நாடகத்தனம் நிறைந்த திரைக்கதை, குறிப்பிட்ட பார்முலாவுக்குள் அமைந்த கதை சொல்லல், புதுமைகள் ஏதுமற்ற பாத்திர வார்ப்பு, சுண்டியிழுப்பதற்கான வசீகரம் சிறிதுமற்ற உள்ளடக்கம் என்றிருந்தாலும், சில திரைப்படங்கள் சில மனிதர்களின் வாழ்க்கையை வெகு அருகில் சென்று பார்க்கும் உணர்வைத் தரும். பெரும்பாலான மனிதர்களின் வாழ்க்கையனுபவங்களில் இருந்து அவ்வனுபவம் வேறுபட்டதாக இருக்கும். அதுவே, அச்சாதாரண திரைப்படத்தின் வழியே அசாதாரணமான காட்சியனுபவத்தைக் கண்ட திருப்தியைத் தரும்.
இயக்குனர் சீனு ராமசாமியின் ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ கிட்டத்தட்ட அப்படியொரு நிலைமையை ஏற்படுத்துகிறது.
ஏகன், பிரிகிடா சாகா, சத்யா தேவி, யோகிபாபு, ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு என்.ஆர்.ரகுநந்தன் இசையமைத்திருக்கிறார்.
அண்ணன் தங்கை பாசம்!
தேனி வட்டாரத்திலுள்ள கிராமமொன்றைச் சேர்ந்தவர் விருமன். ராணுவத்தில் பணியாற்றுகிறார். அவரது மனைவி, மகன், மகள் கிராமத்தில் வசிக்கின்றனர்.
ஒருநாள் விருமன் விடுமுறையை ஒட்டி ஊர் திரும்புகிறார். வந்த இடத்தில், மனைவிக்கு வேறொரு நபருடன் தொடர்பிருப்பதை அறிகிறார்.
அவர்கள் இருவரையும் சேர்ந்தாற்போலப் பிடிக்கிறார். அவர்களது வாய், கை, கால்களைக் கட்டி ஒரு அறையில் அடைக்கிறார்.
அந்த நேரத்தில் பள்ளியில் இருந்து வீடு திரும்பிய குழந்தைகள் வேறொரு அறையில் தூங்கிக் கொண்டிருக்கின்றன.
கொலை வெறியோடு இருக்கும் விருமன், அளவுக்கு அதிகமாக மது அருந்தி மயக்கமடைகிறார். அப்போது அவரது மனைவியும் அந்த நபரும் கை, கால் கட்டுகளை அவிழ்த்து, அந்த வீட்டில் இருந்து வெளியேறித் தப்பிக்கின்றனர்.
’குழந்தைகளை அப்படியே விட்டுவிட்டு வருகிறோமே’ என்கிற தவிப்போடு வீட்டை விருமன் மனைவி திரும்பிப் பார்க்க, ‘உயிரோடு தப்பிப்பதே பெரிது’ என்று அந்த நபர் அவரை இழுத்துக்கொண்டு செல்கிறார்.
மனைவி வேறொருவருடன் சென்ற துக்கத்தைப் பொறுத்துக்கொள்ள முடியாமல், பாட்டி வீட்டில் தனது குழந்தைகளை விட்டுவிட்டுச் சென்றுவிடுகிறார் விருமன்.
பிறகு, குழந்தைகள் செல்லதுரை, சுதா மகேஸ்வரி இருவரும் பாட்டியின் தயவில் வாழ்கின்றனர். திடீரென்று ஒருநாள் அவர் இறந்து போகிறார்.
அந்த நாட்களில், பாட்டி வழி உறவினரான பெரியசாமி (யோகிபாபு) தான் அவர்களுக்கு உதவிகளைச் செய்கிறார். தான் நடத்தி வரும் கோழிப்பண்ணையில் செல்லதுரைக்கு வேலை கொடுக்கிறார். குழந்தைகள் அவரை ‘பெரியப்பா’ என்றே அழைக்கின்றன.
பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, பெரியசாமியின் கறிக்கடையில் கறி வெட்டுபவராக வேலை பார்க்கிறார் செல்லதுரை (ஏகன்). தங்கை சுதா (சத்யா) ஒரு கல்லூரியில் படித்து வருகிறார்.
படிப்பு முடிந்தபிறகு தங்கைக்கு ஒரு நல்ல வரன் பார்ப்பது, கோழிப்பண்ணை தொடங்குவது, வீடு கட்டுவது ஆகியன செல்லதுரையின் கனவுகளாக இருக்கின்றன. அதற்காக, கூலி வேலைகள் பலவற்றை இழுத்துப் போட்டுக்கொண்டு செய்கிறார்.
ஒருநாள், வீட்டின் அருகே தங்கை சுதாவோடு சௌந்தர் (லியோ சிவகுமார்) என்பவர் காதல் வார்த்தை பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்ததும் கொதிப்படைகிறார் செல்லதுரை. அவரை ஓட ஓட விரட்டுகிறார்.
அது மட்டுமல்லாமல், வீடு திரும்பியபிறகு ‘அம்மா மாதிரி நீயும் அவுசாரின்னு பெயர் எடுத்துறாத’ என்று தங்கையைப் பார்த்துச் சொல்கிறார். அது சுதாவின் மனதில் ஆறாத காயத்தை ஏற்படுத்துகிறது. இருவருக்கும் இடையே பேச்சுவார்த்தை அற்றுப்போகச் செய்கிறது.
