‘இப்பல்லாம் யாரு சார் சாதி பார்க்குறா’ என்ற வார்த்தைகளை நகரங்களில், பெருநகரங்களில் சில நொடிகளுக்கு ஒருமுறை கேட்கலாம். ஆனால், கிராமப்புறங்களில் அதனைக் கேட்பது அரிது.
காற்றடித்தால் பெருகி உயரும் நெருப்பு போன்று அங்கெல்லாம் இன்றும் சாதீயம் பரவித்தான் கிடக்கிறது என்பதைச் சொல்கின்றன சமகாலத்தில் வெளியாகும் சில செய்திகள்.
அதனைப் பேசுகிற படமாக அமைந்துள்ளது புதுமுக இயக்குநர் எழில் பெரியவேடியின் ‘பராரி’. இயக்குநர் ராஜு முருகன் வழங்கியுள்ள இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார்.
ஹரிசங்கர், சங்கீதா கல்யாண், குரு ராஜேந்திரன், சாம்ராட் சுரேஷ், புகழ் மகேந்திரன், பிரேம்நாத் உள்ளிட்ட பலர் இதில் நடித்திருக்கின்றனர்.
சரி, திரையில் எப்படிப்பட்ட அனுபவத்தைத் தருகிறது ‘பராரி’?
‘பராரி’ கதை!
திருவண்ணாமலை அருகேயுள்ள ராஜாபாளையம் எனும் கிராமம். ஊருக்குள் வசிக்கும் குறிப்பிட்ட சாதியினர் தங்களது ஆதிக்கத்தை வெளிப்படுத்த, ஊருக்கு வெளியே வசிக்கும் ஒடுக்கப்பட்ட மக்கள் அதனால் அவதிப்பட்டு வருகின்றனர்.
ஒடுக்கப்பட்ட மக்களில் ஒருவரான மாறன் தனது தங்கை, தந்தையுடன் வசித்து வருகிறார். சிறு வயதில் தன்னுடன் பயிலும் தேவகி மீது அவருக்கு ஈர்ப்பு உண்டு. அவர் வரச் சொன்னார் என்பதற்காக, ஊருக்குள் நடக்கும் தெருக்கூத்து நிகழ்ச்சியைப் பார்க்கச் செல்கிறார் மாறன்.
அதனைக் கண்டதும், தேவகியின் உறவினர்கள் அவரைத் தாக்கி அவமானப்படுத்துகின்றனர். அதன்பிறகு, அவர் தேவகி இருக்கும் திசையை ஏறெடுத்துப் பார்ப்பதே இல்லை. வாலிபப் பருவத்தை எட்டியபிறகும் இது தொடர்கிறது.
ஆனால், மாறன் (ஹரிசங்கர்) மீதான ஈர்ப்பு தேவகிக்குள் காதலாக மலர்கிறது. அதனைப் பலமுறை அவரிடம் வெளிப்படுத்த முயல்கிறார். ஆனால், மாறன் விலகிச் செல்கிறார்.
ஊருக்கு அருகேயிருக்கும் சிறு குன்றினை நெல் காய வைப்பது உள்ளிட்ட பல காரணங்களுக்காக இரு சாதியினரும் பயன்படுத்துகின்றனர்.
ஆனால், அந்த கிராமத்தில் இருக்கும் செங்கல் சூளை உரிமையாளர் (குரு ராஜேந்திரன்) அதனைப் பயன்படுத்தி ஜல்லிக்கல் ஆலை நிறுவ முயல்கிறார்.
அந்த நபரின் உறவினரும் மாறனும் சேர்ந்து அதற்கு முட்டுக்கட்டை இடுகின்றனர். நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அதனைத் தடுத்து நிறுத்துகின்றனர். அதனால், அந்த நபர் மாறனையும் அவரது தெருவைச் சேர்ந்தவர்களையும் ஊரை விட்டு விரட்டத் துடிக்கிறார்.
குடிநீர் தொட்டி இணைப்பை மூடி, அந்தப் பகுதியினருக்குத் தண்ணீர் கிடைக்காமல் செய்கிறார்.
இரு சாதியினருக்கும் பொதுவாக இருக்கும் வேடியப்பன் கோயில் திருவிழாவில் பிரச்சனைகள் எழச் செய்கிறார்.
இந்தப் பிரச்சனைகள் எல்லாம் தேவகிக்கும் மாறனுக்குமான இடைவெளியை அதிகரிக்கின்றன. இந்த நிலையில், தேவகியின் தந்தை அவரைத் தனது உறவினரான ஜெயக்குமாருக்கு (பிரேம்நாத்) திருமணம் செய்து வைப்பதென முடிவு செய்கிறார்.
அதையடுத்து சில நாட்களில் தேவகி, அவரது தந்தை, ஜெய் போன்றோர் கர்நாடகாவில் இருக்கும் ஒரு மாம்பழப் பழச்சாறு ஆலைக்குப் பணி செய்யச் செல்கின்றனர்.
தொழிலாளர்களை அழைத்துச் செல்லும் மேஸ்திரியிடம் தனது தந்தை வாங்கிய கடனுக்காக மாறனும் அவர்களோடு செல்கிறார்.
