தியேட்டர்களில் திரைப்படங்களின் நெரிசல்!

சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோ, நாம் பயணிக்கும் பொதுப்போக்குவரத்து வாகனங்களில் மனிதர்கள் அதிக எண்ணிக்கையில் ஏறுவதோ, அந்த பயணத்தையே வெறுக்கக்கூடிய வகையில் அமையும். மீண்டும் சுமூகநிலை திரும்பும் வரையில், புலம்பிக்கொண்டே பயணத்தை நிறைவு செய்ய வேண்டியதிருக்கும். ஏனோ, இந்த வாரத்தில் திரையரங்குகளிலும் அப்படிப்பட்டதொரு நெரிசலை ரசிகர்கள் சந்திக்க வேண்டியிருக்கிறது. ஐந்து படங்கள் சுடச்சுட வெளியாவதால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

கடந்த வாரச் சூழல்!

ஜூலை 5-ல் விஜய்யின் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல்டைம்’ வெளியானது. அதனை முன்னிட்டு, அதற்கடுத்த வெள்ளிக்கிழமை கொஞ்சமாய் இடைவெளி எடுத்துக்கொண்ட தமிழ் திரைப்பட வெளியீடுகள் கடந்த வாரம் மீண்டும் களைகட்டியது.

நந்தன், கோழிப்பண்ணை செல்லத்துரை, தோனிமா, கடைசி உலகப்போர், தோழர் சேகுவேராவுக்கு நடுவே லப்பர் பந்து பெருவெற்றியைச் சுவைத்துள்ளது. கடந்த வெள்ளியன்று சில காட்சிகள், சிறிய தியேட்டர்கள் என்றிருந்த இப்படம், இந்த வாரம் நான்கு காட்சிகள், பெரிய தியேட்டர் என்று மால்களில் பெரிய வரவேற்பைப் பெறத் தயாராக இருக்கிறது. இதர படங்கள் குறிப்பிட்ட அளவில் வரவேற்பைப் பெற்றன.

இது தவிர வாழை, டிமான்டி காலனி, மது வடலரா 2, ஸ்திரீ 2, ஏஆர்எம், தும்பட் மறுவெளியீடு ஆகியன பெருநகரங்களிலுள்ள மால்களை ஆக்கிரமித்துள்ளது. மிக முக்கியமாக, ஓணம் வெளியீடுகளில் ஒன்றான ‘கிஷ்கிந்தா காண்டம்’ சென்னையில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகளை இந்த வாரத்தில் பெற்றிருக்கிறது.

ஐந்து படங்கள்!

வரும் 27-ம் தேதியன்று தமிழில் மட்டும் ஐந்து படங்கள் வெளியாகின்றன.

அவற்றுள் முதலிடம் பிடிக்கிறது ‘மெய்யழகன்’. 96 படத்தைத் தந்த பிரேம்குமார் இயக்கியுள்ள இப்படத்தில் கார்த்தி, அரவிந்த்சாமி, ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். உறவுகளின் பெருமையையும் தேவையையும் சொல்கிற படம் என்கிற சொல்லாடலுடன் வந்திருக்கிற இப்படம் ரசிகர்களைச் சென்டிமெண்ட் மழையில் நனைய வைக்கக்கூடும்!

விஜய் ஆண்டனி, கௌதம் வாசுதேவ் மேனன், ரியா சுமன், சரண்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘ஹிட்லர்’ திரைப்படம் இந்த வாரம் வெளியாகிறது. படைவீரன், வானம் கொட்டட்டும் படங்களை இயக்கிய தனா இதனை இயக்கியிருக்கிறார். இது ஆக்‌ஷன் டிராமா வகைமையில் இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. விவேக் மெர்வின் இதற்கு இசையமைத்திருக்கிறார்.

சாச்சி இயக்கத்தில் சதீஷ் ஹீரோவாக நடித்துள்ள படம் ‘சட்டம் என் கையில்’. இதில் வித்யா பிரதீப், ரித்விகா, பாவல் நவகீதன், அஜய் ராஜ் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர். குற்றப் பின்னணியில் அமைந்த இப்படம் சதீஷை சீரியஸ் ரோலில் வெளிக்காட்டும் என நம்பலாம். பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு எம்.எஸ்.ஜோன்ஸ் இசையமைத்திருக்கிறார்.

