நந்தன் – ஒடுக்கப்பட்ட மனிதரொருவரின் ‘பதவி’ கனவு!

’இப்பல்லாம் யாரு சார் சாதி பார்க்கிறாங்க?’, இந்தக் கேள்வி அவ்வப்போது சமூகத்தில் விவாதங்களை ஏற்படுத்திக்கொண்டே இருக்கிறது. சமூகத்தில் சமத்துவம் மலர்ந்து வெகுநாட்களாகிவிட்டது என்று சொல்லும்போதே, இன்னும் சில ஊர்களில் அதற்கான அறிகுறியே மலரவில்லை என்ற எதிர்க்குரல்களும் ஒலித்து வருகின்றன. அப்படிச் சமத்துவம் சிறிதுமற்ற, அதற்கான வாய்ப்புகளை இல்லாமல் ஆக்குகிற, உள்ளாட்சித் தேர்தல் வெற்றியைச் சுய கௌரவமாகப் பார்க்கிற மனிதர்களையும் அவர்கள் சார்ந்த வாழ்வையும் பேசுகிறது ‘நந்தன்’.

சசிகுமார், ஸ்ருதி பெரியசாமி, பாலாஜி சக்திவேல், ஜி.எம்.குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தை இரா.சரவணன் தயாரித்து இயக்கியிருக்கிறார்.

கிப்ரான் இதற்கு இசையமைத்திருக்கிறார்.

சரி, இந்தப் படம் காட்டும் உலகம் எப்படிப்பட்டதாக இருக்கிறது?

’நந்தன்’ கதை!

டெல்டா வட்டாரத்திலுள்ள வணங்கான்முடி கிராம ஊராட்சித் தலைவராக இரண்டு முறை பதவி வகித்திருக்கிறார் கோப்புலிங்கம் (பாலாஜி சக்திவேல்). மூன்றாவது முறையாக அவரே பதவி வகிப்பாரா அல்லது வேறு யாரையாவது நிறுத்தலாமா என்று முடிவு செய்யும் கூட்டம் அவ்வூரிலுள்ள கோயிலொன்றில் நடக்கிறது. அதில், அந்த ஊரில் பெரும்பான்மையாக வாழும் சாதியினர் மட்டுமே பங்கேற்கின்றனர்.

அந்த நேரத்தில், ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்த நந்தன் (மிதுன் போஸ்) அவ்விடத்திற்கு வருகிறார். ‘எங்களில் ஒருவர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தராமல், நீங்களாகவே முடிவு செய்து ஒருமனதாகத் தலைவரைத் தேர்ந்தெடுப்பது எந்த வகையில் நியாயம்’ என்று கேள்வி எழுப்புகிறார். ஆனால், அக்கூட்டத்தில் இருப்பவர்கள் அவரைத் திருப்பி அனுப்புகின்றனர்.

கோப்புலிங்கம் வீட்டிலும், வயலிலும் வேலை செய்து வருகிறார் கூழ் பானை (சசிகுமார்). ஊரார் அவரை அப்படியே அழைக்கின்றனர். ஆனால், அவரது பெற்றோர் அவருக்கு வைத்த பெயர் அம்பேத்குமார்.

மனைவி செல்வி (ஸ்ருதி பெரியசாமி), மகன் அழகன் (மாதேஷ்) உடன் வாழ்ந்து வருகிறார் அம்பேத். கோப்புலிங்கத்திற்கு விசுவாசமாக இருப்பதைத் தவிர வேறொன்றும் தெரியாதவராக இருக்கிறார். அந்த அதீத விசுவாசம், செல்வியை எரிச்சல்படுத்துவதாக இருக்கிறது.

இந்த நிலையில், வணங்கான் முடி ஊராட்சி ‘ரிசர்வ்’ தொகுதியாக அறிவிக்கப்படுகிறது. அதனால், தனது கைப்பாவையாக இருக்கிற ஒருவரையே அப்பதவியில் அமர்த்த வேண்டுமென்று முடிவு செய்கிறார் கோப்புலிங்கம். அம்பேத்குமாரை அழைத்துக்கொண்டு மாவட்ட ஊராட்சி மன்ற அலுவலகத்திற்குச் செல்கிறார். ஒரே போட்டியாளர் என்பதால் அவரே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுகிறார்.

