தில் 1923-ம் ஆண்டு நவம்பர் 30-ம் தேதி பிறந்தார், வைக்கம் நாராயணி ஜானகி என்ற வி.என்.ஜானகி.
ஜானகி அம்மாவின் தந்தையான ராஜகோபால் அய்யர், தற்போதைய நாகப்பட்டினம் மாவட்டம் போகலூரைச் சேர்ந்தவர். தமிழாசிரியரான இவர், திரைப்படங்களுக்கும் பாடல் எழுதியிருக்கிறார். இவருடன் பிறந்த சகோதரர்தான் திரைப்படப் பாடல்களுக்கு பேர் போனவரான பாபநாசம் சிவன்.
கும்பகோணத்தில் பள்ளிப் படிப்பை முடித்த ஜானகி அம்மா, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஆங்கிலம், மராட்டியம் என்று பல மொழிகளைக் கற்றுக்கொண்டார்.
பரதம், மோகினி ஆட்டம், குச்சிப்புடி போன்ற கலைகளும் தெரியும். சிலம்பம், கத்திச் சண்டை போன்ற தற்காப்புக் கலைகளை அறிந்திருக்கிற ஜானகி, பரதக் கலைஞரான பத்மா சுப்ரமணியத்தின் தந்தையான இயக்குநர் கே.சுப்ரமணியம் உருவாக்கிய ‘நிருத்யோதயா’ நடனப் பள்ளியில் முறையான நடனம் கற்றுக் கொண்டவர்.
நாட்டியக் குழுவிலும் சேர்ந்து பல மாநிலங்களுக்குச் சென்று நடனமாடிய இவரை, தமிழ்த் சினிமாவுக்கு அழைத்து வந்தவர் கே.சுப்ரமணியம்.
1937-ம் ஆண்டில் துவங்கி, கதாநாயகியாகவும் நடனக் கலைஞராகவும் இவர் நடித்திருக்கிற படங்கள் 31. இறுதியாக அவர் நடித்த நாம் திரைப்படம் 1953-ல் வெளிவந்தது.
சாந்த சக்குபாய், சகுந்தலா, கச்ச தேவயானி, அனந்த சயனம், ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி, வேலைக்காரி, தேவகி உள்ளிட்ட படங்கள் குறிப்பிடத்தக்கவை.
எம்.கே.தியாகராஜ பாகவதருடன் ‘ராஜமுக்தி’ படத்தில் ஜானகி நடித்தபோது, அதில் உடன் நடித்த எம்.ஜி.ஆருடன் நட்பு உருவாகி இருக்கிறது.
அதைத் தொடர்ந்து மருதநாட்டு இளவரசி, மோகினி, நாம் உட்பட பல படங்களில் எம்ஜிஆருடன் இணைந்து நடித்திருக்கிறார் ஜானகி அம்மா.
அப்போதிருந்தே எம்.ஜி.ஆரின் நிழலைப் போலவே இருந்திருக்கிறார் ஜானகி அம்மா.
மருதநாட்டு இளவரசி படத்தில் எம்ஜிஆர் வாங்கிய ஊதியத்தைவிட ஜானகி அம்மா வாங்கிய ஊதியம் அதிகம்.
31 படங்களில் நடித்ததோடு தன்னுடைய திரை உலக ஈடுபாட்டைக் குறைத்துக் கொண்டாலும் 1956-ல் எம்ஜிஆர் பிக்சர்ஸ் நிறுவனம் துவக்கப்பட்டபோது, அதன் முக்கியமான பங்குதாரர்களில் ஒருவர் ஜானகி அம்மா.
அப்போதே பெரும் முதலீட்டில் எம்ஜிஆர் தயாரித்து, இயக்கி நடித்து மாபெரும் வெற்றி கண்ட ‘நாடோடி மன்னன்’ படத்திற்கு பக்கபலமாக இருந்ததில் இவருக்கு முக்கியப் பங்குண்டு.
1962-ல் எம்.ஜி.ஆருக்கும் – ஜானகிக்கும் பதிவுத் திருமணம் நடைபெற்றது.
ஜானகி அம்மாவின் சகோதரரான நாராயணன் – சீதாதேவி தம்பதியரின் மூத்த மகள்தான் என்னுடைய தாயாரான திருமதி. லதா ராஜேந்திரன்.
எங்கள் அம்மாவும் சரி, நானும் சரி சிறுவயதில் வளர்ந்தது ராமாவரம் தோட்டத்தில்தான். தான் வளர்த்த பிள்ளைகள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறை எடுத்துக் கொண்டார்கள் எம்ஜிஆரும் ஜானகி அம்மாவும்.
ஜானகி அம்மா அடிக்கடி எங்களிடம் சொல்லும் ஒரு வார்த்தையை எங்களால் மறக்க முடியாது.
