அமீர்கான், அக்ஷய் குமார், அஜய் தேவ்கன், சல்மான்கான் என்று இருபதாண்டுகளாக வசூல் சாதனை படைத்த நாயகர்களின் படங்கள் பெரியளவில் ‘ப்ளாப்’ ஆகின்றன.
அவர்களுக்கு நடுவே நெளிந்து வெளியேறி மூன்று ஹிட்கள் தந்தார் ஷாரூக்கான். அதன்பிறகும், இந்தி திரையுலகில் மிகப்பெரிய வசூல் என்பது எட்டாக்கனியாகவே இருந்தது.
ஆர்ட்டிகிள் 370, சந்து சாம்பியன், பேட் நியூஸ், முஞ்யா படங்களுக்கு மத்தியில் நட்சத்திர அந்தஸ்துடன் வெளியாகி வெற்றி பெற்ற இந்திப் படங்களாக ஷாகித்கபூரின் ‘தேரி பாதோன் மெய்ன் ஐய்சா உல்ஜா ஜியா’, அஜய் தேவ்கனின் ‘ஷைத்தான்’, ஹ்ரித்திக் ரோஷனின் ‘பைட்டர்’ படங்கள் மட்டுமே சில நூறு கோடிகள் வசூலை அள்ளின.
அம்மூன்று படங்களிலும் தபு, கிரித்தி சனான், மாதவன், ஜோதிகா போன்றோரின் இருப்பு முக்கியப் பங்கு வகித்தது.
இந்தச் சூழலிலேயே ராஜ்குமார் ராவ், ஷரத்தா கபூர், பங்கஜ் திரிபாதியின் ‘ஸ்திரீ 2’ படம் உலகம் முழுக்கச் சுமார் 851 கோடி ரூபாயை வசூலித்ததாகச் சொல்கிறது விக்கிபீடியா.
அதுவும் இந்தியாவில் மட்டும் சுமார் 600 ப்ளஸ் கோடிகளை வசூலித்து, உள்நாட்டில் அதிக வசூல் செய்த இந்திப்படம் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது.
மிகப்பெரிய நட்சத்திர அந்தஸ்து கொண்ட நடிப்புக் கலைஞர்கள் இல்லாமல், ஏற்கனவே வெற்றி பெற்ற ஒரு படத்தின் இரண்டாம் பாகமாக வெளியாகி பெரு வெற்றியைச் சுவைத்திருக்கிறது இந்தப் படம். இது நிறையவே பாடங்களையும் திரையுலகினருக்குத் தந்திருக்கிறது.
‘ஸ்திரீ 2’ படம் ‘ஹாரர்’ வகைமையில் அமைந்த படம் என்பது நமக்குத் தெரிந்த விஷயம்.
ஆனால், இதனைத் தயாரித்த மேடாக் பிலிம்ஸ் நிறுவனமானது, தனது ‘சூப்பர் நேச்சுரல் ஹாரர் பட யூனிவர்ஸ்’க்குள் இந்த படத்தை வெற்றிகரமாக அடக்கியது. அதுவே இதன் முதல் வெற்றி!
‘ஸ்திரீ’ படத்தைத் தயாரித்தபோது, அதில் வட இந்தியாவிலுள்ள எந்தவொரு மாநிலத்தோடும் பொருத்திப் பார்க்கிற விஷயங்கள் அக்கதையில் இருந்தன.
‘ஸ்திரீ நாளைக்கு வா’ என்று வீட்டின் கதவிலும், சுவர்களிலும் எழுதி வைக்கிற வழக்கத்தைக் காட்டியபோது, கண்ணுக்குப் புலப்படாத பேயிடம் மன்றாடுகிற மனிதர்களின் மனநிலை தெளிவாகத் தெரிந்தது.
அதே மக்களின் முந்தைய தலைமுறையினர் தான், ஒரு பெண்மணியின் காதலைச் சிதைத்து அவர் கொடூரமாகக் கொலை செய்யப்படக் காரணமாக இருந்திருப்பார்கள் என்பது சொல்லப்பட்டிருக்கும்.
அதற்காக, ஆணாதிக்கத்துடன் திரியும் அக்கிராமத்து ஆண்களை அப்பேய் பழிவாங்குவதாகக் காட்டப்பட்டிருக்கும்.
இதே போன்று பேடியா, முஞ்யா படங்களிலும் அமானுஷ்யமான விஷயங்கள் கையாளப்பட்டிருந்தன.
அவற்றில் சொல்லப்பட்ட விவரணைகள் ஏற்கனவே வாய்வழிக் கதைகளாக மக்கள் மத்தியில் இருந்தவை தான். அவற்றுக்கு ‘ஜனரஞ்சக வடிவம்’ தந்த வகையில் அப்படங்கள் கவனிக்கத்தக்கதாக மாறின.
அந்த வரிசையிலேயே, ‘ஸ்திரீ 2’வில் அதே பெண் பேயினால் கொல்லப்பட்ட ஒரு ஆணாதிக்கவாதியின் அடங்காத ஆன்மாவினால் ஏற்படும் அல்லல்கள் காட்டப்பட்டன.
தன்னைப் போலவே, அந்த கிராமத்திலுள்ள ஆண்களை அந்த தலையற்ற பேய் மாற்ற முயல்வதாகக் காட்டியது இப்படத்தின் கதை.
வெறுமனே பயமுறுத்துவதை மட்டுமே செய்யாமல் ஆணாதிக்க எதிர்ப்பு, பெண்களின் சுயமரியாதை போன்றவற்றையும் காட்டியதால் முதல் பாகம் பெற்ற வெற்றியை உணர்ந்து, அதன் நீட்சியாக இதன் கதை வடிவமைக்கப்பட்டிருந்தது.
