பேட்டராப் – பிரபுதேவா ரசிகர்கள் என்ன பாவம் செய்தார்கள்?!

சமீபகாலமாக, தியேட்டர்களில் படம் தொடங்குவதற்கு முன்னால் சிகரெட், மதுப்பழக்கம் தீங்கு விளைவிக்கும் என்ற ‘டிஸ்க்ளெய்மர்’ உடன் ஒரு வீடியோ இணைப்பும் இடம்பெற்று வருகிறது. சில நாட்களுக்கு முன்புவரை, ‘என் வாழ்க்கை இப்படியாகும்னு நான் நினைச்சு பார்க்கலை’ என்று தொண்டையில் புற்றுநோய் தாக்கிய பெண் ஒருவர் மனம் வெதும்புவதாக அக்காட்சி இடம்பெற்று வந்தது. அது தொலைக்காட்சியில் படத்திற்கு முன்னதாக இடம்பெறுவதாக, ‘லப்பர் பந்து’ படத்தில் ஒரு காமெடி உண்டு.

கிட்டத்தட்ட அப்படியொரு நிலைக்கு ஆளாக்கியது ‘பேட்டராப்’ திரைப்படம். பிரபுதேவா, வேதிகா, சன்னி லியோன் கூட்டணியில் ஒரு அசத்தல் காமெடி ஆக்‌ஷன் படம் என்று நம்பி தியேட்டருக்குள் நுழைந்ததற்கு, இயக்குனர் எஸ்.ஜே.சினு தன்னால் என்ன கைமாறு செய்ய முடியுமோ அதனைச் செய்து வழியனுப்பி வைத்திருக்கிறார்.

சரி, இப்படிச் சொல்லும் அளவுக்கு ‘பேட்டராப்’ எப்படியிருக்கிறது?

‘ரொமான்ஸ் டிராமா’ தான்!

பன்னிரண்டாம் வகுப்பு படிக்கையில் ஒரு மாணவனை, அவரது வகுப்பில் படிக்கும் ஒரு மாணவி விரும்புகிறார். அந்த நேரத்தில், அந்த மாணவர் வேறொரு மாணவியுடன் பழகுவதை அறிகிறார். இருந்தாலும், அவர் மனம் மாறுவதாக இல்லை.

அந்த மாணவரின் பெயர் பாலசுப்பிரமணியம். அந்த இரண்டு மாணவிகளின் பெயரை இயக்குனர் நமக்குத் தெளிவாகச் சொல்ல விரும்பவில்லை.

சில ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த பாலசுப்பிரமணியம் (பிரபுதேவா) திரையுலகில் நாயகனாக நடிப்பதற்கு முயற்சித்து வருகிறார். அது கிடைக்காத காரணத்தால் நாயகனுக்கு ‘டூப்’, சிறு பாத்திரங்கள், ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் ரேஞ்சில் பலவாறாகத் திரையில் தலைகாட்டை வருகிறார்.

இந்த நிலையில், ஒருநாள் பாடகி ஜெனி (வேதிகா) உடன் மேடையில் ஆடுவதற்கு பாலாவுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. அப்போது, அவர் போடும் ஆட்டத்தைப் பார்த்து வியக்கிறார் ஜெனி. தொடர்ந்து, இருவரும் பல மேடைகளில் ஒன்றாக ஆடுகின்றனர். அதன் தொடர்ச்சியாக, தனது குழுவில் இணையுமாறு கூறுகிறார். ஆனால், பாலா அதற்குத் தயாராக இல்லை. காரணம், ஹீரோ கனவு.

ஒருநாள் ஒரு படத்தில் இரண்டாவது நாயகனாக நடிக்க பாலாவுக்கு வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால், அந்த படத்தின் நாயகனுக்கு அதில் விருப்பம் இல்லை. அவரை வெளியேற்ற முயற்சிக்கிறார். அதையும் மீறி அவர் படத்தில் இடம்பெற, சண்டைக்காட்சிகளின்போது வேண்டுமென்றே தாக்குகிறார். பதிலுக்கு அவரை பாலா அடிக்க, அங்கு பெரும் பிரச்சனையே முளைக்கிறது.

அது, இனிமேல் பாலா நாயகனாக மட்டுமல்லாமல் சிறு பாத்திரத்தில் கூட நடிக்க இயலாத நிலையை உருவாக்குகிறது. அந்த நிலையில், தனது நண்பர்கள், குடும்பத்தினரை விட்டு விலகி வெகுதூரம் செல்ல நினைக்கிறார் பாலா. அங்கு தற்கொலை செய்துகொள்ள விரும்புகிறார்.

ஆனால், எதிர்பாராதவிதமாக மீண்டும் ஜெனியைச் சந்திக்கிறார். அது, இருவரது வாழ்க்கையையும் மாற்றுகிறது. அது எப்படி என்று சொல்கிறது ‘பேட்டராப்’ படத்தின் மீதி.

அதேபோல, தொடக்கத்தில் வரும் பள்ளிக்கால காதல் என்னானது என்பதையும் சொல்கிறது. நிச்சயமாக, இது ஒரு ‘ரொமான்ஸ் ட்ராமா’ வகைமை படத்திற்குப் போதுமான கதை. அதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

கேட்க இதமாக இருக்கும் இந்த கதையைத் திரையில் ஒருவழியாக்கி வைத்திருக்கிறார் இயக்குனர் எஸ்.ஜே.சினு. இதில் படத்தொகுப்பு அமைந்திருக்கும் விதம், ஒரு படத்திற்கு அது எந்தளவுக்கு தேவை என்பதை நமக்கு உணர்த்துகிறது.

இது தேவையா?!