எப்போதும் அழுக்கு லுங்கி, பனியனுடன் திரியும் அம்பேத்குமார், ஊராட்சி அலுவலகத்திற்குச் செல்லும் முதல் நாளன்று வெள்ளை வேட்டி, சட்டையுடன் செல்கிறார். ஆனால், அவரை அலுவலத்திற்குள் நுழைய விடாமல் தோட்டத்திற்கு அனுப்பிவிடுகிறார் கோப்புலிங்கம்.

ஊராட்சி மன்றத் தலைவராக என்ன செய்யலாம் என்று அம்பேத்குமார் மனதுக்குள் நினைத்தாரோ, அவற்றில் ஒன்றைக்கூட அவரால் செய்ய முடிவதில்லை. உரிய மரியாதையும் கிடைப்பதில்லை. அதனால், கோப்புலிங்கத்தின் மீதான விசுவாசத்தை மீறி அவர் மனதுக்குள் தனது சுயமரியாதை குறித்த கேள்வி முளைவிடத் தொடங்குகிறது. அவரது பாட்டி இறப்பின்போது அது உச்சம் பெறுகிறது.

சுடுகாட்டில் பாட்டியைத் தகனம் செய்யச் செல்லும்போது மழை பெய்கிறது. அதனால், இதர சாதியினர் தகனம் செய்யும் மேடையில் ஈமச்சடங்குகளை நடத்த விரும்புகிறார் அம்பேத். ஆனால், அவ்வூர்க்காரர்கள் அதனை அனுமதிப்பதாக இல்லை. கோப்புலிங்கத்திடம் சென்று பேசினாலும், எந்தப் பலனும் இல்லை.

அதனால், உள்ளாட்சி நிர்வாகத்திற்கான மாவட்ட அலுவலரைச் சந்தித்து விஷயத்தைச் சொல்கிறார் அம்பேத். அதையடுத்து, புறம்போக்கு நிலத்தில் 3 ஏக்கர் நிலம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான சுடுகாடாகப் பயன்படுத்த ஒதுக்கப்படுகிறது. கோப்புலிங்கத்திற்குச் சொந்தமான வயலோடு சேர்ந்து, அதிலும் நாற்று நடப்பட்டிருக்கிறது.

அந்த நிலத்தைக் கையகப்படுத்த மாவட்ட நிர்வாகம் முடிவெடுக்கிறது. அது கோப்புலிங்கத்தை ஆத்திரப்படுத்துகிறது. பதிலுக்கு, அவர் தனக்குச் சொந்தமான நிலத்தில் குடியிருந்து வரும் அம்பேத்குமாரையும் அவரது உறவினர்களையும் உடனடியாகக் காலி செய்யச் சொல்கிறார். கூடவே, அம்பேத்குமார் தனது ஊராட்சி மன்றத் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்கிறார்.

அதன்பிறகு என்னவானது என்பதைச் சொல்கிறது ‘நந்தன்’ படத்தின் மீதி.

இந்தக் கதையில் அதிகாரம், ஆளுமை, பதவி போன்றவற்றை எதிர்பார்க்காத மனிதராக அம்பேத் குமார் பாத்திரம் உள்ளது. ஆனால், அப்பாத்திரத்திற்கு உண்மையிலேயே அது குறித்த கனவு இருக்கிறதா, இல்லையா என்று சொன்ன வகையில் வித்தியாசப்படுகிறது இப்படம்.

வழக்கமாக, நாயகனின் பெயர் தான் டைட்டிலில் இடம்பெறும். ஆனால், இதில் ஓரிரு காட்சிகள் மட்டுமே வரும் ஒரு பாத்திரத்தின் பெயர் வைக்கப்பட்டிருப்பது அவ்வழக்கத்தை உடைத்திருக்கிறது.

