தமிழகத்தில் குடிப்பழக்கம் இன்று பரவலாகிவிட்டது. தமிழகத்தில் 28.5 சதவீதம் ஆண்கள் மது அருந்தும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர். இவ்விஷயத்தில் அகில இந்திய அளவில் தமிழகத்துக்கு 19-வது இடம். முதலிடம் சத்தீஸ்கர்.
இந்தியாவில் 7-ல் ஒருவர் மதுகுடிக்கும் பழக்கம் உள்ளவர். பதின் பருவத்தினரிடமும் மதுப்பழக்கம் பரவலாகிவிட்டது என்பது கூடுதல் அதிர்ச்சி தரும் செய்தியாகும்.
மதுவிலக்கு சாத்தியமா என்பதை ஆராய வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.
சமுதாய, பொருளாதார, தனிமனித ஆரோக்கியம் ஆகியவற்றைப் பாதிக்கும் மிகப்பெரிய பிரச்சினையாக மது அருந்தும் பழக்கம் இருக்கிறது. இதைத் தடுக்க மதுவிலக்கை அமல்படுத்தியே ஆக வேண்டும் என்பதுதான் பெரும்பாலானோரின் கருத்தாக உள்ளது.
அரசின் கடமை:
மதுவிலக்கை அமல்படுத்தினால் கள்ளச்சாராயம் பெருகிவிடும் என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று சிலர் கூறுகின்றனர். காரணம், கள்ளச்சாராயம் விற்கப்பட்டால் அரசு நடவடிக்கை எடுக்க முடியும்.
மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டால், இப்போது மது குடிப்பவர்களில் 10 சதவீதம் பேர் வேண்டுமானால் சாராயம் அருந்தலாம். ஆனால், மது குடிப்போரின் எண்ணிக்கை இதனால் கணிசமாகக் குறைந்துவிடும் என்பதை மறுப்பதற்கில்லை.
இதன்மூலம் குற்றங்கள், விபத்துகள் எல்லாம் குறையும். அரசே மது விற்கும்போது அதை வாங்கி அருந்துவது எப்படித் தவறாகும் என்பது மது குடிப்போரின் வாதமாக உள்ளது.
எனவே, அரசு மது விற்பனையைக் கைவிடும் நிலையில், மது குடிப்போரின் எண்ணிக்கை கணிசமாகக் குறையும் என்பதில் ஐயம் இல்லை.
மதுவிலக்கு அமலானாலும் சிலர் குடிப்பதைத் தடுக்க முடியாது. முழுமையான மதுவிலக்கு என்பது இனிமேல் சாத்தியமில்லை என்று சிலர் கூறுகின்றனர். ஆனாலும், அதனை முயன்று பார்க்க வேண்டியது ஒரு அரசின் தலையாய கடமையாகும்.
இன்னொரு புறம், மதுவிலக்கு அமலானால் அண்டை மாநிலங்களில் சர்வ சாதாரணமாக மதுபானங்கள் கிடைப்பதைக் காரணமாக்கி அங்கு சென்று மது அருந்துவதோ, அங்கிருந்து ரகசியமாக வாங்கிவந்து விற்பதோ மிக எளிதாகிவிடும்.
விலை குறைவு என்ற ஒரே காரணத்துக்காகப் புதுவையில் இருந்து ஏராளமான மதுபானங்கள் அண்டை மாநிலங்களுக்குச் செல்கின்றன. இவற்றைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
அப்படியிருக்க முழுமையாக மதுவிலக்கு அமலானால், வெளியில் இருந்து மதுவைக் கொண்டுவருவதையும், அங்கு சென்று குடிப்பதையும் தடுக்க முடியாது என்று ஒருசாரார் கருதுகிறார்கள்.
குடிக்கின்ற ஒவ்வொருவரும் மனம் மாறினால்தான் குடிப்பழக்கத்தை முழுமையாக ஒழிக்க முடியும்.
மிகப்பெரிய மக்கள் எழுச்சி வந்தால்தான், அரசும் சேர்ந்து மதுக்கடைகளை மூடுவதற்கு வாய்ப்பு உருவாகும்.
சில நடைமுறைச் சிக்கல்கள் இருந்தாலும்கூட, மதுவிலக்கை நடைமுறைப்படுத்துகிறபோது மிகப்பெரிய மாற்றத்துக்கான ஒரு புதிய பாதை ஒன்று நிச்சயம் உருவாகும்!
நன்றி: இந்து தமிழ் திசை நாளிதழ்