விதவிதமான யூடியூப் வியாதிகள்!

செய்தி:

குழந்தையின் தொப்புள் கொடி வெட்டியதை வீடியோ எடுத்து, வெளியிட்ட விவகாரத்தில் யூடியூபர் இர்பான் மன்னிப்பு கேட்டாலும் விடப்போவதில்லை. – சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திட்டவட்டம்.

கோவிந்த் கமெண்ட்:

யூடியூப் என்கின்ற நவீன தொழில்நுட்பம் நடைமுறைக்கு வந்தாலும் வந்தது, இப்போது ஆளுக்காள் ‘லைக்’குகளுக்காக மோட்டார் பைக்குகளில் சாகசம் காட்டுகிறார்கள், ஆபத்தான விளிம்புகளில் நின்று பார்ப்பவர்களுக்கெல்லாம் பீதி ஊட்டுகிறார்கள்.

அந்த வரிசையைச் சேர்ந்தவர் யூடியூபரான இர்பான்.

ஏற்கனவே, இதேமாதிரி சர்ச்சையூட்டும் யூடியூப் காட்சிகளை வெளியிட்ட பின்புலம் கொண்ட இர்பான், தற்போது குழந்தையின் தொப்புள் கொடியை ஏதோ புது ஓட்டல் திறப்பு விழாவில் ரிப்பன் வெட்டுவதைப் போல வெட்டி, அதை உடனே யூடியூபில் பதிவேற்றி, ஏகப்பட்ட ‘லைக்’குகளை அள்ளியிருக்கிறார்.

இதற்கு தக்க நடவடிக்கை எடுக்கப்போவதாக அறிவித்திருக்கிறார் தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரான மா.சுப்ரமணியன்.

உரிய நடவடிக்கை எடுப்பார்களா என்பதை இனி பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஆனால், இந்த சமயத்தில் ஒன்றை முக்கியமாகச் சொல்ல வேண்டும். இப்படியே யூடியூபில் பார்ப்பவர்களைப் பரவசப்படுத்தும்படியோ அல்லது அதிர்ச்சியூட்டும்படியோ சில காட்சிப் பதிவுகளை வெளியிடுவதுகூட மன வியாதியைப் போல சமூக வலைதளத்தை கையாளும் இளைஞர்கள் மத்தியில் பரவிக் கொண்டிருக்கிறதே. அதை என்ன செய்வது?

You might also like