வெறுப்பு பேச்சுக்களுக்கான வினைகளை எதிர்கொள்ள வேண்டும்!
‘பிதற்றலைப் பொறுத்துக் கொள்ள முடியாது’ என நீதிபதி காட்டம்
சென்னை ராஜரத்தினம் மைதானம் அருகே கடந்த 3 ஆம் தேதி ‘இந்து மக்கள் கட்சி’ சார்பில், பிராமணர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய, தனிச்சட்டம் இயற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற திரைப்பட நடிகை கஸ்தூரி, தெலுங்கு மொழி பேசுவோர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை பதிவு செய்தார்.
இதன் வீடியோ காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, ‘தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறாக பேசிய கஸ்தூரி மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, சென்னை மற்றும் மதுரை காவல்துறை ஆணையர் அலுவலகங்களில் தெலுங்கு அமைப்புகள் புகார் அளித்தன.
கஸ்தூரி மீது மதுரை திருநகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன்ஜாமின் கேட்டு நடிகை கஸ்தூரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, கஸ்தூரிக்கு முன்ஜாமின் வழங்க, அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதனால் தீர்ப்பை நீதிபதி தள்ளி வைத்தார். இந்த நிலையில், கஸ்தூரியின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் நேற்று உத்தரவிட்டார்.
தனது உத்தரவில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தெரிவித்துள்ள ஆக்கப்பூர்வமான கருத்துகள் நெற்றிப்பொட்டில் அடித்த மாதிரி உள்ளன.
தீர்ப்பை வாசிக்க ஆரம்பித்த நீதிபதி ‘மனுதாரரின் (கஸ்தூரி) சர்ச்சைக்குரிய பேச்சை கேட்டபோது, அவர் குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பெண்களுக்கு எதிராக நேரடியாக எதுவும் பேசவில்லை – எனினும் தெலுங்கு பேசும் அனைத்து மக்களையும் மோசமாக சித்தரித்திருப்பது தெரிகிறது‘ என குறிப்பிட்டார்.
தொடர்ந்து, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தனது தீர்ப்பில் அர்த்தம் பொதிந்த வார்த்தைகளை அடுக்கி கொண்டே சென்றார். கஸ்தூரிக்கு மட்டுமல்லாது, தரக்குறைவான சொற்களை பிரயோகம் செய்யும் பலருக்கும், நீதிபதியின் அறிவுறுத்தல் பொருந்துவதாக இருந்தது.
‘பேச்சு சுதந்திரம் என்பது அடிப்படை உரிமை – அதே நேரத்தில், பேச்சுரிமை என்ற பெயரில் வெறுப்புணர்வைப் பரப்பவோ அல்லது சமூக மோதல்களை ஏற்படுத்தவோக் கூடாது –மனுதாரரின் பேச்சு, வெறுப்பு பேச்சாகவே உள்ளது – சமூக வலைதளங்களிலும் அந்தப் பேச்சு வெடிகுண்டுபோல பரவியுள்ளது.
பொதுமேடைகளில் இது போன்ற பிரச்சினைகளை பேசும்போது, ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வேண்டும்- சமூக ஊடக காலத்தில் நாம் பேசுவது, சமூக வலைத்தளங்களில் நிரந்தரமாக பதிவாகி விடும் –பன்முகத்தன்மை கொண்ட நாட்டில், ஒரு குறிப்பிட்ட பிரிவினரை மொழியின் அடிப்படையில் இழிவு படுத்தும்போது சகிப்பு தன்மை இல்லாமல் போய்விடும்.
மனுதாரரின் ‘எக்ஸ்’ வலைதள பதிவை பார்க்கும்போது, அவர் மன்னிப்பு கேட்க உண்மையாக முயற்சி மேற்கொண்டதாக தெரியவில்லை – தனது பேச்சை நியாயப்படுத்தவே முயற்சித்துள்ளார் –இது போன்ற பிதற்றல்களை பொறுத்துக்கொள்ள முடியாது என்ற செய்தியை சம்மந்தப்பட்ட அனைவரும் அறிய வேண்டும்.
தரக்குறைவாக பேசுவோர் மீது வழக்கு தொடரப்பட்டால், அதில் இருந்து தப்பிக்க மன்னிப்பு கோரினாலும், இனி ஏற்கப்படாது எனும் வலுவான செய்தியை நீதிமன்றம் அனுப்ப வேண்டும் –இல்லையெனில் யார் வேண்டுமானாலும், வெறுக்கத்தக்க பேச்சுக்களை பேசிவிட்டு, அதில் இருந்து தப்புவதற்கு மன்னிப்பு கேட்கலாம் என்றாகிவிடும்.
வெறுப்பு பேச்சுக்களுக்கான வினைகளை எதிர்கொள்ள வேண்டும் – வார்த்தைகளை கருணையுடன் கையாளுங்கள் – வெறுப்பை காட்டிலும், புரிதலையும், இரக்கத்தையும் வளர்க்கும் உரையாடல்களை மேற்கொள்வோம் – இவ்வாறு செய்வதன் மூலம் பேச்சு சுதந்திரத்தின் உண்மையான சாராம்சத்தை மதிப்போம்.
ஒற்றுமை, முன்னேற்றத்துக்கான ஒரு கருவி – இதன் அடிப்படையில் மனுதாரரின் முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’ என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால் நடிகை கஸ்தூரி எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என தெரிகிறது. கஸ்தூரியை கைது செய்ய மதுரை மாநகர காவல்துறையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
-மு.மாடக்கண்ணு.
#நடிகை_கஸ்தூரி #actress_kasthuri_bail_plea_dismissed #actress_kasthuri #நீதிபதி_ஆனந்த்_வெங்கடேஷ் #உயர்நீதிமன்ற_மதுரைக்கிளை #madurai_highcourt #justice_ananth_venkatesh