ஒரு சினிமா என்பது காலத்தின் கண்ணாடியாக இருப்பது பெரிய விஷயம்.
அப்படி ஒரு கண்ணாடியாக தன் சினிமாவை அமைப்பவர்கள் ஒரு சில இயக்குனர்கள் தாம். சிலர் தன் கடந்த காலத்தை நிகழ்காலத்தில் படம்பிடித்து காட்டுவது ஒரு வகை. ‘சுப்பிரமண்யபுரம்’ படத்தில் 80 காலத்தை காட்டியது போல்.
ஆனால், உண்மையான 80 காலம் எப்படி இருந்தது?.
இதை காட்டிய இயக்குனர்களில் தலையானவர் எனச் சொன்னால் அவர் பாக்யராஜ்.
‘சுவரில்லாத சித்திரங்கள்’ என்கிற படம். அதில் கவுண்டமணி ஒரு பெட்டிக்கடை தையலகம் வைத்திருப்பார். இந்த பெட்டிகள் 80 காலத்தில் ஒவ்வொரு சிறு நகரங்களிலும் காணலாம்.
வெற்றிலை பாக்குக் கடை, தையற்கடை, லாட்டரி சீட்டுக் கடை, பூக்கடை என பல கடைகள் இயங்கி வந்தன.
பின்னாளில் 85-க்கு பிறகு அரசே Snack kiosk என்கிற ஸ்டீல் பெட்டிகளை அடித்து ஒவ்வொரு அரசு மருத்துவமனைகளிலும் வைத்து உணவுகளை பரிமாறச் செய்தது.
பாக்யராஜ் ‘சுவரில்லாத சித்திரங்கள்’ படத்தில் வைத்த ஒரு செட் ப்ராப்பர்ட்டி தான் 80 கால வாழ்க்கையில் சிலருக்கு ஆதாரம்.
‘தூறல் நின்னு போச்சு’ படத்தை எடுத்துக் கொள்வோம். இது போல ஒரு க்ளாசிக் படத்தை பார்க்கவே முடியாது. இதில் பெண் பார்க்க பாக்யராஜ் தனது டிராக்டரில் பெற்றோர், உறவினரை அழைத்து வருவார்.
ஒவ்வொரு நிலச்சுவான்தார் வீட்டிலும் மோட்டார் வாகனம் என்றால் டிராக்டர் தான். அது போல எத்தனை கி.மீ ஆனாலும் வாலிபர்களுக்கு சைக்கிள் பயணம் தான்.
கிராமங்களில் சைக்கிளுக்கு அழகான குஞ்சங்கள் தொங்கும் கைப்பிடிகள், சைக்கிள் சக்கரக் கம்பிகளுக்குள் மணியை கோர்த்து விட்டு, சக்கரம் சுழலும்போது மணி எழுப்பும் ஓசைக்காக என அன்றைய வாலிப அண்ணாக்கள் செய்யும் அழகு இன்றைய கேடிஎம் பைக்குக்கு கூட கிடையாது.
இதில் வேறொரு விஷயம் சைக்கிளுக்கு ஆயில் போடும் சிறிய ஆயில் கன். அதை நகைச்சுவை நடிகர் சிவராமன் கையில் ஊற்றி முகத்தில் பூசச் சொல்வார் பாக்யராஜ்.
பாக்யராஜ் சுலோக்சணாவை சந்திக்க வரும்போது அந்த ஊரில் நம்பியார் சிலம்பப் பயிற்சிக்கூடம் வைத்திருப்பார்.
கிராமங்களில் பள்ளி வாத்தியாரோடு, சிலம்ப வாத்தியார், கூத்து வாத்தியார் என பல கலைகளும் அன்றைய கிராமங்களில் இருந்தன. இந்த சிலம்ப வாத்தியார் நம்பியார் தான் ஊருக்குள் மருத்துவரும் கூட.
தடுக்கி விழுந்தால் மருத்துவமனைகள் இருக்கும் இன்றைய காலகட்டத்தில் நமக்கு தெரியாத ஒன்று, கிராம வைத்தியர் தரும் ஒரே வேளை மருந்தில் வைரஸ் காய்ச்சலே ஓடி விடும்.
இதே நேரத்தில் அரசே கிராமத்துக்கு கிராமம் நோயாளிகளை சென்று பார்க்க செவிலியரை நியமித்ததும் உண்டு. புதிய வார்ப்புகள் உஷா போல.
பெரும் நிலம் வைத்து விவசாயம் செய்பவர்களுக்கு பெரும் தொந்தரவு பன்றிகள். இரவில் அவை உள்ளே நுழைந்து பயிரை நாசம் செய்து விடும்.
80-களில் விவசாயிகள் மின்சார வேலி அமைத்து, இரவு ஒன்பது மணிக்கு ஊர் அடங்கியதும் அந்த மின் பவரை ஆன் செய்து விடுவர்.
அதிகாலை ஆஃப் செய்து விட்டு பன்றி அடிபட்டிருக்கிறதா என வேலியை சுற்றித் தேடுவதுண்டு.
பாக்யராஜ் சுலக்ஷணாவுடன் ஓடிப்போக தீர்மானித்து மின் வேலியில் கை வைத்து ஷாக் அடித்து விழுந்து விடுவார்.
