நகைச்சுவை நடிகராக இருக்கும் ஒருவரை சீரியசான பாத்திரங்களில் பார்த்து ரசிப்பது எளிதாக நிகழாது. அதற்காக, சம்பந்தப்பட்ட நடிகர் தனது நிறைகள் பலவற்றைத் துறக்க வேண்டும்.
பலவீனங்களை எல்லாம் செதுக்கிச் சீர்படுத்தி ‘பலங்களாக’ உணர வைக்க வேண்டும்.
அதற்கான மெனக்கெடலும், அது திரையில் தரும் பலனும் எவராலும் தீர்மானிக்க முடியாதது. போலவே, ரசிகர்கள் அதனை ஆதரிப்பதும் கைவிடுவதும் கூடக் கணிக்க முடியாதது.
அந்த சவாலை ஏற்று, ‘சட்டம் என் கையில்’ படத்தில் ரொம்பவே சீரியசான பாத்திரமொன்றில் தோன்றியிருக்கிறார் சதீஷ்.
‘நாய் சேகர்’, ‘கான்ஜுரிங் கண்ணாயிரம்’ என்று நகரும் அவரது ‘பிலிமோகிராஃபி’யில் குறிப்பிடத்தக்க படமாக அமைந்திருக்கிறது.
சரி, எந்த வகையில் இது வேறுபட்ட காட்சியனுபவத்தைத் தருகிறது?
குற்றமும் விசாரணையும்..!
ஏற்காட்டின் ஒரு பகுதியில் ஒரு பெண்ணின் சடலம் கிடைக்கிறது. அவரது தங்கச் சங்கிலியும் மொபைலும் திருடு போயிருக்கின்றன.
இன்னொரு புறம், ஹெல்மெட் அணிந்து பைக்கில் வரும் நபர் மீது கௌதம் (சதீஷ்) என்பவர் வரும் கார் மோதிவிடுகிறது.
பிறகு, அந்த நபரின் சடலத்தைத் தனது காரின் பின்பகுதியில் ஏற்றுகிறார் கௌதம்.
வரும் வழியில், சோதனைச் சாவடியில் போலீஸ் பிடியில் சிக்குகிறார். அப்போது, எஸ்ஐ பாட்ஷாவை அவர் அடித்துவிடுகிறார்.
காரும் கௌதமும் காவல்நிலையத்தில் இருக்க, இறந்து போன பெண் யார் என்று கண்டறியும் முயற்சியில் இறங்குகிறது காவல் துறை.
இதற்கிடையே, காவல்நிலையத்தில் அதிகாரப் போட்டியில் ஒருவரோடு ஒருவர் மோதுகிற வகையில் எஸ்.ஐ.களான பாட்ஷா (பாவெல் நவகீதன்), நாகராஜின் (அஜய்ராஜ்) நடவடிக்கைகள் இருக்கின்றன.
கௌதம் மீது வழக்கு பதிவு செய்யும் வேட்கையில் பாட்ஷா இருக்க, இளம்பெண் கொலை வழக்கை ‘இஞ்ச் பை இஞ்ச்’ விசாரணை செய்யும் துடிப்பில் இருக்கிறார் நாகராஜ்.
இந்த நிலையில், இளம்பெண்ணிடம் திருடிய நபரை அடையாளம் காண்கின்றனர் போலீசார். அவரது குடும்பத்திற்குத் தகவல் தெரிவிக்கின்றனர்.
வழக்கு விசாரணை அடுத்தகட்டத்திற்கு நகர, காவல் நிலைய வளாகத்தில் நிற்கும் தனது காரில் பிணம் இருப்பது தொடர்பான தடயங்களை அழிப்பதில் மும்முரம் காட்டுகிறார் கௌதம்.
கௌதம் முயற்சி வென்றதா? இளம்பெண் கொலைக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம்? திருட முயன்ற நபர் ஏன் அந்தப் பெண்ணை கொலை செய்தார்? இப்படிச் சில கேள்விகளுக்குப் பதிலளிக்கிறது ‘சட்டம் என் கையில்’ திரைக்கதை.
அந்த திருப்பங்கள் நாம் எதிர்பாராத தருணங்களில் இடம்பெறுவதால், இப்படம் தரும் காட்சியனுபவம் சுவாரஸ்யமானதாக உள்ளது.
இரண்டு குற்றங்கள். அவை தொடர்பான விசாரணைகள் என்று நகர்ந்திருக்க வேண்டிய கதை இது. ஆனால், ஒரு குற்றம் தொடர்பான விசாரணையே இன்னொன்றுக்கும் தீர்வைத் தருவதாகத் திரைக்கதையை வடிவமைத்த வகையில் சிறப்பு பெறுகிறது இப்படம்.
நல்லதொரு காட்சியனுபவம்!
நகைச்சுவை நடிகராக இருந்த சூரி, ரொம்பவே சீரியசான ஆளாக ‘விடுதலை’, ‘கருடன்’, ‘கொட்டுக்காளி’ படங்களில் தன்னை வெளிக்காட்டியிருந்தார்.
அந்த அளவுக்கு இல்லாவிட்டாலும், தன்னை ஒரு குணசித்திர பாத்திரமாக நிறுவும் முயற்சியில் வெற்றி பெற்றிருக்கிறார் சதீஷ்.
