இந்தியாவின் அறிவியல் சாதனைகளுக்கு மேலும் ஓர் அங்கீகாரம்!

உலக நரம்பியல் கழகத்தின் முக்கிய அங்கமான சர்வதேச மூளை ஆய்வுகள் நிறுவனத்தின் தலைவராக இந்தியாவின் மூத்த பெண் அறிவியலாளர் திருமதி ஷுபா டோல் (Shuba Tole) அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

உலக நரம்பியல் ஆய்வுக்கு அவர் மகத்தான பங்களிப்பை நல்கி உள்ளார்.

குறிப்பாக மூளையின் இயக்கச் செயல்பாடுகளில் உள்ள மரபு சார்ந்த புரிதல்கள், மூளையின் உள்கட்டமைப்பு எவ்வாறு உணர்வுகளைக் கட்டுபடுத்துகிறது.

அதன் மொழி சார்ந்த புரிதல் மற்றும் நினைவகம் குறித்த பல்வேறு அறிவியல் கட்டுரைகளை சர்வதேச அறிவியல் இதழ்களில் வெளியிட்டுள்ளார்.

57 நாடுகளைச் சார்ந்த 69 அறிவியல் குழுமங்கள் அங்கம் வகிக்கும் சர்வதேச மூளை ஆய்வு நிறுவனத்தின் தலைவராக, உயர்மட்ட பொறுப்பிற்கு இவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது இந்தியாவின் அறிவியலுக்கும் பெண்களின் அறிவியல் சாதனைகளுக்கும் கிடைத்துள்ள உரிய அங்கீகாரம் ஆகும்.

1967-ல் இந்தியாவில் பிறந்தவர். இவரது தாயார் அருண் டோலே புற்றுநோய் நோயாளிகளுக்கான செயற்கை உறுப்புகள், எய்ட்ஸ் நோயாளிகளுக்கான பயன்பாட்டு கருவிகள் வடிவமைப்பில் துறைசார் வல்லுனராக இருந்துள்ளார்.

இவரது தந்தை இந்திய மின்னனு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் SAMEER (Society for Applied Microwave Electronics Engineering and Research) என்ற தன்னாட்சி ஆய்வு நிறுவனத்தின் இயக்குனராக இருந்துள்ளார்.

உயிர் வேதியல் Bio Chemistry பட்டப் படிப்பை மும்பை புனித சேவியர் கல்லூரியிலும் முதுகலை மற்றும் முனைவர் ஆராய்ச்சி படிப்பை அமெரிக்கா கலிபோர்னியா தொழில்நுட்பக் பல்கலைக் கழகத்திலும் பின்னர், முதுகலை ஆய்வாளர் படிப்பை சிகாகோ பல்கலைக் கழகத்தில் பயின்றார்.

பின்னர் இந்தியாவின் டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனத்தின் (Tata Institute of Fundamental Research) தனது ஆய்வுகளை மேற்கொண்டார்.

மூளையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுகளில் மூளை வளர்ச்சியில் அமிக்டாலா (Amygdala), கார்டெக்ஸ் (Cortex) ஹிப்போகேம்பஸ் (Hippocampus) என்ற மூளையின் உள் உறுப்புகள் உருவாகும் விதம் அவற்றில் ஒழுங்கு முறை மரபணு LHX2-ன் பங்கு போன்ற நுண்ணிய ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்.

இது குறித்து இணையத்தில் விரிவான குறிப்புகள் உள்ளது.

எடுத்துக்காட்டு, “டாக்டர். டோலின் ஆராய்ச்சிக் குழு பாலூட்டிகளில் நியோகார்டெக்ஸ் எவ்வாறு வந்திருக்கலாம் என்பதற்கான சாத்தியமான வழிமுறையை முன்மொழிந்தது. இது மூளையின் பழைய அமைப்பான அமிக்டாலாவுடன் இணைக்கிறது.

பாலூட்டிகளில் உள்ள துணை ஆல்ஃபாக்டரி பல்பில் இனப்பெருக்கம் மற்றும் ஆக்கிரமிப்பு நடத்தைகளைக் கட்டுப்படுத்தும் கட்டமைப்புகளுக்கான இரட்டை வளர்ச்சி மூலங்களையும் அவரது ஆராய்ச்சி குழு கண்டுபிடித்தது”.

1989 ல் மண வாழ்க்கையில் இணைந்து இயற்பியலாளர் சந்தீப் திரிவேதியை மணந்து இரண்டு புதல்வர்களை ஈன்றெடெத்துள்ளார்.

இந்திய அரசின் அறிவியல் சார்ந்த பல விருதுகளை பெற்றுள்ளார்.

அவரது பல்வேறு வெளீயிடுகள் உலக ஆய்வு இதழ்களில் இடம் பெற்றுள்ளன.

இந்திய அறிவியல் கழகத்தின் பெண் அறிவியலாளர்கள் குழுவின் தலைவராக பணியாற்றி உள்ளார்.

ISDN (International society for development of neuro science) என்ற சர்வதேச நரம்பியல் முன்னேற்ற சமூக நிறுவனத்தின் வருங்கால தலைவராக உள்ளார்.

நரம்பியல் சார்ந்த பல்வேறு உலக அமைப்புகளான ALBA Network என்ற Advocacy for diversity in Neuroscience, Society for Neuroscience SFN மற்றும் சர்வதேச தலவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள IBRO வின் ஆசிய பசிபிக் பிராந்திய தலைவராகவும் ஏற்கனவே பதவி வகித்துள்ளார்.

IBRO வெளியிட்ட அறிக்கையில் திருமதி டோலே அவர்கள் இந்த கழகத்தின் தலைவராக பணியாற்ற இருப்பது உலகம் முழுவதும் நரம்பியல் ஆய்வுகளைச் சரியாக முன்னெடுத்து,

அதன் பரவலாக்கம் அனைத்துத் தரப்பு மக்களையும் நாடுகளையும் உள்ளடக்கி மனித குலத்தின் ஆரோக்கியத்தைப் பேண முழுமையான அறிவியல் பங்களிப்பை மேன்மை அடையச் செய்வதே ஆகும் என தெரிவித்துள்ளார்.

இவரைப் போன்ற உலகம் போற்றும் அறிவியல் அறிஞர்களின் அறிவியல் பங்களிப்பு குறித்த செய்திகளை கல்வி நிறுவனங்கள் மாணவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். ஊடகங்கள் இவரைப் பற்றிய தகவல்களை கட்டுரைகளை வெளியிட வேண்டும்.

“மங்கையா ராகப் பிறப்பதற்கே – நல்ல
மாதவஞ் செய்திட வேண்டும், அம்மா!
பங்கயக் கைந்நலம் பார்த்தலவோ – இந்தப்
பாரில் அறங்கள் வளரும், அம்மா!”
                            – என்ற கவிமணியின் வரிகளுக்கு பெருமை சேர்த்த

பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினிற் பெண்கள் நடத்த வந்தோம்
எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண்கள்
இளைப்பில்லை காண் என்று கும்மியடி

 – என்ற பாரதியின் கனவை மெய்ப்பித்த இந்த அம்மையாரின் சீரிய பணி இன்னும் சிறப்புடன் வளர்ந்திட வேண்டும்.

இவர்களைப் போன்றவர்களே இந்தியாவின் இளைய தலைமுறைக்கான முன்மாதிரிகளாக அமைய வேண்டும்.

– தமிழ்ப் பாலன்

You might also like