அமெரிக்க அதிபர் தேர்தல் செலவு – ரூ.9640 கோடி!

அமெரிக்க அதிபர் தேர்தல் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. இப்போதைய அதிபர் ஜோ பைடன் பதவிக்காலம் முடிவடைவதால் நாளை (நவம்பர் – 5) புதிய அதிபரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற உள்ளது.

ஆளும் ஜனநாயகக் கட்சி சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிசும், குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பும் போட்டியிடுகிறார்கள்.

அமெரிக்க தேர்தல் சட்டங்களின்படி, வாக்காளர்கள் தங்களுடைய ஓட்டுகளை முன்னதாகவே செலுத்த முடியும்.

மருத்துவம், வெளியூர் பயணம் என பல காரணங்களால் தேர்தல் நாளன்று வாக்களிக்க முடியாதவர்கள், முன்னதாகவே வாக்களிக்கலாம். தேர்தல் நாளன்று நீண்ட வரிசையில் காத்திருப்பதைத் தவிர்க்கவும் இந்த முறையைப் பயன்படுத்தலாம்.

இந்தத் தேர்தலில், 24.4 கோடி பேர் ஓட்டளிக்க தகுதி பெற்றுள்ளனர். இதில், 6.8 கோடி பேர் முன்னதாகவே தங்களுடைய ஓட்டுகளைப் பதிவு செய்துள்ளனர்.

அமெரிக்காவில், அதிபர், மக்களால் நேரடியாக தேர்வு செய்யப்படுவது இல்லை. மாகாண அளவில் மக்கள் அளிக்கும் வாக்குகள் கணக்கிடப்பட்டு ‘எல்க்டோரல் காலேஜ்’ எனப்படும் தேர்வுக்குழு வாயிலாக அதிபர் தேர்வு செய்யப்படுவார்.

ஒவ்வொரு மாகாணத்துக்கும் உள்ள மக்கள் தொகையின் அடிப்படையில், அந்தந்த மாகாணத்துக்கு தேர்வுக்குழு உறுப்பினர்கள் எண்ணிக்கை இருக்கும்.

அதன்படி, அமெரிக்காவில் உள்ள 50 மாகாணங்களின் தேர்வுக்குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை 538. இதில், 270 உறுப்பினர்களின் ஆதரவை பெறுபவர், அதிபராக தேர்வு செய்யப்படுவார்.

வாக்குப்பதிவு முடிந்தவுடனேயே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்புகளில், கடும் போட்டி இருந்தாலும், ட்ரம்ப்பைவிட கமலா ஹாரிஸ் முன்னிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்துக்காக கமலா சார்பில் 6,640 கோடி ரூபாயும் ட்ரம்ப் சார்பில் 3,000 கோடி ரூபாயும் செலவிடப்பட்டுள்ளது.

– மு.மாடக்கண்ணு

You might also like