அப்பாத்திரத்தின் கதி என்னவாகும் என்ற எதிர்பார்ப்பினைப் படம் முழுக்க தக்க வைத்திருப்பது அருமை.
ரொம்பவே அராஜகமான ஒரு போலீஸ் அதிகாரியாக இப்படத்தில் தோன்றியிருக்கிறார் பாவெல் நவகீதன். அந்த தொனி ஓரிடத்தில் கூட மாறவில்லை என்பது சிறப்பு.
அஜய்ராஜ் இதில் நமக்கு ஆச்சர்யம் தந்திருக்கிறார். கிளைமேக்ஸ் இப்படித்தான் இருக்கும் என்று யூகிக்க முடிந்தாலும், அவரது நடிப்பு ‘டெம்ப்ளேட்’ ஆக நமக்குத் தெரிவதில்லை.
வித்யா பிரதீப் இதில் இரண்டொரு காட்சிகளில் தோன்றியிருக்கிறார். அதில் நிறை, குறை ஏதுமில்லை.
பிளாஷ்பேக்கில் வந்து போகும் ரித்விகாவுக்கும் இப்படத்தில் பெரிய ‘ஸ்கோப்’ இல்லை. ஆனால், செறிவான படத்தொகுப்பில் அவர் முகம் காட்டுமிடங்கள் குறைந்திருக்கின்றன.
இவர்கள் தவிர்த்து மறைந்த ராம்தாஸ், பவா செல்லதுரை, கேபிஒய் சதீஷ், மைம் கோபி, ஜீவா ரவி, வெண்பா என்று பலர் இதில் நடித்திருக்கின்றனர்.
பெரிதாகச் செலவு இல்லாமல், மிகச்சில லொகேஷன்களில் உருவாக்கப்பட்டிருக்கிறது ‘சட்டம் என் கையில்’.
ஆனால், அந்த எண்ணம் எழாதவாறு ஒளிப்பதிவைக் கையாண்டிருக்கிறார் பி.ஜி.முத்தையா.
படத்தொகுப்பாளர் மார்ட்டின் டைட்டஸ், மிகச்சில இடங்களில் மட்டுமே மௌனத்திற்கு இடம் தந்திருக்கிறார். பெரும்பாலும் அவரது ‘கட்’கள் கூர்மையாக அமைந்திருக்கின்றன.
கலை இயக்குனர் பசன் என்.கே.ராகுலின் குழுவினர், முழுப்படமும் காவல் துறையினரின் குற்ற விசாரணையைச் சார்ந்திருப்பதை உணர்ந்து, அதற்கேற்ற களத்தை உருவாக்க முயற்சித்திருக்கின்றனர்.
இந்தப் படத்தின் பெரும்பலம் ஜோன்ஸ் ரூபர்ட்டின் பின்னணி இசை. அவரது பங்களிப்பே, இந்த படத்தின் பட்ஜெட் குறித்த நினைப்பைச் சிதறடிக்கிறது.
நடிப்பு மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பினைச் சரியான முறையில் ஒருங்கிணைத்து, நல்லதொரு காட்சியனுபவத்தைத் திரையில் பெற வழி வகுத்திருக்கிறார் இயக்குனர் சாச்சி.
இறுதியாக வரும் பதினைந்து நிமிடங்கள் தவிர்த்து, ஒரு முழுமையான த்ரில்லர் படமாக இதனைத் தந்திருக்கிறார்.
ஜே.எம்.ராஜாவின் வசனங்களும் காட்சியமைப்பும் அதற்கு உறுதுணையாக இருந்திருக்கின்றன.
காவல்துறையில் இருக்கும் வெவ்வேறு பணியாளர்களுக்கு இடையிலான அதிகாரப் போட்டி, தனிப்பட்ட விமர்சனங்கள் போன்றவை இதில் நுட்பமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
கிடைத்துள்ள உத்தரவாதம்!
அனைத்தையும் தாண்டி, ‘இந்தக் கதையில் ஹீரோவுக்கு என்ன வேலை’ என்ற கேள்வி நம் ஆழ்மனதில் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்கும்.
அதற்குப் பதிலளிக்கும் வகையில் இப்படம் அமைந்துள்ளது.
அருள்நிதி, விதார்த் உள்ளிட்ட ஒரு சில நடிகர்களின் படங்கள் இதற்கு முன்னர் இது போன்றதொரு அனுபவத்தைத் தந்திருக்கின்றன.
அந்த லகானை இறுகப் பிடித்துக்கொண்டால், வெவ்வேறு விதமான படங்களை சதீஷிடம் இருந்து நாம் பெற முடியும். அதற்கான உத்தரவாதத்தைப் புதுமுக இயக்குனர்களுக்கும் கதாசிரியர்களுக்கும் தந்திருக்கிறது ‘சட்டம் என் கையில்’.
அது போன்ற முயற்சிகளைப் பல நடிப்புக்கலைஞர்கள் மேற்கொள்ளும்பட்சத்தில், வேறுபட்ட திரையனுபவங்கள் நமக்குப் பரிசாகக் கிடைக்கும்!
- உதயசங்கரன் பாடகலிங்கம்