ஒரு சமூகச் சூழல் நாயகனின் காதலுக்கு வில்லனாக அமைத்தது பாக்யராஜின் அற்புத சிந்தனை.
இதைத் தாண்டி இப்படி ஒரு பழக்கம் இருந்ததை நாற்பது ஆண்டுகள் கழித்து நமக்கு ஆதாரமாக இருக்கிறது என்பது பெரிய விஷயம்.
‘முந்தானை முடிச்சு’ படத்தில் பாக்யராஜ் ஆசிரியராக இருக்கும் பள்ளிக்கு சத்துணவு வரும். அன்றைய நாட்களில் இன்று போல் பள்ளியில் சமைக்கும் ஆயாக்கள் கிடையாது.
ஒரு இடத்தில் சமைத்து, எல்லா பள்ளிகளுக்கும் சப்ளை தான். அந்த சத்துணவை தான் டிரைவர் நளினிகாந்த் ஒரு ஹோட்டலுக்கு விற்று காசு வாங்குவார். அன்றைய அரசு ஊழியரின் ஊழல் அப்படி.
சத்துணவு இருந்ததும், இப்படி எல்லா பள்ளிகளுக்கும் தரப்பட்டதும், அதை வாங்கி விற்று காசு பார்த்த ஹோட்டல் முதலாளிகளும் இருந்தனர் என்பதற்கு அழகான சாட்சியம் இப்படம்.
நளினிகாந்துக்கும் பாக்யராஜுக்கும் நடக்கும் சண்டைக்காட்சி நமக்கு தெரிவிப்பது சாப்பாட்டில் கூட திருடத் தயங்க மாட்டான் நம் ஆள் என்பதே.
அதே ‘முந்தானை முடிச்சு’ படத்தில் தீபா ஒரு ஆசிரியை. ஈராசிரியர் பள்ளி போல. அன்று கிராமங்களில் ‘அனைவருக்கும் கல்வி’ என்கிற திட்டத்தில் மாணவரல்லாத, படிக்காத வயதானவர்களுக்கு இரவு வகுப்புகள் நடக்கும்.
படிக்காத வயதானவர்களை வகுப்புக்கு அழைத்து எழுத, படிக்கக் கற்றுக்கொடுக்க அரசு எடுத்த முயற்சி, நாம் நம் தமிழர்களை நூறு சதவீத படித்தவர்களாக்க எவ்வளவு முயற்சிகளை கடந்து வந்திருக்கிறோம் என்பதை பறைசாற்றுகிறது.
இன்றைய சிபிஎஸ்இ பள்ளிக் குழந்தைகளுக்கு இப்படியும் பள்ளியும், ஆசிரியர்களும், திட்டங்களும் இருந்தன எனச்சொன்னால் நம்புவார்களா?.
ஊர்வசி போன்ற வயதில் மூத்த, வயதுக்கு வந்த (தடிப்பய மாதிரி சுத்துறா) பெண்கள் சிறுவர்களோடு ஆடு, மாடு மேய்க்க, மாங்காய் அடிக்க கம்மாய்க்கரை, வாய்க்கால் வரப்பெல்லாம் சுற்றி வருவதெல்லாம் இன்று நடக்குமா?.
ரோட்டில் குழி தோண்டி, இலை வைத்து மூடி அதில் எல்லோரையும் விழ வைக்க கிராமங்களில் சிறுவர்கள் செய்யும் அந்த குறும்பு தான் எவ்வளவு அழகு?.
ஒவ்வொரு கிராமத்திலும் அன்று மழலைப் பட்டாங்கள் மாலை ஆறு மணியானால் அடிக்கும் கூத்துகள் அடடா…
இன்னும் நிறைய சொல்லலாம். பாக்யராஜ் என்கிற கலைஞன் ஏதோ சினிமா எடுத்தான், நடனமாடினான், காசு பார்த்தான் என்று சொல்வதைவிட அவர் படங்களில் அவருக்கே தெரியாமல் வைத்த காலக்கண்ணாடிகள் எத்தனை எத்தனை?
கிராமத்துக் காட்சிகளைப் படமாக்கியதில் இவரது குருவும் (பாரதிராஜா) சிஷ்யனும் போட்டிப் போட்டுக் கொண்டிருந்தார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.
எத்தனையோ இயக்குனர்கள் இருந்தும், நூறு படங்களுக்கு மேல் எடுத்தும் இது போன்ற ஒரு காலக் கண்ணாடியாக திரையை காட்ட முடியவில்லையே.
இதே பாக்யராஜ் கூட பின்னாளில் தன்னை முன்னிலைப்படுத்தி நாயகனான போது இந்த சமாச்சாரங்களை மறந்தும் போனார்.
ஆனாலும், அவரின் ஆரம்பகால படங்களை யார் பார்த்தாலும் சமூகச் சூழல் அன்று இப்படி இருந்ததா என ஆச்சர்யப்படுவார்கள். 80க்கு முன்பும் 50 ஆண்டுகள் தமிழ் சினிமா இருந்தது. அப்போதும் இதுபோல் நிகழக்கூடிய படங்கள் இல்லை என்பதும் துரதிஷ்டம்.
அருமை பாக்யராஜ் சார்.
- நன்றி: முகநூல் பதிவு