தொடர்ந்து உயரும் தங்கத்தின் விலை!

செய்தி:

தொடர் உச்சத்துக்குப் பிறகு தங்கம் விலை சற்று சரிந்தது! –  ரூ. 440 குறைந்து பவுன் ரூ. 58,280-க்கு விற்பனை.

கோவிந்த் கமெண்ட்:

பல்வேறு காட்சி ஊடகங்களிலும் அச்சு ஊடகங்களிலும் தற்போது, அதிலும், தீபாவளி நெருங்கும் நேரத்தில் அவற்றில் வரும் விளம்பரங்களில் பெரும்பாலானவை தங்க நகைக் கடைகளுக்கான விளம்பரங்களாகவே இருக்கின்றன.

அந்த விளம்பரங்களில் வழக்கமாக நடிப்பவர்களும் இருக்கிறார்கள்; வித்தியாசமான தோற்றத்துடன் வந்து தங்கம் வாங்குவதற்கு அறிவுரை வழங்கும் நகைக்கடை உரிமையாளர்களும் இருக்கிறார்கள்.

நாள் ஒன்றுக்கு குறைந்தது 20 முதல் 50 தடவைகளுக்கு மேல் குறிப்பிட்ட நகைக்கடைக்கான விளம்பரங்கள் வந்து கொண்டே இருக்கின்றன.

அதாவது, வீடுகளில் விளம்பரங்களைப் பார்த்துக் கொண்டிருக்கும் நேயர்களை உடனடியாக நகைக் கடைக்கு ஓடிபோய் தங்கம் வாங்கத் தூண்டுமளவுக்கு தொடர்ச்சியான இரைச்சலான விளம்பரங்கள் வந்து கொண்டே இருக்கின்றன.

எளிமையாக இருப்பதே அழகு என்கின்ற கருத்தாக்கத்திற்கு நேர் எதிராக மினி நகைக் கடைகளைப் போல காட்சியளிப்பதே அழகு என்கின்ற அளவுக்கு, இந்த விளம்பரங்கள், வீட்டிலிருக்கும் நமது பெண்மணிகளைத் தூண்டிக்கொண்டே இருக்கின்றன.

இதன் விளைவு அந்தந்த வீட்டிலிருக்கும் சம்பாதிக்கச் செல்பவர்கள் அநியாயத்திற்கு பாடாய்ப்படுகிறார்கள்.

குறிப்பிட்ட நாளில் தங்கம் வாங்குபவர்களுக்கு கெடு விதிக்கும் அளவிற்கு, சில வீடுகளில் இதற்கான பலன்கள் கிடைத்து நகைக்கடை உரிமையாளர்கள் தொடர்ந்து விளம்பரங்களில் சிரித்துக் கொண்டே இருக்கிறார்கள்.

தற்போது ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.58 ஆயிரத்துக்கு மேல் உயர்ந்து அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சம் சரிந்து நகைக்கடை வியாபாரம் மட்டும் உயர்ந்தபடியேதான் இருக்கிறது.

தங்கத்தை வைத்து அதன் மேல் கூடுதலான விளம்பர மதிப்பை ஏற்றி எத்தனை குடும்பங்களை கதிகலங்க வைக்கிறார்கள்!

You might also like