ஆலன் – இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம்!

ஒரு கதையை, கவிதையை, நீண்ட நெடிய புனைவை எந்த பாணியில் உருவாக்க வேண்டுமென்பது எழுதுபவரின் கற்பனை சார்ந்தது.

அதனைத் தீர்மானிக்கிற சுதந்திரம் கண்டிப்பாக அதனை வாசிப்பவர்களுக்கு இல்லை. காட்சிப் பதிவுகளுக்கும் கூட அது பொருந்தும்.

அதையும் மீறி ஒரு திரைப்படத்தை விமர்சிக்கும்போது திரைக்கதை இலக்கணம், காட்சிக் கோணங்கள் அமைப்பு, உள்ளடக்கத்தின் தன்மை உட்படப் பலவற்றைப் பற்றி கருத்துகள் வெளிப்படுவது இயல்பு.

அனைத்தையும் மீறி, சில நேரங்களில் இவற்றின் மீது விமர்சனக் கணைகளைப் பாய்ச்ச வேண்டும் என்று தோன்றும். அப்படிப்பட்ட எண்ணத்தை விதைத்த படம், இயக்குனர் ஆர்.சிவாவின் ‘ஆலன்’.

மனோஜ் கிருஷ்ணா இசையமைத்திருக்கும் இப்படத்தில் வெற்றி, அனு சித்தாரா, மதன் குமார், விவேக் பிரசன்னா, ஹரீஷ் பேரடி, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படம் தரும் காட்சியனுபவம் எத்தகையது?

கடவுளைத் தேடுபவன்!

சிறு வயது முதலே எழுத்தில் ஆர்வம் மிக்கவராக இருக்கிறார் தியாகு. தாத்தா, தாய், தந்தை தொடங்கி பக்கத்து வீட்டில் வசிக்கும் தாமரை, அவரது பெற்றோர் என்று பலரும் அதனைப் பாராட்டி ஊக்குவிக்கின்றனர்.

ஒருநாள் தாத்தா இறந்து போகிறார். அவர் எழுதிய உயிலில், அனைத்து சொத்துகளும் மூத்த மகனையே சாரும் என்று குறிப்பிட்டிருக்கிறார். அதனால், குடும்பத்தின் அனைத்து பொறுப்புகளையும் தியாகுவின் தந்தையே ஏற்கிறார். அது, அவரது சித்தப்பாக்களுக்கு எரிச்சல் தரும் விஷயமாக இருக்கிறது.

இந்த நிலையில், தியாகுவின் குடும்பத்தினர் ராமேஸ்வரம் செல்கின்றனர். தாமரையும் அவரது தாயும் கூட அப்பயணத்தில் இருக்கின்றனர். தாமரையின் அருகாமையைப் பிடித்தமானதாகத் தியாகு உணர அந்தப் பயணமே உதவி செய்கிறது.

திடீரென்று அந்த நிலைமை தலைகீழாகிறது. அவர்களை இழந்து தனிமரம் ஆகிறார் தியாகு. தாமரையின் தந்தை அவரைச் சென்னையில் ஒரு மேன்சனில் தங்க வைக்கிறார்.

ஆனால், பெற்றோர் உட்படத் தனக்குப் பிடித்தமான அனைவரையும் இழந்த விபத்தொன்றே தியாகுவின் மனதை ஆக்கிரமிக்கிறது.

அதிலிருந்து விடுபட, ஆன்மிகமே ஒரே வழி என்று எவரிடமும் சொல்லாமல் காசிக்குப் பயணிக்கிறார். அங்கு பத்தாண்டுகளுக்கும் மேலாகத் தங்கியிருக்கிறார். ஆனால், அதிலும் திருப்தி இல்லை.

அதனைத் தொடர்ந்து, தியாகுவை (வெற்றி) ஊர் திரும்புமாறு கூறுகிறார் அவர் தங்கியிருக்கும் மடத்தைச் சார்ந்த குரு (ஹரீஷ் பேரடி). ‘எழுத்தில்தான் உன் ஆர்வம் இருக்கிறது; அதனைச் செவ்வனே செய்’ என்று சொல்லி அனுப்பி அனுப்பி வைக்கிறார்.

வரும் வழியில், ரயிலில் ஜனனி தாமஸ் (மதுரா) எனும் ஜெர்மானியப் பெண்ணைச் சந்திக்கிறார் தியாகு. இருவரும் சென்னையில் ஒன்றாக வந்திறங்குகின்றனர்.

தலை நிறைய முடி, தாடி என்றிருக்கும் தியாகு, கழுத்தில் உருத்திராட்ச மாலையை அணிந்திருக்கிறார். அவருடன் ஒரு வெளிநாட்டுப் பெண் வந்திருப்பதைக் கண்டதும், இருவரையும் பலர் கிண்டலடிக்கின்றனர். அதனை அவர்கள் பொருட்படுத்தவே இல்லை.