ஊருக்குள் சாதி வித்தியாசம் பாராட்டி மோதிக்கொள்ளும் இரு பிரிவினரும், இன்னொரு மாநிலத்தில் இன அடிப்படையில் வெறுப்பினை எதிர்கொள்கின்றனர். அந்த ஆலையில் பணியாற்றும் சிலர், தீவிர கன்னட ஆதரவாளர்களாக இருக்கின்றனர். தேவகி மற்றும் மாறனோடு அவர்களுக்கு உரசல் ஏற்படுகிறது.
அதற்கு நடுவே மாறனின் நண்பன் சக்தியும் அந்த ஊரைச் சேர்ந்த தாரா என்ற பெண்ணும் தீவிரமாகக் காதலித்து வருகின்றனர்.
சக்தி – தாரா காதல் என்னவானது? தேவகியின் ஒருதலைக் காதலை மாறன் ஏற்றாரா? தனக்கு நிச்சயம் செய்த பெண் இன்னொருவரைக் காதலிப்பதைக் காணும் ஜெயக்குமார் என்ன செய்தார் என்பது உட்படப் பல சிறிய, பெரிய கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது இப்படத்தின் மீதி.
இந்தப் படத்தின் பலமும் பலவீனமுமாக அதுவே இருக்கிறது. சாதி ரீதியிலான பிரச்சனைக்கு மொழி அடையாளத்தைத் தாங்கிய பிரச்சனையொன்று தீர்வாக அமைவதாகக் காட்ட விரும்பியிருக்கிறார் இயக்குநர்.
கூடவே, அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணம் சிலரது சுயநலமிக்க பணத்தாசை தான் என்றும் சொல்ல விரும்பியிருக்கிறார்.
திரைக்கதையின் இவையனைத்தையும் கலந்திருப்பது, தலைவாழை இலையில் பரிமாறிய விதவிதமான உணவுகளை ஒன்றாக உருட்டி ஒரே கவளமாக்கிக் கையில் தந்தது போலிருக்கிறது.
அது ருசிக்கிறதா என்பது அவரவர் ரசனையைப் பொறுத்தது.
நல்லதொரு முயற்சி!
மிகப்பெரிய அளவில் பிரமாண்டமாகத் தயாரிக்கப்படும் படங்களிலேயே சில காட்சிகள் சொதப்பலாகப் படமாக்கப்பட்டிருப்பதைக் கண்ட ரசிகர்களுக்கு, ‘பராரி’ நிச்சயம் நல்லதொரு அனுபவத்தைத் தரும்.
ஒவ்வொரு காட்சியும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதற்கு இயக்குனர் எழில் பெரியவேடியின் எழுத்தாக்கம் ஒரு காரணம்.
ஆனால், முன்பாதிக் கதையில் பெரிதாகத் திருப்பங்கள் இல்லாமலிருப்பதும், பின்பாதிக் கதையில் எந்தப் பிரச்சனைக்கு முக்கியத்துவம் கொடுப்பது என்று குழம்பியிருப்பதும் கதைக்கருவை நீர்த்துப்போக வைத்திருக்கிறது.
அது மட்டுமல்லாமல், கிளைமேக்ஸில் நிறைந்துள்ள காட்சிகள் வன்முறை என்பதையும் தாண்டி அருவெருப்பூட்டுகின்றன. அதனைக் காட்சிப்படுத்திய வகையில் சில மாற்றங்களைக் கைக்கொண்டிருக்கலாம்.
உண்மையைச் சொன்னால், முன்பாதியில் அங்குமிங்கும் துள்ளிக்குதித்தோடும் திரைக்கதையை ஒரு இழையில் கட்டி இழுத்து வருகிறது ஷான் ரோல்டனின் பின்னணி இசை. ஒருகட்டத்தில், அந்த இசை காட்சிகளின் அடிநாதத்தை அழுந்த அடிக்கோடிடுகிறது. பின்பாதியில் வரும் காட்சிகள், அதற்கேற்ற உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கவில்லை.
சாம்பவா நெஞ்சை ஆளவா, தேமாங்கனி உள்ளிட்ட பாடல்கள் காதல் மெட்டுகளாக அமைந்து நெஞ்சை வருடுகின்றன. இதர பாடல்களும் முதல்முறை கேட்கும்போதே ஈர்ப்பது சிறப்பு.
ஸ்ரீதரின் ஒளிப்பதிவில் ‘டைட்டில்’ காட்சியில் வரும் மாண்டேஜ் நம்மை கட்டி இழுக்கிறது. அந்த ஈர்ப்பினை இறுதிவரை தக்கவைக்கும் வகையில், ஒவ்வொரு காட்சியிலும் கதாபாத்திரங்களின் உணர்வெழுச்ச்சிக்கும் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.
ஏ.ஆர்.சுகுமாரின் கலை வடிவமைப்பில், திருவண்ணாமலை வட்டாரமும் மாம்பழ ஆலையிலுள்ள குடியிருப்பு வளாகமும் திரையில் மிளிர்கின்றன.
