இலங்கை வாழ் மக்களில் பலர் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளைத் தெரிவு செய்கின்றனர். காரணம், கடல் கடந்தாவது, எப்படியாவது வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதற்கு. ஆனால், அவர்கள் அங்கு சென்று படும் கஷ்டம் பலவகை.
அவர்களில் யாரும் விரும்பிச் செல்வதே இல்லை. அவர்களின் வாழ்க்கை முறைமை அவர்களை அந்த நிலைமைக்குக் கொண்டு செல்கிறது.
இதில் மிகவும் கவலைக்குரிய விடயம் கல்வி கற்ற மாணவர்களும்கூட வெளிநாடுகளுக்கு வீட்டு வேலைக்குச் செல்வது தான். அவர்களிடம் திறமை இருக்கிறது. ஆனால், அதற்கான வாய்ப்புகள் கிடைப்பதில்லை. அது அவர்களின் விதி என்று தான் சொல்ல வேண்டும்.
இலங்கையின் பொருளாதாரம், வேலை வாய்ப்புகள் தனிமனிதனின் வாழ்க்கையில் படும் கஷ்டம், மன உளைச்சல்கள் அனைத்தும் அவர்களை அந்த நிலைமைக்குக் கொண்டு செல்கிறது.
முதலில் வெளிநாடு சென்று உழைத்து வாழ்வில் முன்னேறவேண்டும் என்பதே அவர்களின் ஏக்கமும் ஆசையும் கனவுமாக இருக்கிறது.
சிலருக்கு தன் வாழ்வில் உள்ள குடும்பப் பிரச்சினைகளைத் தாண்டி எங்கேயாவது தூரம் சென்றுவிட வேண்டும் என்று எண்ணத்தில் சிலர் செல்கின்றனர்.
இலங்கையில் மலையகத்தில் பிறந்த 27 வயதுடைய, உயர்க்கல்வி வரை கற்ற ஒரு பெண் தனக்குள் பல திறமைகள் இருந்தும் தன்னுடைய தனிப்பட்ட வாழ்வில் நடந்த நிகழ்வின் காரணமாகவும், மேல் படிப்பிற்கு பணம் இல்லாதமையாலும் தனிப்பட்ட முறையில் வெளிநாட்டில் உள்ள முதலாளி அவர்களின் வார்த்தைகளை நம்பி நாட்டை விட்டு பணம் சேமித்து மீண்டும் படிப்பைத் தொடர்வோம் என்ற எண்ணத்தில் செல்கிறாள்.
அவள் அங்கு சென்று பார்த்த பின்புதான் சில முதலாளி வர்க்கத்தின் மனநிலை புரிய வருகிறது.
தனக்கு மட்டும் அல்ல இவ்வாறு வேலை செய்யும் அனைவருக்கும் இதுபோன்ற நிலைமை தான் என்பதை அனுபவித்துப் புரிந்துக்கொள்கிறாள்.
முதலில் வேலைக்கு அமர்வது வரை மிகவும் கனிவாக நடந்து கொள்கிறவர்கள். பின்னர் அவர்கள் ஒரு அடிமையைப் போல் நடத்துவார்கள். மரியாதை என்பது அவர்களுக்குக் கிடைப்பதே இல்லை .
நாடு திரும்பி வரும் வரை அவர்களுக்கு நிம்மதியான உறக்கம் என்பது இருக்கவே இருக்காது. முதலாளி வீட்டுக் குடும்பத் தலைவர் முதல் சிறிய பிள்ளைகள் வரை அவர்களை ஒரு பொருட்டாகக் கூட மதிப்பதே இல்லை.
முதலாளிமார்கள் சாப்பிட்டு மிஞ்சியதைத் தான் பணியாளர்கள் சாப்பிட வேண்டும். சில நேரம் அதுவும் இருக்காது.
ஒரு தனிமனிதனுக்கு இருக்கக்கூடிய அடிப்படை வசதிகளில் ஒன்று உறக்கம். அதற்குக் கூட அவர்களுக்கு சரியான நேரம், இடம் என்பது இருப்பதே இல்லை.
சமையல் அறையிலும், வீட்டின் ஒதுக்குப் புறமாக இருக்கக் கூடிய இடங்களிலும் உறங்க வேண்டிய நிலைமையாக இருக்கிறது.
அவர்களின் பிள்ளைகள், மட்டு-மரியாதை இல்லாமல் பேசுவது, இழிவுப்படுத்துவது, அவமதிப்பது அடிமட்ட மக்களாக நினைத்து வார்த்தைகளாலும், செயல்களாலும் அவர்களை இழிவுப்படுத்துவது எல்லாம் மிகவும் வேதனைக்குரிய விடயங்கள்.
மேலும், மாதசம்பளம் அங்கு உரிய நேரத்தில் கிடைப்பதே இல்லை. மீறிக்கேட்டால் வார்த்தைகளாலும் காயப்படுத்துவார்கள்.
அது மட்டுமல்ல, அவர்களுடைய குடும்பத்தினர்களையும் சேர்த்து அவமானப்படுத்துவார்கள். இதுபோல் இன்னும் ஏராளமாகச் சொல்லிக் கொண்டு போகமுடியும்.
அவர்கள் என்ன துன்பம் கொடுத்தாலும் வேலை ஒப்பந்தம் முடியும் வரை அங்கு இருந்து வேலை செய்தே ஆக வேண்டும் என்ற நிர்பந்ததிற்கு உள்ளாக்கப்படுகின்றனர்.
வெளிநாட்டிற்கு போய் நெருக்கடிகளுக்கிடையில் உழைக்கும் அனைத்து மக்களுக்கும் இது நடக்கிறது. இதற்கான தீர்வு எப்போது கிடைக்கும்?
– தனுஷா