‘தி கோட்’ படத்தில் பிரபுதேவாவை ரசித்தவர்கள், அவரது துள்ளல் ஆட்டத்தைக் காண நிச்சயம் விரும்புவார்கள். அவர்களுக்காகவே அவர் நாயகனாக நடித்துள்ள ‘பேட்ட ராப்’ இந்த வாரம் வெளியாகிறது. இதில் வேதிகா, விவேக் பிரசன்னா, சன்னி லியோன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்திருக்கும் இப்படத்தை எஸ்.ஜே.சினு இயக்கியிருக்கிறார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்குனர் ஏ.வெங்கடேஷ் இயக்கியிருக்கும் படம் ‘தில் ராஜா’. அம்ரேஷ் கணேஷ் இசையமைத்துள்ள இப்படத்தில் விஜய் சத்யா, ஷெரின், வனிதா விஜயகுமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இவை தவிர்த்து, ஜுனியர் என்.டி.ஆரின் ‘தேவரா பாகம் 1’ம் இந்த வாரம் வெளியாகிறது. இதனை கொரட்டாலா சிவா இயக்கியிருக்கிறார். ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் அறிமுகமாகும் தெலுங்குப் படம் இது. இந்தி நடிகர் சையீப் அலிகான், வாரிசுவில் விஜய் அண்ணனாக வந்த ஸ்ரீகாந்த், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர். அனிருத் இதற்கு இசையமைத்துள்ளார்.

இதுபோகச் சில வேறு மொழிப் படங்களும் கூட இந்த வாரம் வெளியாகக்கூடும். இவற்றுக்கு வரும் ரசிகர்களின் எண்ணிக்கையை பொறுத்தே அடுத்த வாரத் தொடக்கத்தில் இவற்றுக்கு எத்தனை காட்சிகள் ஒதுக்கப்படும் என்பது தெரிய வரும்.

நெரிசலைத் தவிர்த்திருக்கலாம்!

‘தி கோட்’ வெளியான பிறகு மூன்று வாரங்களுக்கு எந்தப் பெரிய படமும் வெளியாகாது என்பது ரசிகர்களுக்கே தெரிந்த விஷயம் தான். அதையும் தாண்டி ‘லப்பர் பந்து’ பெருங்கவனிப்பைப் பெற்றிருக்கிறது. இந்த வாரமும் அதன் வெற்றியோட்டம் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வாரம் வெளியாகிற படங்களில் எது ‘சூப்பர்ஹிட்’ ஆனாலும், மற்றவை தானாக ‘சுமார்’ லிஸ்ட்டில் சேர்ந்துவிடும். அந்த அபாயத்தைத் தாண்டி எத்தனை படங்கள் பிழைக்கப் போகின்றன? அவற்றின் மூச்சுக்கு மழைக்கால மேகங்கள் வழிவிடுமா? என்னவாகப் போகிறது திரையரங்குகளின் நிலவரம்? அனைத்துக்கும் இந்த வாரப் படங்கள் என்ன பதிலைத் தரப் போகின்றன எனத் தெரியவில்லை.

ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம். இதேபோன்று இன்னும் இரண்டு, மூன்று வாரங்களுக்கு சிறிய படங்களின் வெளியீடும், அவற்றின் தரமும் வெற்றியும் அடர்த்தியானதாக இருந்தால் சரஸ்வதி பூஜை, தீபாவளி வெளியீடுகளின் வெற்றி கேள்விக்குள்ளாகும். சில படங்களின் வெளியீடு தள்ளிப்போகும்.

சிறிய படங்களால் திரையரங்குகளில் நெரிசல் ஏற்படப் பெரிய படங்கள் காரணமாக இருக்கின்றன. சில நேரங்களில் தலைகீழாகவும் மாற்றம் ஏற்படலாம் அல்லவா? அது இந்த முறை நிகழுமா என்பதை இவ்வார வெளியீடுகள் முடிவு செய்யும் வாய்ப்புகள் அனேகம். வாருங்கள், அந்த மாற்றத்தை காணத் தயாராவோம்!

– மாபா

You might also like