“எந்தச் சொத்தையும் உன்னிடம் இருந்து பிரிக்கலாம். ஆனால், கல்வி, திறமை, நீ கற்றுக் கொள்ளும் கலைகள் போன்றவற்றை யாராலும் உன்னிடமிருந்து பிரிக்க முடியாது.”
ராமாவரம் தோட்டத்தில் நாங்கள் வளர்ந்தபோது, மாடியில் இருக்கும் எம்ஜிஆருக்கு, காலையில் தினசரிகளை எடுத்துக் கொண்டுபோய் கொடுப்பது என்னுடைய வழக்கம்.
அப்போது, என்னிடம் கல்வியைப் பற்றி சிறுசிறு கேள்விகள் கேட்பார், நாங்கள் அன்புடன் சேச்சா என்று அழைக்கும் எம்ஜிஆர்.
தரையில் உட்கார்ந்து சாப்பிடுவது எம்.ஜி.ஆரின் வழக்கமாக இருந்தது. குடும்பத்தினருடன் அமர்ந்து சாப்பிடுவதை எம்.ஜி.ஆர் விரும்புவார். இனிய முகத்துடன் அவர்களுக்கு உணவைப் பரிமாறுவார் ஜானகி. எளிமையான வாழ்வை வாழ்வதற்கு முன்னுதாரணமாக இருந்தார்கள் இருவரும்.
ராமாவரம் தோட்டத்திற்கு யார், எப்போது வந்தாலும், அவர்கள் சொல்லும் முதல் வார்த்தை, “வாங்க சாப்பிடுங்க” என்பது தான்.
தமிழ்ப் பண்பை ஒவ்வொரு நடைமுறையிலுமே செயல்படுத்தி வந்தவர் ஜானகி அம்மா. காலையில் எழுந்ததும் காலை வணக்கம் என்று சொல்லும்படி எங்களைப் பழக்கப்படுத்தி இருந்தார்.
தமிழர் திருவிழாவான பொங்கல் பண்டிகையன்று தோட்டத்தில் உள்ள அனைவருக்கும் ஒரே மாதிரியான புத்தாடையை வழங்கி பொங்கலை மகத்தானபடி கொண்டாடுவார்கள் எம்ஜிஆரும் ஜானகி அம்மாவும்.
வீட்டிற்கு உதவி கேட்டு வருபவர்களிடம் எம்ஜிஆர் கொடுக்கச் சொன்ன தொகையைவிட கூடுதலான தொகையை அளிப்பது ஜானகி அம்மாவின் வழக்கமாக இருந்தது. இதை நாங்களே பலமுறை நேரடியாகப் பார்த்திருக்கிறோம்.
1967-ல் ராமாவரம் தோட்டத்தில் எம்ஜிஆர் மீது எம்.ஆர்.ராதா துப்பாக்கிச் சூடு நடத்தி, சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும், 1984-ல் அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு அமெரிக்க மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோதும் அவருடனே இருந்து தாயைப் போல எம்.ஜி.ஆரை கவனித்துக் கொண்டவர் ஜானகி அம்மா.
அப்போது, பிரபலமான நாளிதழ் ஒன்று “எமனிடமிருந்து எம்ஜிஆரை மீட்டு வந்தவர்“ என்று ஜானகி அம்மாவைப் பற்றி எழுதியிருந்தது.
அதிமுக துவங்கப்பட்டதிலிருந்து அதன் வளர்ச்சிக்குப் பின்னால், எம்.ஜி.ஆரின் நிழலைப்போல உடனிருந்து அவரை ஆற்றுப்படுத்தி தடையில்லாமல் இயங்கும் சூழலை ஏற்படுத்திக் கொண்டிருந்தார் ஜானகி அம்மா.
சென்னை லாயிட்ஸ் லேன்-இல் எம்ஜிஆரும் ஜானகி அம்மாவும் வசித்தபோது ஜானகி அம்மாவின் சொந்த வருமானத்தில் வாங்கப்பட்ட, அவ்வை சண்முகம் சாலையில் இருந்த மனையும் கட்டடமும்தான் தற்போது அதிமுகவின் தலைமை அலுவலகமாக இருக்கிறது.
திருமண மண்டபமாக இருந்த இடத்தை 1972-ல் அதிமுக துவங்கப்பட்டதும் அதன் அலுவலகமாகப் பயன்படுத்திக் கொள்ள அனுமதித்தார் ஜானகி.
அதற்கு முன்பு, தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு சொந்தக் கட்டடம் இல்லாமல் இருந்த நிலையில், இந்த இடம் தான் அதன் தலைமை அலுவலகமாக இயங்கி இருக்கிறது.
எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றத்தின் தலைமை இடமாகவும் இந்த இடம் செயல்பட்டிருக்கிறது. அதன்பிறகு 1987 – ஜூலை மாதம், கணவரின் விருப்பத்திற்கு ஏற்ப, அந்த இடத்தை கட்சியின் நலனுக்காக தானமாக எழுதிக் கொடுத்தார் ஜானகி.