சாம் ஆர்டிஎக்ஸின் படத்தொகுப்பு காட்சிகளைக் கனகச்சிதமாக நறுக்கியிருக்கிறது. அதேநேரத்தில், திரைக்கதை ஓட்டத்தை நேர்த்தியாக மாற்றுவதில் இடறியிருக்கிறது.
பயர் கார்த்தியின் சண்டை வடிவமைப்பு, சுரேன் ஜி மற்றும் அழகியகூத்தனின் ஒலி வடிவமைப்பு மற்றும் ஒப்பனை, ஆடை வடிவமைப்பு போன்றவையும் கிராமத்து மனிதர்களின் இயல்பான வாழ்வைத் திரையில் பார்க்கும் உணர்வைத் தருகின்றன.
அதற்கேற்ப, இயக்குனர் குழு அசலான கிராமத்தினர் சிலரை இதில் இடம்பெறச் செய்திருக்கிறது.
படத்தில் நாயகனாக நடித்திருப்பதோடு தயாரிக்கவும் செய்திருக்கிறார் ஹரிசங்கர்.
எம்ஜிஆர் படங்களில் வருவது போன்ற பாத்திர வார்ப்பைக் கொண்டிருக்கிறது அவர் ஏற்றுள்ள நாயக பாத்திரம்.
கிளைமேக்ஸ் காட்சியில் திரையை நோக்கி வசனம் பேசுவதைப் போல சில இடங்களில் புரட்சிகரமாகப் பேசுகிறார்.
அவற்றைத் தவிர்த்தால், அப்பாத்திரத்திற்கேற்ற நடிப்பைத் தந்திருக்கிறார்.
நாயகியாக வரும் சங்கீதா கல்யாண், ’அசல் கிராமத்துப் பெண்ணோ’ என்ற உணர்வை ஏற்படுத்துகிறார். நடனக் காட்சிகளில் மட்டும் ‘இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்’ என்று எண்ண வைக்கிறார்.
ஜெயக்குமாராக வரும் பிரேம்நாத், ஜெகனாக வரும் புகழ் மகேந்திரன் இருவரும் அப்பாத்திரத்திரங்களின் தன்மையை உணர்ந்து திரையில் தங்கள் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கின்றனர். அதுவே இப்படத்தின் பலமாகத் திகழ்கிறது.
போலவே, ஒரு இனக்குழுவின் தலைவராகத் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் வேடத்தில் மிளிர்கிறார் சாம்ராட் சுரேஷ். அவரது பாத்திரத்தின் வடிவமைப்பில் பல ‘உள்குத்து’களை புகுத்தியிருக்கிறார் இயக்குநர்.
இவர்கள் தவிர்த்து மேஸ்திரியாக வருபவர், ஜெயக்குமார், தேவகி, மாறன் பாத்திரங்களின் தந்தையாக நடித்தவர்கள், உறவினர்களாக வருபவர்கள், ஊர்க்காரர்கள், ஆலையில் பணியாற்றுபவர்கள் என்று பலரும் சிறப்பாக நடித்துள்ளனர்.
தனித்தனியாக ‘பராரி’ காட்சிகளைப் பார்க்கும் எவரும் வியக்கும் வண்ணம் இப்படத்தை ஆக்கியிருக்கிறார் இயக்குநர் எழில் பெரியவேடி.
ஆனால், ஒட்டுமொத்தமாக நோக்கினால் ’சிலவற்றைத் தவிர்த்து இன்னும் உள்ளடக்கத்தைச் செறிவாக்கியிருக்கலாமோ’ என்று எண்ண வைக்கிறார். மற்றபடி, இது ஒரு நல்ல முயற்சி என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
குறிப்பாக, தமிழ்நாட்டை விட்டு வெளியே சென்றால் சாதி மத அடையாளங்களைவிட ‘தமிழன்’ என்பதை மட்டுமே சுமக்க வேண்டியிருக்கும் என்று காட்டியிருக்கிறார்.
அந்த வகையில், சாதீயத்தை இன அடையாளம் சுக்குநூறாக்கும் என்பதைச் சொல்லியிருக்கிறார்.
அதையும் தாண்டி, மொழிப் பிரச்சனையின் தீவிரத்தைக் காவிரி விவகாரத்தோடு இணைத்து, படத்தை முடிப்பதில் சற்றே பின்னடைவைச் சந்தித்திருக்கிறார்.
அது மட்டுமே இப்படத்தை ரசிப்பதில் இருக்கும் முக்கியப் பிரச்சனை.
காவிரி நீர் பங்கீடு முதல் உள்ளூர் சாதீயப் பிரச்சனைகள் வரை பலவற்றில் தனிநபர்கள் சிலரது சுயநலமே ’அரசியலாக’ வெளிப்படுகிறது என்பதாக அமைந்துள்ளது எழில் பெரியவேடியின் திரைப்பார்வை. அதனை ஏற்பவர்கள் ‘பராரி’யைக் கொண்டாடுவார்கள்!
– உதயசங்கரன் பாடகலிங்கம்