ஜப்பானிய ‘அனிமே’ படங்களான வெதரிங் வித் யூ, தி பாய் அண்ட் தி ஹெரான், யுவர் நேம், எ சைலண்ட் வாய்ஸ், ஜுஜுட்சு கைசென், சில்ரன் ஹு சேஸ் லாஸ்ட் வாய்ஸஸ் போன்றவை சமீப ஆண்டுகளில் இந்திய ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன.
அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகைமையில் அமைந்து வெவ்வேறுபட்ட காட்சியனுபவத்தை வழங்குகின்றன.
அந்த வரிசையில் இன்னொன்றாக அமைந்திருக்கிறது, தற்போது தியேட்டர்களில் வெளியாகியுள்ள ‘லுக் பேக்’.
கட்சுகி பியூஜிமோடோ எழுதிய ‘அனிமே’ கதையின் அடிப்படையில் இது உருவாக்கப்பட்டிருக்கிறது. கியோடகா ஓஷியாமா இதனை இயக்கியிருக்கிறார்.
இப்படம் தரும் அனுபவம் எத்தகையதாக உள்ளது?
திரும்பிப் பார்க்கிறேன்..!
அயுமு பியூஜினோ எனும் சிறுமியின் பார்வையில் மொத்தக் கதையும் சொல்லப்படுகிறது.
ஆரம்பப் பள்ளியில் படிக்கும் அந்தச் சிறுமி, நடுநிலைப் பள்ளிக்கு நகரவிருக்கிறார்.
பள்ளி மாத இதழில் அவர் வரையும் ‘அனிமே’ தொடருக்குப் பல மாணவ மாணவியர் தீவிர ரசிகர்கள்.
ஒருநாள், ‘இன்னொரு மாணவி இந்தப் பகுதியில் வரையட்டுமே’ என்கிறார் அந்த இதழுக்கான பொறுப்பாசிரியர்.
அந்த மாணவியின் பெயர் ‘க்யோமோடோ’. அவர் பள்ளிக்கு வராமல் வீட்டிலேயே அடைந்து கிடக்கிறார்.
க்யோமோடோ வரைந்த ‘அனிமே’, அடுத்த மாத இதழில் வெளியாகிறது. அதனைக் கண்டதும் அதிர்கிறார் பியூஜினோ.
காரணம், அவ்வளவு நேர்த்தியாக அந்தக் கோடுகள் இருக்கின்றன. அவரை வெற்றி காணும் நோக்கில், படம் வரைவதை மட்டுமே தனது முழு நேர வேலையாக இருக்கிறார்.
வகுப்பறையில் படிப்பதை, தோழிகளோடு பழகுவதை, இதர களியாட்டங்களை என்று அனைத்தையும் துறந்து ‘வரைவதை’ மட்டுமே கைக்கொண்டிருக்கிறார். அதனை, அவர் சார்ந்த அனைவருமே கண்டிக்கின்றனர்.
ஒருநாள், வரைவதை விட்டுவிட்டு வேறு வேலைகளில் ஈடுபட ஆரம்பிக்கிறார் பியூஜினோ.
பள்ளியை விட்டு பியூஜினோ மாற வேண்டிய காலம். அப்போது, ‘இதனை க்யோமோடோ வீட்டில் கொடுத்துவிடுகிறாயா’ என்று ஒரு சான்றிதழை நீட்டுகிறார் பள்ளி இதழுக்கான பொறுப்பாசிரியர். அவர் எவ்வளவோ மறுத்தும் ஆசிரியர் கேட்பதாக இல்லை.
வேறு வழியில்லாமல், அவர் தந்ததை எடுத்துச் செல்கிறார். க்யோமோடோ வீடு திறந்தே இருக்கிறது. பெயர் சொல்லி அழைத்தாலும், எவரும் வெளியே வருவதாக இல்லை. உள்ளே செல்கிறார் பியூஜினோ. அந்த வீடு முழுக்க, ‘அனிமே வரைவது எப்படி’ என்று சொல்கிற புத்தகங்கள்.
தன்னைப் பார்க்க வராமல் அறைக்குள் க்யோமோடோ இருப்பதை அறிந்து, அங்கிருக்கும் காகிதத்தில் ஒரு ‘அனிமே’ வரைகிறார் பியூஜினோ. அந்த காகிதத்தைக் கீழே வைக்க முயல, அது கைநழுவி அந்த அறைக்குள் செல்கிறது.
அடுத்த நொடி, வெளியே ஓடி வருகிறார் பியூஜினோ. அவரைப் பின்தொடர்ந்து வருகிறார் க்யோமோடோ. அந்த வரைகலை யாருடையது என்று தெரிந்ததனால், அது நிகழ்கிறது.
அப்போது, ‘நான் உங்கள் ரசிகை’ என்று பியூஜினோவிடம் சொல்கிறார் க்யோமோடோ.
உடனே, பியூஜினோவுக்குள் இருக்கும் பொறாமை உருகி வேறொன்றாக உருவெடுக்கிறது. ‘நான் வரையும் அனிமேவுக்கு நீ பின்னணி வரைகிறாயா’ என்கிறார். க்யோமோடோவும் ‘சரி’ என்கிறார்.