இன்னும் சில கிராமங்களில் சமத்துவம் நிலவவில்லை என்பதைப் பதிவு செய்கிறது ‘நந்தன்’. ஆனால், அது காட்டப்பட்ட விதம் கதையின் அடிப்படையைக் கேள்விக்கு உட்படுத்துவதாக இருக்கிறது.

சமத்துவம் மலருமா?

நட்புக்காக உயிரைக் கொடுக்கத் துணியாத, பாரம்பரியப் பெருமைகள் பேசாத ஒரு பாத்திரத்தில் சசிகுமார் நடித்துள்ளார்.  ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவராக இதில் அவர் தோன்றியிருக்கிறார். ஆனால், அவரது பாத்திரத்தின் செயல்பாடுகளுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் முக்கியத்துவம் அதன் மனவோட்டத்திற்குத் தரப்படவில்லை. அதற்கேற்றபடி நடித்திருக்கிறார் சசிகுமார்.

நாயகியாக வரும் ஸ்ருதி பெரியசாமி, அசல் கிராமத்துப் பெண்ணாகவே திரையில் தெரிகிறார். அவரது மெனக்கெடல் அருமை. அது அவரது நடிப்பிலும் வெளிப்படுகிறது.

அழகனாக வரும் சிறுவன் மாதேஷ் வரும் காட்சிகளில் குழந்தைத்தனம் தென்படுகிறது. அச்சிறுவன் ’ஸ்கோர்’ செய்ய இன்னும் வாய்ப்பு தந்திருக்கலாம்.

‘நந்தன்’ திரைக்கதையை மொத்தமாகக் குத்தகைக்கு எடுத்தது போன்று பெரும்பான்மையான காட்சிகளில் நிறைந்திருக்கிறது கோப்புலிங்கமக வரும் பாலாஜி சக்திவேலின் இருப்பு. குயுக்திகளோடு செயல்படுவதையே அரசியலின் ஆணிவேராக நினைக்கிற ஒரு பத்திரம். அதனைத் திரையில் காட்டியிருக்கிறார். ஆனால், அப்பாத்திரத்தின் ஆர்ப்பாட்டமிக்க இயல்புத்தன்மை கொஞ்சம் செயற்கையாகத் தெரிகிறது.

நந்தன் ஆக வரும் மிதுன், பிடிஓ ஆக வரும் சமுத்திரக்கனி ஆகியோர் இரண்டொரு காட்சிகளில் வந்தாலும் மனதில் நிற்கின்றனர். அவர்களை மீறி ஊராட்சி அலுவலக கிளார்க் ஆக வரும் கட்ட எறும்பு ஸ்டாலின் இப்படத்தில் பளிச்சிடுகிறார்.

இவர்கள் தவிர்த்து ஜி.எம்.குமார், சித்தன் மோகன், சரவண சக்தி, வி.ஞானவேலு உள்ளிட்ட சிலர் நடித்துள்ளனர். இது போக ஓரிரு படங்களில் தலைகாட்டியவர்கள், புதுமுகங்கள் என்று பலர் இதில் உண்டு.

சமீபகாலமாகச் சில படங்களில் இடம்பெற்று வரும் லட்சுமி பாட்டி இதிலும் நடித்துள்ளார். அவரது பாத்திரத்தின் இயல்பு திரைக்கதையில் தெளிவாக உணர்த்தப்படவில்லை.

வயலும் வயல் சூழ்ந்த இடமும் கதைக்களமாக இருப்பதால், அழகியல் அம்சங்களை விடக் காட்சிகளின் தன்மைக்கு முக்கியத்துவம் கொடுத்தால் போதும் என்று செயல்பட்டிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஆர்.வி.சரண்.

நெல்சன் ஆண்டனியின் படத்தொகுப்பில் காட்சிகள் அமைதியான நீரோடையின் ஓட்டம் போலத் திரையில் நகர்கின்றன.

சி.உதயகுமாரின் கலை வடிவமைப்பு, கதை நிகழும் வட்டார மக்களின் வாழ்வை நெருக்கமாகச் சென்று பார்க்க உதவியிருக்கிறது. அதேநேரத்தில் கட்சிகள், நடிகர் நடிகைகள் மற்றும் சமூக நடப்பின் பிரதிபலிப்புகள் ஏதும் களத்தில் தென்படாமல் தவிர்த்திருக்கிறது.

