மருத்துவர்கள் மீது நிகழ்த்தப்படும் தாக்குதல்கள்: முடிவெடுப்பது யார்?

தாய் தலையங்கம்:

அதிர்ச்சியூட்டக் கூடிய விதத்தில் நிகழ்ந்திருக்கின்றன – சென்னையில் இரு மருத்துவர்கள் மீது அண்மையில் நடந்திருக்கிற தாக்குதல்.

கிண்டியில் உள்ள அரசு உயர் சிறப்பு மருத்துவமனையில் கேன்சர் சிகிச்சை மருத்துவரான பாலாஜி மீது கொடுமையான தாக்குதல் நிகழ்த்தப்பட்டிருக்கிறது.

தனது தாயாரின் சிகிச்சை குறித்த சந்தேகத்திற்குப் பதிலை எதிர்பார்த்த நிலையில் மருத்துவர் பாலாஜியை சந்திக்கச் சென்ற இளைஞர், கத்தியால் மருத்துவரின் உடலில் குத்தித் தாக்கியதில் மருத்துவர் தற்போது சிகிச்சையில் இருக்கிறார்.

எதிர்கட்சிகளும் இந்திய மருத்துவ சங்கமும் இந்த தாக்குதலை கண்டித்திருக்கிறார்கள். தாக்குதலை நிகழ்த்திய இளைஞர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

அதே நாளில், சென்னையில் உள்ள ஸ்டான்லி மருத்துவமனையில் உளவியல் மருத்துவரான ஹரிஹரனை ஏதோ ஒரு அதிருப்தி உருவாகி தாக்கியிருக்கிறார் இன்னொரு இளைஞர்.

இரண்டு சம்பவங்களுமே அரசு மருத்துவமனைகளில் நடந்திருக்கின்றன. பயிற்சி மருத்துவர்கள் உள்ளிட்ட பலரும் இந்தத் தாக்குதலுக்கு எதிராக பாதுகாப்புக் கோரி போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். ஊடகங்களில் இந்த தாக்குதல்கள் பெரும் பேசுபொருளாக மாறியிருக்கிறது.

மேற்கு வங்கத்தில் பெண் மருத்துவருக்கு எதிரான வன்முறை நிகழ்ந்து அவர் உயிரிழந்த பிறகு நாடு முழுக்க அவருடைய உயிரிழப்புக்கு எதிரான போராட்டங்கள் வலுத்தன. ஒரு மாநிலத்தின் சட்டம், ஒழுங்கு சீர்குலைவுப் பற்றிப் பெரும் விவாதமே நடந்தது.

இந்த மாநிலங்களில் மட்டுமல்ல, இந்தியா முழுக்கவே பல இடங்களில் பல மருத்துவர்கள் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறார்கள். ஏன், உலகளவில் கூட இதேமாதிரி மருத்துவர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்திருக்கின்றன.

இம்மாதிரி மருத்துவர்கள் மீது நிகழ்த்தப்படும் தாக்குதல்களை நாம் எவ்வாறு புரிந்துகொள்வது?

தன்னுடைய பொறுப்பில் அலட்சியம் காட்டிய மருத்துவர்கள் மட்டுமல்ல, தங்களுடைய பணியில் மிகவும் நேர்மையாக இருந்த மருத்துவர்களும் நோயாளிகளின் தரப்பிலான தாக்குல்களுக்கு இலக்காகி இருக்கிறார்கள்.

சில மருத்துவமனைகளில் யாராவது நோயாளி உயிரிழக்கும் பட்சத்தில், அந்த மருத்துவமனையிலிருந்து நோயாளியின் சடலத்தை வெளியேற்றுவது கூட பெரும் சிக்கலாக உருமாறி விடுகிறது.

மருத்துவம் சார்ந்த அறம் என்பதை மருத்துவர்கள் கடைபிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் நாம், அதே விதமான அறத்தை சிகிச்சைப் பெறச் செல்லும் நோயாளிகளும் அவர்களுடன் உடன் செல்லும் உறவினர்களும் கடைபிடிக்க வேண்டும் என்று சொல்வதுதான் நியாயமான ஒன்றாக இருக்கும்.

எந்த ஒரு மருத்துவரும் தன்னிடம் சிகிச்சை பெற வருகிற நோயாளி நலம் பெற வேண்டும் என்றுதான் விரும்புவார். தனியார் மருத்துவமனைகளில் இந்த பொது விதிக்கு மாறாக சிலர் இருக்கலாம். மருத்துவம் என்பது வணிகமயமான சூழலில் நோயுடன் வருகிறவர்கள் பணம் பிடுங்கப்படும் கருவிகளைப் போல ஆக்கப்பட்டுவிடுகிறார்கள்.

மருத்துவத்தைப் பொறுத்தவரை அதிலும் குறிப்பாக கொரோனா கால கட்டத்தையொட்டி மருத்துவ சேவை என்பது மாபெரும் வணிகமயமான சூழலாக மாற்றி அமைக்கப்பட்டுவிட்டது.

அத்தகைய நிலையில், தனி மனிதர் மீதான இரக்கம் என்பதுகூட இரண்டாம் பட்சமாகி விடுகிறது.

அரசு மருத்துவமனைகளின் மீதும், அரசு மருத்துவர்கள் மீதும் நம்பிக்கை வைத்தபடி அங்கு சிகிச்சைக்கு செல்பவர்களில் பலர் அடித்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தவர்களும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களும்தான்.

அவர்களுக்கான பொருளாதாரச் சூழலில் அரசு மருத்துவமனைகளுக்கு மட்டுமே அவர்களால் செல்ல முடிகிறது. அவர்களின் முதலும் கடைசியுமான நம்பிக்கையும் அதுதான்.

மருத்துவர்களை தாக்கும் வகையில் ஒரு சில சம்பவங்கள் நடந்திருப்பதை வைத்து, சிகிச்சைப் பெற மருத்துவமனைக்கு வரும் அனைவரது பொதுப் புத்தியாக அதை எடுத்துக்கொள்ள முடியாது.

ஆனாலும், இத்தகைய நிகழ்வுகள் நீடித்துக் கொண்டிருப்பது எந்தவிதத்திலும் ஆரோக்கியமானது அல்ல. சிகிச்சை பெற வரும் நோயாளிகளும் மருத்துவர்களிடம் எதிர்பார்க்கும் பொறுப்பும் வரையரைக்கு உட்பட்டதே என்பதை உணர வேண்டும்.

பெரும் எண்ணிக்கையில் அரசு மருத்துவமனையில் வந்து குவியும் ஒவ்வொரு நோயாளிக்கும் தனிகவனம் எடுத்து செயல்படுவதற்கான கால அவகாசம் பெரும்பாலான மருத்துவர்களுக்கு இருப்பதில்லை என்பது தான் பெரும் துயரம்.

இனிமேலாவது காலியாக இருக்கும் மருத்துவப் பணியிடங்களை உரிய நேரத்தில் நிரப்பி ஒட்டுமொத்த மருத்துவர்கள் மீதான பணிச்சுமையைக் குறைக்க வேண்டியது அரசின் கடமை.

#கிண்டி_அரசு_உயர்_சிறப்பு_மருத்துவமனை #கேன்சர் #மருத்துவர்_பாலாஜி #ஸ்டான்லி_மருத்துவமனை #guindy_govt_hostpital #cancer #dr_balaji #stanley_hostpital

You might also like