சினிமா எடிட்டர் மோகனின் மகனும், இயக்குநர் மோகன் ராஜாவின் தம்பியுமான ‘ஜெயம்’ ரவி, ‘சாக்லெட் பாய்’ வேடத்தில் ஆரம்பக் காலங்களில் நடித்து வந்தார்.
தமிழ்த் திரை உலகில் தன்னை, ஓரளவு தக்க வைத்துக்கொண்டபின், சண்டைக் காட்சிகளில் நடித்து ‘ஆக்ஷ்சன்’ ஹீரோவாக உருமாற்றிக்கொண்டார்.
சர்ச்சையில் சிக்காத நடிகர்களில் ஒருவராக இருந்து வந்தார். 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். நல்லறமாகவே, இவர்கள் இல்லறம் சென்று கொண்டிருந்த நிலையில், இருவரும் விவாகரத்து செய்ய இருப்பதாக தகவல்கள் பரவின.
‘இது கட்டுக்கதையாக இருக்க வேண்டும்’ என ஜெயம் ரவியின் ரசிகர்கள், நம்பி இருந்த வேளையில், அவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தும் வகையில், ஜெயம் ரவி பரபரப்பு அறிவிப்பை சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டார்.
‘’சுமார் 15 ஆண்டு காலம் ஒன்றாக வாழ்ந்த நானும் ஆர்த்தியும், அந்தப் பந்தத்தில் இருந்து பிரிந்து தனித்து வாழ இருக்கிறோம்” என அதில் குறிப்பிட்டிருந்தார். இந்த அதிரடி அறிவிப்பைத் தொடர்ந்து ஆர்த்தியிடம் இருந்தும் ஒரு அறிக்கை வந்தது.
‘என்னுடைய விருப்பம் இல்லாமல் ஜெயம் ரவி இந்த முடிவை எடுத்துள்ளார் – அவருடன் இணைந்து வாழத்தான் நான் ஆசைப்படுகிறேன்’ என அதில் ஆர்த்தி கூறி இருந்தார்.
இந்த தம்பதி கொளுத்திப்போட்ட வெடியின் சத்தம் அடங்காத சூழலில், கெனிஷா பிரான்சிஸ் என்கின்ற படகியுடன் ஜெயம் ரவிக்கு தொடர்பு உள்ளதாக பரபரப்பு தகவல்கள் பரவின. இதனை ஜெயம் ரவி மறுத்தார்.
‘கெனிஷா பிரான்சிஸ் ஒரு சிறந்த பாடகி – அது மட்டும் இல்லாமல் ஒரு நல்ல மனநல ஆலோசகர் – அவர் பல நல்ல விஷயங்களை மக்களுக்கு செய்து வருகிறார் – ஆகையால் அவரோடு இணைத்து பேசி எங்களுடைய நல்ல நட்பை கொச்சைப்படுத்த வேண்டாம்’ என்ற ரீதியில் ஜெயம் ரவி விளக்கம் இருந்தது.
இந்த தம்பதிக்கு இடையேயான வார்த்தை போர், ஊடகங்களில் ‘ஒளியும், ஒலியுமாக’ ஓடிக்கொண்டிருக்க, ஜெயம் ரவி குறித்து புதிய செய்தி வெளியாகியுள்ளது.
அவர் சென்னையை தற்காலிமாக காலி செய்து விட்டு, மும்பைக்கு சென்று விட்டார் என்றும், அங்கு தனக்கு தனி அலுவலகம் பார்த்து தங்கி உள்ளதாகவும் ஆங்கில பத்திரிகையில் தகவல் வெளியானது.
மும்பை விமான நிலையத்தில், பல வண்ணங்களை தெளித்த சட்டை அணிந்து, செய்தியாளர்களுடன் ஜெயம் ரவி உரையாடும், போட்டோக்களும் பத்திரிகைகளில் வெளியாகி உள்ளன.
இந்திப் படங்களில் நடிக்கும் முடிவுடன் ஜெயம் ரவி மும்பைக்கு இடம் பெயர்ந்துள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.
– பாப்பாங்குளம் பாரதி.