சென்னையில் தான் தங்கியிருந்த மேன்சனுக்கு செல்கிறார் தியாகு. அங்கு அந்த மேன்சன் உரிமையாளரின் மகன் கணேசனைச் (கருணாகரன்) சந்திக்கிறார். ஜனனியும் அங்கேயே தங்குகிறார்.

ஜனனிக்கும் தியாகுவுக்கும் இடையே மெல்ல நட்பு வளர்கிறது. அது ஜனனி மனதில் காதலாக மாறுகிறது. ஒருகட்டத்தில், அவர் அதனைத் தியாகுவிடம் தெரிவிக்கிறார். அதன்பின் என்னவானது என்று சொல்கிறது ‘ஆலன்’.

இந்தக் கதையில், மேலும் சில ஆண்டுகள் தியாகு பிச்சைக்காரராக, சாமியாராக, இந்த உலகைச் சுற்றி வருவதாகச் சொல்லப்படுகிறது. அது ஏன் என்று கூறுகிறது இதன் இரண்டாம் பாதி.

இந்தக் கதையில், நாயகன் கடவுளைத் தேடி அலைகிறார். அவரது கவனம் அதில் மட்டுமே இல்லை. தமிழில் எழுதுவதை அவர் ரொம்பவே விரும்புகிறார்.

’அவருக்கு மிகவும் பிடித்த எழுத்தே, அவர் கடவுளை அடைவதற்கான வழி’ என்று இக்கதையில் ஓரிடத்தில் சொல்லப்படுகிறது. ஆனால், அதனை அடிக்கோடிட்டுக் காட்டும்விதமான காட்சியமைப்போ, சித்தரிப்போ இதில் இல்லை.

வட்டமிடும் கதை!

திரைக்கதையின் தொடக்கத்தில், ராமேஸ்வரம் கோயிலில் பதின்ம வயதைச் சேர்ந்த சிறுவனும் சிறுமியும் தேவாரப் பாடலொன்றை வாசிப்பதாகக் காட்டப்படுகிறது.

அப்போது, வெளிநாட்டுப் பெண் ஒருவர் தனது மகளுடன் வந்து அவர்களைச் சந்திக்கிறார். அவர்கள் பேசுவதை, அப்பெண்ணின் கணவர் புகைப்படம் எடுக்கிறார். அதிலிருக்கும் சிறுவன் தியாகு தான்.

பிற்பாடு அந்த புகைப்படமே அவரது வாழ்க்கையின் முக்கியமான தருணங்களைத் தீர்மானிப்பதாகவும் இருக்கிறது.

அந்த வகையில், இந்தக் கதை நேர்கோடாக இல்லாமல் ஒரு வட்டப் பாதையாகத் தெரிகிறது. ஆனால், அது மூக்கை நேராகத் தொடுவதற்குப் பதிலாகத் தலையைச் சுற்றி தொட்ட கதையை நினைவூட்டுகிறது.

நாயகன், நாயகி இருவரும் சாண்டில்யன், பாலகுமாரன் போன்ற எழுத்தாளர்களின் புத்தகங்களை வாசிப்பவர்களாகக் காட்டப்பட்டிருக்கின்றனர்.

நாயகன் எழுதுவதாகக் காட்டும் காட்சிகளில் கூட, அதிக வசனங்கள் இல்லை. அது ரசிகர்களுக்கு அலுப்பூட்டிவிடலாம் என்று நினைத்து இயக்குனர் தவிர்த்திருக்கலாம்.

அதேநேரத்தில், நாயகன் எழுதிய நூலொன்று வாசகர்களால் ஆராதிக்கப்படுவதாகக் காட்டியிருக்கிறார்.

ஒரு பாராட்டுக் கூட்டத்தில் அந்த நூல் பற்றி கவிஞர் மனுஷ்யபுத்திரன், பேராசிரியர் ஞானசம்பந்தன் போன்றவர்கள் பேசுவதாகவும் ஒரு காட்சி வருகிறது. அந்த சித்தரிப்பில் முழுமையை நம்மால் உணர முடிவதில்லை.

மேற்சொன்னவற்றில் இருந்து, தான் சொல்ல விரும்பிய கதையை இயக்குனர் தெளிவாகச் சொன்னாரா என்கிற சந்தேகம் எழுகிறது. அதேநேரத்தில், ‘இதுதான் இயக்குநரின் கதை சொல்லும் பாணியா’ என்ற கேள்வியும் எழுகிறது.

அனைத்தையும் மீறி, கோபாவேசம் கொண்டு மனதைக் கட்டுக்குள் வைக்க முடியாமல் திணறும் ஒருவன் தனக்கான ஆன்மிக வழியைத் தேடிக் கண்டறிவதாகக் காட்டிய வகையில் இப்படம் மனம் கவர்கிறது.

விந்தன் ஸ்டாலினின் ஒளிப்பதிவு வெவ்வேறு களங்களைப் படம் முழுக்கக் காட்டிச் செல்கிறது. சில காட்சிகளில் கவித்துவத்தை நிறைத்திருப்பது மனதைத் தொடுகிறது.

