உதயநிதி டீ-சர்ட் போட்டாலும் அதிலும் பிரச்சனையா?

செய்தி:

தமிழ்நாடு துணை முதலமைச்சரான உதயநிதி ஸ்டாலின், தமிழ்க் கலாச்சார உடை அணியக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அந்த வழக்குக் குறித்த விசாரணை விரைவில் நடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கோவிந்த் கமெண்ட்:

தமிழகத்தை பல கட்சிகள் ஆண்டபோதும் பொதுவாக அமைச்சர்கள் வெள்ளை வேட்டி, சட்டை அணிந்தே வந்திருக்கிறார்கள்.

சில சமயங்களில், அந்தந்த சந்தர்ப்பத்துக்கு ஏற்றபடி வேறு உடைகளும் அணிந்திருக்கிறார்கள். அண்ணாவும் கலைஞரும் கோட் அணிந்த சந்தர்ப்பங்களும் அமைந்திருக்கின்றன.

தற்போது ஆளுநர் கலந்துகொண்ட ஒரு அரசு விழாவில் துணை முதலமைச்சரான உதயநிதி ஸ்டாலின் டீ-ஷர்ட் அணிந்து வந்ததை எதிர்க்கட்சியில் இருக்கிற முன்னாள் அமைச்சரான ஜெயக்குமார் குறிப்பிட்டுp பேசி, “அவருக்கு சட்டை வேண்டுமென்றால், நாங்கள் வாங்கி அனுப்புகிறோம்” என்கிற அளவுக்கு பொதுவெளியில் பேசினார்.

இருந்தபோதும் தற்போது வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொள்ளும்போதுகூட தன்னுடைய வழக்கமான வெள்ளை டீ-ஷர்ட்-வுடன் தான் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார் உதயநிதி ஸ்டாலின்.

தற்போது இந்த டிரஸ்-கோடு விவகாரம் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யும் அளவிற்கு சென்றிருக்கிறது.

தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் அனைவரும் தமிழருக்கான தமிழ் மரபுக்கான டிரஸ்-கோடுடன் தான் இருக்கிறார்களா? அதாவது வேட்டி, சட்டை மற்றும் தோளில் துண்டு இவற்றோடு தான் இருக்கிறார்களா?

தமிழ்நாட்டின் ஆளுநராக இருக்கும் ஆர்.என்.ரவி, தமிழர் மரபை மதித்துக் காப்பாற்றி, அதேவிதமான வேட்டி, சட்டையுடன் தான் காணப்படுகிறாரா? அவர் எப்போதும் ஆளுநர்கள் அணியக்கூடிய அந்தக் கோட்டுடன் தான் காணப்படுகிறார்.

பாஜக தரப்பில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்கள் கூட அதற்கென்று பிரத்தியேகமான ஒரு கோட்டை கைவசம் வைத்து, அதை அணிந்தபடிதான் வருகிறார்கள்.

ஆக, ஒருவருடைய செயல்பாட்டை வைத்து அவரை மதிப்பிடுவது வேறு. அவர் அணியும் உடையை வைத்து, அவர் தமிழ் மரபுக்கு ஏற்றபடி உடை அணிகிறாரா என்பதெல்லாம் பார்த்தால், இதையெல்லாம் ஒரு வழக்காக நீதிமன்றத்தில் எடுத்து விசாரணை செய்தால், தமிழ்நாட்டில் தமிழர்கள் எவ்வளவு பேர் வேட்டி, சட்டையோடு பொதுவெளியில் நடந்து கொண்டிருக்கிறார்கள்?

கேரளாவில் வேட்டி, சட்டை அணிவதைவிட தமிழ்நாட்டில் தமிழர் உடையான வேட்டி, சட்டையை எவ்வளவு பேர் அணிகிறார்கள் என்பதையும் பார்த்தாலே, அந்த டிரஸ்-கோடில் நமக்கு இருக்கும் ஒட்டுதல் புலப்படும்.

ஆக, ஒருவர் என்ன உடை அணிகிறார் என்பதைப் பொறுத்து விமர்சனம் செய்வதெல்லாம் எந்த அளவுக்கு நீதிமன்றத்தில் எடுபடக்கூடிய ஒன்றாக இருக்கும் என்பது கேள்விக்குறிதான்.

You might also like