பிரபுதேவாவைக் கடவுள் ரேஞ்சுக்கு பூ போட்டு அர்ச்சிப்பவர்களே கூட ‘டென்ஷன்’ ஆகும் அளவுக்கு இருக்கிறது இப்படம். ‘இதெல்லாம் உங்களுக்கு தேவையா’ என்று நறநறக்கும் அளவுக்கு இருக்கிறது. அவரது ரசிகர்கள் ‘நாங்கள் என்ன பாவம் செய்தோம்’ எனுமளவுக்கு இருப்பதனால், இனிமேல் கதைத் தேர்வில் அவர் கடும் கெடுபிடிகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.

அவரது நிலைமையே அபடி என்பதால் வேதிகா, விவேக் பிரசன்னா, பகவதி பெருமாள், ரமேஷ் திலக், கலாபாவன் சாஜன், ஜெயபிரகாஷ், ரியாஸ்கான், மைம் கோபி, ராஜிவ் பிள்ளை என்று பலரது நடிப்பு விழலுக்கு இறைத்த நீராகியிருக்கிறது.

சன்னி லியோன் கால்ஷீட் கிடைத்தும், அவரை ஒரே ஒரு பாடலுக்கு பயன்படுத்திவிட்டு நகர்ந்திருக்கிறார் இயக்குனர். அதுவும் ரசிக்கத்தக்க வகையில் காட்சிப்படுத்தப்படவில்லை. அவரது தியாக உள்ளத்தை எப்படிப் பாராட்டுவது?

இப்படிப் பல கலைஞர்களின் உழைப்பைத் திரையில் சுருக்கியதால் கிடைத்திருக்கும் ஒரே நன்மை, இப்படம் சுமார் இரண்டு மணி நேரம் நீளம் கொண்டது என்பதே.

ஒளிப்பதிவாளர் ஜித்து தாமோதர் ரொம்பவே ‘கலர்ஃபுல்’லாக பெரும்பாலான பிரேம்களை வார்த்திருக்கிறார். கலை இயக்குனர் ஏ.ஆர்.மோகன் தன்னால் முடிந்த அளவுக்கு பிரேம்கள் பளிச்சென்று திரையில் தெரியுமாறு ஒரு ‘அட்மாஸ்பியர்’ தென்பட வழிவகுத்திருக்கிறார்.

சண்டைக்காட்சி மற்றும் நடன வடிவமைப்பு கூட அசத்தல் ரகம் தான். அதற்கேற்பத் தன் இசையில் ‘அதிரட்டும் டும்’, ’இளவரசி’, ‘யூ ஆர் மை ஹீரோ’, ’வச்சி செய்யுதே’, ‘போகாதே’, ‘டான்ஸ் டான்ஸ்’, ‘ஆரத்தி ஆரத்தி’ உள்ளிட்ட பாடல்களைத் தந்திருக்கிறார். அவை நம்மை வசீகரித்தாலும், அதற்கேற்ற காட்சியாக்கம் திரையில் நிகழவில்லை.

‘பேட்டராப்’ படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை எழுதியவர் டினில் பி.கே. கதையின் தொடக்கம், நகர்வு, முடிவில் தெளிவின்மை இல்லாமல் இருக்கிற காரணத்தால், இதில் வரும் மையப் பாத்திரங்களின் அசைவு பற்றி நம்மால் எதுவுமே சொல்ல முடிவதில்லை.

இந்தப் படத்தில் வில்லனாக மலையாள நடிகர் கலாபவன் சாஜன், மைம் கோபி, ராஜிவ் போன்றவர்கள் நடித்திருந்தாலும், நம் கண்களுக்குப் படத்தொகுப்பாளர் நிஷாத் யூசுஃப் மட்டுமே தெரிகிறார். அந்தளவுக்கு சொதப்பலான ஒரு வேலையை இதில் அவரது குழு செய்திருக்கிறது.

சம்பந்தமே இல்லாமல் அடுத்தடுத்த காட்சிகளுக்கான ஷாட்களை ‘இண்டர்கட்’டில் காட்டி நம்மை ரொம்பவே சோதித்திருக்கிறார். கதை நிகழும் களம் மட்டுமல்லாமல், ஒவ்வொரு காட்சியும் எங்கு நிகழ்கிறது என்பதே தெரியாத அளவுக்குக் குழப்பமாகக் காட்சிகளை அடுக்கியிருக்கிறார்.

அந்த தவறு எங்கு, எதனால், யாரால் நிகழ்ந்தது என்று அறிந்தால், அது எதிர்காலத்தில் புதிய படங்களைத் தயாரிப்பவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.

ஒரு நடிகராக, நடன இயக்குனராகப் பிரபுதேவாவைக் கொண்டாடும் நோக்கோடு இப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அந்த நல்ல நோக்கம் முற்றிலுமாகத் தீமையாக மாறும் அளவுக்கு இதனை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர். அது, பிரபுதேவாவையும் அவர் நடித்த காதலன் படத்தையும் வெறுக்கும் நிலைக்கு நம்மை ஆளாக்கியிருக்கிறது.

சிறப்பான பாடல்கள், சிறப்பான நடிப்பு மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பினைப் பயன்படுத்த வாய்ப்பு கிடைத்தும் அதனை நழுவ விட்டிருக்கிறது ‘பேட்டராப்’.

நம் கவலையெல்லாம், ‘இனிமேல் அந்த பேட்டராப் பாடலைக் கேட்கும்போதெல்லாம் இப்படம் நினைவுக்கு வருமே’ என்பதுதான். அதற்கான தீர்வை எப்படிக் கண்டறிவது..? ‘இதன் இரண்டாம் பாகத்தை உருவாக்கினால் பார்க்கலாம்’ என்று மட்டும் தயவுசெய்து சொல்லிவிடாதீர்கள்..!

– உதயசங்கரன் பாடகலிங்கம்

 

You might also like