மு.காசி விஸ்வநாதனின் படத்தொகுப்பு, கதையில் தென்பட வேண்டிய நிதானத்தைப் படம் முழுக்கச் சுமந்திருக்கிறது. அதனால், ’காட்சிகள் மெதுவாக நகர்கிறது’ என்ற விமர்சனத்தையும் ஏற்றுக் கொள்கிறது.

உதயகுமாரின் கலை வடிவமைப்பில் கதை நிகழும் களங்கள் நம் கண் முன்னே உயிர் பெற்றிருக்கின்றன.

நாயகன் வெற்றி முகத்தில் ஒட்டியிருக்கும் தாடியும் தலைமுடியும் ‘விக்’ என்பது நன்றாகத் தெரிகிறது. ஒப்பனையில் அதனைக் கொஞ்சம் சரிப்படுத்தியிருக்கலாம்.

இப்படத்திற்கு இசையமைத்துள்ள மனோஜ் கிருஷ்ணா, பாடல்கள் அனைத்தையும் மெலடி மெட்டுகளாக தந்திருக்கிறார். பின்னணி இசையும் காட்சிகளின் தன்மைக்கு ஏற்றவாறு அமைந்து, திரையுடன் ஒன்றச் செய்திருக்கிறது.

ஆக்ரோஷம் கைவரும் அளவுக்கு, அமைதியை நடிப்பில் வெளிப்படுத்த முடியாமல் தவிக்கிறார் வெற்றி.

அவரது ஜோடியாக வரும் மதுரா, தனது கண்கள் மற்றும் சிரிப்பினால் எளிதில் வசீகரிக்கிறார். கமர்ஷியல் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் அம்மணி பின்னியெடுப்பார் என்று நம்பலாம்.

’கேரளத்து பியூட்டி’ அனு சித்தாரா இதில் இன்னொரு நாயகி. ஒரு கோணத்தில் ஸ்ரீவித்யாவை நினைவூட்டுகிறார். அதே போன்று அம்மா, மாமியார் வேடங்களைத் தருகிறோம் என்று நம்மூர் இயக்குனர்கள் அவர் வீட்டு வாசலில் வரிசை கட்டிவிடக் கூடாது.

சாமியார் தோற்றத்தில் இருக்கும் நாயகனைப் பார்த்தவுடன் காதல் கொண்டுவிட்டாரே என்று நாம் யோசிப்பதற்குள், அனு சித்தாரா சம்பந்தப்பட்ட காட்சிகள் திரையில் வந்து விழுகின்றன. அதன்பிறகு வெற்றியையும் அவரையும் ஜோடியாகக் காண்பதில் பிரச்சனை ஏதுமில்லை.

 மதன்குமார், விவேக் பிரசன்னா, மு.ராமசாமி உட்படச் சிலர் இதில் நடித்திருக்கின்றனர். அந்தக் காட்சிகள் இன்னும் வலுவானவையாக அமைக்கப்பட்டிருக்கலாம்.

கொதிநிலையில் இருக்கும் ஒரு இளம் உள்ளம் காலத்தின் ஓட்டத்தில் ஆற்றுப்படுவதைச் சொல்கிறது ‘ஆலன்’.

மென்மையான குரலில், மிக மெதுவாக கதையைச் சொல்வது போன்று அது திரைக்கதையில் நகர்கிறது. இப்படத்தின் மைனஸ் அதுவே. அதனைக் கடந்துவிட்டால் போதும்; ’ஆலன்’ காட்டும் உலகம் தனித்துவமானது என்று விளங்கும்.

இயக்குனர் ஆர்.சிவா, இப்படத்தை எழுதி இயக்கியிருப்பதோடு தயாரித்திருக்கிறார்.

இக்கதையின் வழியே, ஒரு இறகு காற்றில் பறந்த உணர்வை நமக்குள் ஊட்ட முயற்சித்திருக்கிறார். அது ஓரளவுக்குத் திருப்தியும் தருகிறது.

அதேநேரத்தில், ’கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் இதைவிடப் பல மடங்கு செம்மையானதாக இப்படத்தை ஆக்கியிருக்கலாமே’ என்ற அங்கலாய்ப்பையும் உருவாக்கியிருக்கிறார். அதுவே இப்படத்தின் பலவீனம்.

நாயகன், நாயகிகளின் நடிப்பு, இசை மற்றும் ஒளிப்பதிவுக்காக இந்தப் படத்தை ஒருமுறை பார்க்கலாம்.

ஓடிடியில் இப்படம் வெளியாகையில், நம்மூர் ரசிகர்களின் எண்ணவோட்டம் இதுவாகவே இருக்கும்.

அதற்கு முன்னதாகத் திரையரங்கில் பார்க்க விரும்பினால், ஒரு எளிய, நல்ல முயற்சியைப் பார்த்த திருப்தி மட்டும் கிடைக்கும்..!

உதயசங்கரன் பாடகலிங்கம்

You might also like