1987, அக்டோபரில் ஜானகி அம்மாவுக்கு அமெரிக்காவில் இதய அறுவை சிகிச்சை நடந்தபோது, கண்ணீர்விட்டுக் கதறி “என் ஜானு இதைத் தாங்குவாளா?” என்று அரற்றியபடி சாப்பிடாமல் இருந்தார் எம்ஜிஆர். அந்த அளவுக்கு அவர்கள் இருவருக்குமிடையிலான பாசப் பிணைப்பு இருந்தது.
1987-ம் ஆண்டு எம்ஜிஆருடைய மறைவுக்குப் பிறகு தமிழ்நாட்டில் முதல் பெண் முதலமைச்சாரானார் ஜானகி அம்மா.
அப்போதும் மிகப்பெரிய பொறுப்பில் தான் அமர்ந்திருக்கிறோம் என்கின்ற பெருமித உணர்வு அவருக்கு சிறிதும் இல்லை.
அவருடைய ஆட்சி குறுகிய காலத்திலேயே கலைக்கப்பட்ட போது, அதிமுக இரண்டு அணிகளாகப் பிரிந்தது. அப்போது, இரட்டை இலைச் சின்னம் பறிக்கப்பட்டு, அப்போது நடந்த தேர்தலில், ஆண்டிப்பட்டித் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெறாத நிலையிலும், கலங்காத மனநிலையோடு தான் இருந்தார் ஜானகி.
அதன்பிறகு அவர் எடுத்த முடிவுதான் அரசியலில் வியப்பிற்குரிய ஒன்றாகவே தற்போதும் இருக்கிறது.
ஜா – ஜே அணி என்று இரு பிரிவுகளாகப் பிரிந்திருந்த அதிமுகவை ஒன்றிணைத்து ஜெயலலிதாவிடம் கட்சித் தலைமை பொறுப்பை ஒப்படைத்து, கட்சி நிதியையும் ஒப்படைத்து ஜானகி இயங்கிய விதம், நல்ல அரசியல்வாதிக்கு இருக்க வேண்டிய முன்மாதிரிப் பண்பு.
அன்று அவர் எடுத்த இணைப்பு முடிவின் விளைவாக அதிமுக மறுபடியும் பெரும்பலத்துடன் ஆட்சியைப் பிடித்தது.
அதிமுகவின் பிரம்மாஸ்திரமாக வர்ணிக்கப்படும் இரட்டை இலை சின்னத்தை அதிமுகவுக்கே மீட்டுத் தந்த பெருமைக்குரியவர் ஜானகி அம்மையார்.
தற்போதும் எம்.ஜி.ஆரை நன்கு அறிந்தவர்கள் ஜானகி அம்மாவின் பெருந்தன்மையை வியந்து பேசியிருக்கிறார்கள், அண்மையில் பேசிய ரஜினி உட்பட.
இன்றுவரை பொன்விழா தாண்டி அதிமுக எனும் இயக்கம் உயிர்த்துடிப்புடன் இயங்கிக் கொண்டிருக்கிறது என்றால், ஜானகி தன்னுடைய சுயநலம் பாராமல் எடுத்த முதிர்ச்சியான முடிவும் முக்கியமான காரணம் என்பதை மூத்த அதிமுக தொண்டர்கள் நிச்சயம் ஒப்புக் கொள்வார்கள்.
எம்ஜிஆர் எழுதி வைத்த உயிலை அவர் விருப்பப்படியே நிறைவேற்ற முழு ஒத்துழைப்பு அளித்து, வாய்ப்பேச முடியாத, காது கேளாதோர் பள்ளி உருவாவதற்கும்
எம்ஜிஆருக்கான நினைவில்லம் உருவாகி இன்றுவரை செயல்பட்டுக் கொண்டிருப்பதற்கும்
அதிமுக என்கின்ற இயக்கம் இன்றுவரை இயங்கிக் கொண்டிருப்பதற்கும் ஆணிவேராகத் திகழ்ந்தவர் ஜானகி எம்.ஜி.ஆர்.
அன்னை ஜானகி எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு கடக்கும் இந்த நேரத்தில், எம்ஜிஆர் ‘நினைத்ததை முடிப்பவன்’ படத்தில் “என் மனதை நானறிவேன், என் உறவை நான் மறவேன்” என்று பாடியிருப்பதைப் போல, ஜானகி அம்மா என்கிற அற்புதமான மனிதர், யாருடைய நினைவிலிருந்தும் அகலாமல் எல்லோர் மனதிலும் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
– வழக்கறிஞர், முனைவர் குமார் ராஜேந்திரன், எம்ஜிஆரின் பேரன்.