கிப்ரான் இசையில் பாடல்கள் ‘மெலடி’ ரகமாகத் தெரிகின்றன. பின்பாதிக் காட்சிகளில் நிறைந்திருக்கும் வலியையும் வேதனையையும் நமக்குள் ஊடுருவச் செய்திருக்கிறது பின்னணி இசை.

சசிகுமார், ஸ்ருதி உட்படச் சிலரது ஒப்பனையில் செலுத்தப்பட்டிருக்கும் கவனம் பாராட்டுக்குரியது.

இந்தப் படத்தை எழுதி இயக்கித் தயாரித்திருக்கிறார் இரா.சரவணன்.

‘சமத்துவம் மலருமா’ என்ற கேள்வியை அடிநாதமாகக் கொண்டு இப்படத்தைத் தந்திருக்கிறார். அதனைப் பாராட்டத்தான் வேண்டும்.

ஆனால், இந்தப் படத்தில் நாயகன், நாயகியைத் திரையில் காட்டப்பட்ட விதம் அந்த நோக்கத்தைக் கேள்விக்கு உட்படுத்துவதாக இருக்கிறது.

கடைசி 30 நிமிட திரைக்கதையை இன்னும் தெளிவாக, கூடுதல் தகவல்கள் மற்றும் காட்சிகளைப் பயன்படுத்திச் சொல்லியிருக்கலாமோ என்ற எண்ணம் தோன்றுகிறது. காரணம், படம் பார்த்து முடிந்தபிறகு ஒரு முழுமையற்ற கதையை உள்வாங்கியதாக ஏற்படும் அதிருப்திதான்.

இதற்கு மேல் சொல்லப்படும் விஷயங்கள் ‘ஸ்பாய்லர்’ ரகம் என்பதால், அது வேண்டாம் என்பவர்கள் தவிர்த்து விடலாம்.

நாயகன் நாயகி குடும்பத்தினர் தாக்கப்படுவதாக ஒரு காட்சி இதிலுண்டு. அதன் நீளம் அதிகமாக உள்ளது.

ஒரு பெண் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுவதை அதிக நிமிடங்கள் காட்சிப்படுத்துவது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துமோ, அதே போன்றதொரு பாதிப்பை உருவாக்குவதற்கான வாய்ப்புகளைக் கொண்டிருக்கிறது அக்காட்சி. அது, அதற்கான தேவையையும் கேள்விக்கு உட்படுத்துகிறது.

படத்தின் முடிவில், ‘ஆவணப்பட’ பாணியில் சில உண்மைச் சம்பவங்களும் அதில் சம்பந்தப்பட்டவர்களின் பேட்டிகளும் காட்டப்படுகின்றன. அது, படம் தொடங்குமிடத்தில் இடம்பெற்றிருந்தால் நாம் உள்வாங்குவது வேறாக இருந்திருக்கும். ஆனால், அது படம் முடிவடையும் இடத்தில் இருக்கிறது.

அதனைப் பார்க்கிறபோது, மொத்தப்படத்திற்கும் அதற்குமான இடைவெளி வெகுநீளமாகத் தெரிகிறது. ஒவ்வொருவருக்கும் இந்த பார்வையே தோன்றும் என்று கூறிவிட இயலாது. அது, தனி மனித விருப்பம் சார்ந்தது.

அனைத்தையும் தாண்டி, ‘இங்க ஆளுறதுக்கு தான் அதிகாரம் தேவைன்னு நினைச்சேன், ஆனா வாழுறதுக்கே அதிகாரம் தேவைப்படுது’ என்ற வார்த்தைகளை அடிக்கோடிட்டுக் காட்ட  முயன்ற வகையில் முக்கியத்துவம் வாய்ந்த படமாக விளங்குகிறது ‘நந்தன்’.

  • உதயசங்கரன் பாடகலிங்கம்
You might also like