இருவரது படைப்புகளும் பல ‘அனிமே’ போட்டிகளில் பரிசுகளை அள்ளுகின்றன. கை நிறையக் கிடைக்கும் பணத்தை இருவரும் இஷ்டப்படி செலவழிக்கின்றனர்.
அதுவரை வீட்டு வாசலைத் தாண்ட முன்வராத க்யோமோடோ, பியூஜினோ கையைப் பிடித்துக்கொண்டு ஊர் சுற்றுகிறார்.
சில ஆண்டுகள் கழிகின்றன. ‘நாம் அனிமே வரையும் நிறுவனத்தில் முழுநேரப் பணியாற்றலாம்’ என்கிறார் பியூஜினோ. ‘இல்லை, நான் பல்கலைக்கழகத்தில் கலைப்பிரிவில் சேரப் போகிறேன்’ என்கிறார் க்யோமோடோ.
அந்த இடத்தில், அந்த நொடியில், க்யோமோடோ மீது வெறுப்பை உமிழ்கிறார் பியூஜினோ. இருவரும் பிரிந்து செல்கின்றனர்.
சில மாதங்கள் கழித்து, க்யோமோடோ பயிலும் இடத்தில் ஒரு மர்ம நபர் துப்பாக்கிச்சூடு நிகழ்த்தியதாகச் செய்தி வெளியாகிறது.
அதனை அறிந்ததும், க்யோமோடோ என்னவானார் என்று அறிய முயல்கிறார் பியூஜினோ. அவருக்கு ஒரு அதிர்ச்சிகரமான செய்தி காத்திருக்கிறது.
அது என்னவென்று அறிந்ததும் பதைபதைக்கிறார். காரணம், அந்த நிகழ்வே அவரால் உருவானதாக உணர்கிறார். அது எப்படி என்று சொல்கிறது இப்படத்தின் மீதி.
‘லுக் பேக்’ எனும் டைட்டிலுக்கு ஏற்ப, இப்படம் முழுக்கப் பியூஜினோ எனும் பாத்திரம் தனது வாழ்வைத் திரும்பிப் பார்ப்பதாக அமைந்துள்ளது.
கூடவே, பொறாமை என்பது கலையை, கலைஞரை இயல்பு பிறழச் செய்துவிடும் என்கிற பாடத்தைக் கற்பிக்கிறது.
இப்படத்தின் மிகப்பெரிய ப்ளஸ், சுமார் 58 நிமிடங்களே இது திரையில் ஓடுகிறது.
பார்க்கலாமா?
பொதுவாக ‘அனிமே’ வகை திரைப்படங்கள், தொடர்கள் குறிப்பிட்ட வயதைத் தாண்டியவர்களுக்காகவே உருவாக்கப்படும். அவற்றில் வன்முறை, ஆபாசம் கொஞ்சம் அதிகமாகத் தென்படும்.
வயது வந்தோருக்கானது என்பதால் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் வாய்க்கும் பிரச்சனைகள், அவற்றின் விளைவுகள், மனிதர்கள் எதிர்கொள்ளும் பாதிப்புகள் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டிருக்கும்.
இந்தப் படமும் அப்படிப்பட்டதுதான். ஆனால், பதின்பருவத்தினர் இக்கதையில் ஈர்க்கப்பட்டால், நல்லதாகச் சில பின்விளைவுகள் நிகழும் என்பது நம் நம்பிக்கை.
டட்சுகி பியூஜிமோடோ எழுத்துக்கு திரை வடிவம் தந்து, இப்படத்தை இயக்கியிருக்கிறார் கியோடகா ஓஷியாமா.
ஹருகா நகமுரா இதற்கு இசையமைத்திருக்கிறார்.
யூமி கவாய், மிஸுகி யோஷிடா இருவரும் இதில் வரும் பிரதான பாத்திரங்களுக்குக் குரல் தந்திருக்கின்றனர்.
இவர்களது பங்களிப்பில், இப்படம் நமக்கு நல்லதொரு அனுபவத்தைத் தருகிறது. இக்கதையில் ‘பேண்டஸி’ அம்சமும் இடம்பெற்றுள்ளது.
‘அவ்வாறு நடக்காமல் போயிருந்தால்..’ என்கிற எண்ணத்தைச் சில காட்சிகள் தருகின்றன. அதற்கான பதிலாக விரியும் காட்சிகள், நமக்கு படைப்பனுபவத்தின் மறுபக்கத்தைக் காட்டுகின்றன.
ஒரு படைப்பாளி தன்னுள் இருக்கும் தீய குணங்களைக் கைவிட்டால், அது படைப்பைச் செழுமையானதாக, செறிவானதாக மாற்றும்.
அதனைக் காணும் மக்கள் செம்மையான வாழ்வை வாழ்வார்கள் என்கிறது ‘லுக் பேக்’.
’நீதிக் கதைகள் கேட்பதும் படிப்பதும் பார்ப்பதும் வழக்கமில்லையே’ என்பவர்களுக்கு இப்படம் பிடிக்காது. மற்றபடி, வேறு கருத்துகள் கொண்ட எவரும் இப்படத்தைக் கண்டு ரசிக்க முடியும்..!
-உதயசங்கரன் பாடகலிங்கம்