திருப்பதி கோயிலில் நடந்த பரிகாரப் பூஜை!

செய்தி:

திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்குகள் கொழுப்பு கலப்படம் செய்யப்பட்டதால் ஏற்பட்ட தோஷ நிவர்த்திக்காக ஏழுமலையான் கோவிலில் பரிகாரப் பூஜை செய்யப்பட்டு, புனித நீர் தெளிக்கப்பட்டது.

கோவிந்த் கமெண்ட்:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரித்து வழங்கப்பட்ட பிரசாத லட்டுகளில் நெய்யில் கலப்படம் இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு அது தேசிய அளவிலும் பரபரப்பான செய்தியாக இன்றுவரை அடிபட்டுக் கொண்டிருக்கிறது.

அதே திருப்பதி கோவிலில் அறங்காவலர் குழுத்தலைவராக இருந்தவர் திருப்பதி ஏழுமலைக்கு முன்னால், கற்பூரம் ஏற்றி நெய்யில் கலப்படம் செய்யப்படவில்லை என்று சத்தியமே செய்திருக்கிறார்.

அரசியலுக்காக இந்தப் புகார்கள் காட்டப்படுவதாகவும் செய்திகள் கசிகின்றன.

இந்த நிலையில் லட்டு பிரசாதத்தில் நெய்வழியாக விலங்குகளின் கொழுப்புக் கலந்ததாக எழுந்த விவகாரத்திற்காக லட்டு தயாரிக்கப்பட்ட இடத்தில் புனித நீர் தெளிக்கப்பட்டு பரிகார பூஜை செய்யப்பட்டிருக்கிறது.

அதெல்லாம் அவர்களின் வாதப்படி சரியாக இருக்கலாம். ஆனால் அதே லட்டை பிரசாதமாக நம்பி சாப்பிட்ட பக்தர்களுக்கு என்ன பரிகாரம்? எப்போதோ சாப்பிட்டு செரித்த வயிற்றுக்கு அவர்கள் என்ன பரிகாரப் பூஜை பண்ணுவார்கள்?

“திருப்பதி சென்று வந்தால் திருப்பம் நேருமடா” என்ற கவிஞர் கண்ணதாசன் எழுதிய பாடல் ஒன்று உண்டு. அதன்படி பார்த்தால் திருப்பதி சென்று வந்தவர்களுக்கு இப்படியா வயிற்றுப் பகுதியில் திருப்பங்கள் நிகழ வேண்டும்?

எல்லாம் அந்த ஏழுமலையானுக்கே வெளிச்சம்!

You might also like