இந்த படத்தின் கதைக்களம் ஒரு சிறு நகரத்தைக் காட்டியது. திரைப்படங்களில் எப்போதுமே பெருநகரங்களைப் பார்த்து வந்தவர்களுக்கு அல்லது அதே போன்றதொரு தோற்றத்தை செட்களின் வழியே கண்டவர்களுக்கு, இப்படம் வேறுபட்ட சித்திரத்தைத் தந்தது.
கதை சொல்லலில் பெரிதாக ஆபாசம் தென்படாமல், அதீத வன்முறை இடம்பெறாமல், கோரமான சித்தரிப்பு இல்லாமல் இந்த ‘பேய்படம்’ உருவாக்கப்பட்டிருந்தது.
கிளைமேக்ஸ் முடிந்த பிறகு வந்த இரண்டு பாடல்களைத் தவிர்த்து விட வேண்டும். ஏனென்றால், திருஷ்டி கழிப்பு போல அவை ‘ஸ்திரீ 2’வில் சேர்க்கப்பட்டிருந்தன.
‘கேமியோ’ என்ற பெயரில் வேறு மொழிகளில் புகழுடன் விளங்குகிற நடிகர், நடிகைகளைத் திரையில் ஓரிரு காட்சிகளில் காட்டாமல், ஒரு பாடலுக்கு ஆடிய தமன்னாவையும் ஒரு பாத்திரமாகவே காட்டியிருந்தது இப்படம்.
மேலோட்டமாக நோக்கினால், முந்தைய பாகத்தின் திரைக்கதையில் இருந்த திருப்பங்கள், பாத்திர முரண்கள், இறுதி முடிவு ஆகியவற்றைப் பிரதியெடுத்து வேறுவிதமாகக் காட்டும் வகையில் காட்சியாக்கம் இருந்தது.
‘முதல் பாகத்தைப் போலவே அமைந்துவிட்டது’ என்று குற்றம் சொல்ல முடியாதபடி, ‘முதல் பாகத்திற்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை’ என்று சொல்லிவிடாதபடி அமைந்திருந்தது அந்த சித்தரிப்பு.
அனைத்துக்கும் மேலே, கனகச்சிதமான தயாரிப்பு உத்திகளுடன் உருவாக்கப்பட்டிருந்தது ‘ஸ்திரீ 2’.
ஆனால், திரையில் அது முதல் பாகத்தைவிடப் பிரமாண்டமானதாக ரசிகர்களுக்குத் தெரிந்தது.
அந்த உள்ளடக்கமும், அதனை உணர வைத்தவிதமும் இப்படத்தை ஒரு பாடமாகச் சக கலைஞர்களுக்குக் காட்டுகிறது.
இந்த வெற்றியில் இயக்குனர் அமர் கௌசிக், திரைக்கதையாசிரியர் நிரேன் பட், தயாரிப்பாளர் தினேஷ் விஜன் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர் நடிகைகள் என்று பலருக்குப் பங்குண்டு.
தயாரிப்பு நிறுவனமான மேடாக் பிலிம்ஸ், இதே பாணியில் அடுத்தடுத்த பாகங்களை உருவாக்கலாம் அல்லது இதில் காட்டப்பட்ட கிளைக்கதைகள், பாத்திரங்களைக் கொண்டு இன்னும் புதிய கதைகளைச் சொல்லலாம்.
இப்படங்களின் உள்ளடக்கத்தைச் சுருக்கி, வீடியோ கேம்களை வெளியிடலாம். அனிமேஷன் படங்கள், வெப்சீரிஸ்கள், சீரியல்கள் என்று இந்த கதை சொல்லல் உத்தி பல கிளைகளை விரிக்கலாம்.
அது எல்லாமே உபரி என்று சொல்லத்தக்க வகையில் வசூலைக் குவித்திருக்கிறது ‘ஸ்திரீ 2’. இந்த படத்தின் மொத்த வசூலில் வெளிநாட்டில் இருந்து கிடைத்த தொகை நான்கில் ஒரு பங்கு கூட இருக்காது.
இது போக சாட்டிலைட், ஓடிடி உரிமை, இதர ஒளிபரப்பு உரிமைகள் என்று சில நூறு கோடி ரூபாய் வருமானம் வேறு வரும்.
அவற்றைத் தொகுத்தால், சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பில் உருவான ‘ஸ்திரீ 2’ நிச்சயம் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்குப் பணத்தை அள்ளும்.
இந்தப் படத்தின் வர்த்தகத்தில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்துகிற விஷயம் இது.
மிக முக்கியமாக, ‘உள்ளூர் சார்ந்து சிந்தித்து உலகளவில் செயல்படுங்கள்’ என்பதற்கான வெற்றியாகவும் இதனைக் கருதலாம். இதனை அப்படியே ‘உல்டா’வாகவும் சொல்லலாம்.
எது எப்படியாயினும், நமது சுற்றத்தைத் தாங்கிப் பிடிக்கும் வேலையில் ஈடுபட்டால், பரவலான கவனத்தைக் குவிக்க முடியும் என்பதே அதன் சாராம்சமாக இருக்கும். ‘உலகப்படம்’ என்று சொல்லப்படுகிற பல படங்கள் அதனைச் சாதித்திருக்கின்றன.
இப்போது, கமர்ஷியல் படங்கள் என்று முத்திரை குத்தப்படுகிற படைப்புகளும் அதனைச் சாதிக்கின்றன. இப்படிப் பல பாடங்களைத் தந்திருக்கிறது ‘ஸ்திரீ 2’.
– மாபா