தங்கையின் காதல் மட்டுமல்லாமல், தன்னையே சுற்றிவரும் தாமரைச் செல்வியின் (பிரிகிடா சாகா) காதல் மீதும் நல்லபிப்ராயம் இல்லாமல் இருக்கிறார் செல்லதுரை. காரணம், தாய் தந்தையின் பிரிவு. பெற்றோரின் காதல் என்னவானது என்ற கேள்வி, சக மனிதர்கள் மத்தியில் அவரை இறுக்கமானவராக மாற்றுகிறது. ’தனிமையும் தங்கையும் மட்டுமே போதும்’ என்று எண்ணச் செய்கிறது.
ஆனால், ’அண்ணனே கடவுள்’ என்றிருக்கும் சுதா, செல்லதுரை சொன்ன வார்த்தைகளால் ‘கல்யாணம் பண்ணி அனுப்பிச்சிட்டா திரும்ப இந்த வீட்டு பக்கமே வரமாட்டேன்’ என்று சொல்லும் அளவுக்கு மன உளைச்சலுக்கு ஆளாகிறார். அதற்காக, அவசர அவசரமாகத் திருமண ஏற்பாடுகளைச் செய்கிறார் செல்லதுரை.
அப்போது, தாமரைச்செல்வி உதிர்க்கும் வார்த்தைகள் செல்லதுரையின் மனதை மாற்றுகின்றன.
அதன்பிறகாவது செல்லதுரைக்கு தாமரை மீது காதல் வந்ததா? தங்கையின் மீது சௌந்தர் கொண்ட காதலை அவர் ஏற்றுக்கொண்டாரா?
இந்தக் கேள்விகளுக்குப் பதில் தெரிவதற்குள், செல்லதுரை மனதில் மீண்டும் தந்தை, தாய் மீது குறித்த பழைய நினைவுகள் வந்து போகின்றன?
எதனால் அப்படியொரு சூழல் உண்டானது? அதன்பின் என்னவானது என்பதைச் சொல்கிறது இப்படத்தின் மீதி.
என்னதான் சகோதர – சகோதரி பாசத்தை மையமாகக் கொண்ட கதை என்றபோதும், ஆதார மையமாக இருப்பது என்னவோ அவர்களது பெற்றோரின் பாத்திரங்கள் தான்.
திருமணமான பெண் இன்னொரு ஆடவனோடு சென்றுவிடுவதைக் காட்டிய படங்கள் மிகக்குறைவு.
மகேந்திரனின் ‘பூட்டாத பூட்டுகள்’, ருத்ரய்யாவின் ‘கிராமத்து அத்தியாயம்’ போன்ற வெகு சில படங்களே அதனைச் செய்திருக்கின்றன. ஆனால், அவை வெகுஜன மக்களிடம் வரவேற்பைப் பெறவில்லை.
காரணம், சமுகத்தின் ஒரு பக்கத்தில் அது போன்ற நிகழ்வுகள் நடந்தாலும், அதனைப் பற்றிப் பேசவோ, விவாதிக்கவோ எவரும் தயாராக இல்லை என்பது தான்.
ஆனால், அப்படிப்பட்ட மனிதர்களுக்கும், அவர்களைச் சார்ந்தவர்களுக்கும் வாழ்வென்ற ஒன்று உண்டு என்று சொல்கிறது ‘கோழிப்பண்ணை செல்லதுரை’. அந்த வகையில், ’வழக்கமான திரைப்படம்’ என்று அடைப்பை விட்டு விலகி நிற்கிறது.
திரைக்கதையைச் செப்பனிட்டிருக்கலாம்!
’பீல்குட் ட்ராமா’ வகையறா படங்களின் ஆகப்பெரிய பிரச்சனை, அத்திரைக்கதையோடு பார்வையாளர்களை ஒன்றவைப்பது.
அதற்காக கதாபாத்திரங்களின் வேறுபட்ட குணாதிசயங்கள், கதைக்களங்களின் இயல்புத்தன்மை, வழக்கமான வாழ்வியல் அனுபவங்களை சுவாரஸ்யமாகச் சொல்கிற காட்சிகள், கதையில் இருக்கும் பிரச்சனைகளுக்கான தீர்வுகளை நோக்கி நகர்தல் போன்ற பல விஷயங்கள் அதில் இடம்பெற்றிருக்கும்.
‘கோழிப்பண்ணை செல்லதுரை’யும் மேற்சொன்னவற்றைத் தன்னகத்தே கொண்டிருக்கிறது. அதேநேரத்தில், தொலைக்காட்சி நாடகம் பார்க்கிற உணர்வும் எழுகிறது. படத்தின் பட்ஜெட் மட்டுமே அதற்குக் காரணமில்லை.
இந்தப் படத்தின் மிகப்பெரிய பலம், கடைசி 20 நிமிடக் காட்சிகள். அதிலும் ’கையேந்தி நிற்பான் கடவுளே’ பாடல், இந்த ஆண்டின் மிகச்சிறந்த பாடல் என்று தாராளமாகச் சொல்லலாம்.
அந்த பாடலும், அது இடம்பெறும் சூழலும் நம் கண்ணில் கரகரவென்று நீர் பெருக வைக்கிறது. அந்த காட்சியனுபவமே ’கோழிப்பண்ணை செல்லதுரை’ படத்தின் யுஎஸ்பி.
அதேநேரத்தில் அந்த காட்சிகளுக்கேற்ப, மொத்தப்படமும் அமைந்திருக்கிறதா என்றால் ‘இல்லை’ என்றே சொல்ல வேண்டும்.
காரணம், என்னதான் சில பாத்திரங்களின் வாழ்வைச் சொல்வதாகக் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தாலும், திரைக்கதை ஓட்டத்தைப் பொறுத்தவரை அவை ‘சவசவ’ என்றே நகர்கின்றன. அதனைச் செப்பனிட்டிருந்தால், இப்படத்தின் உயரம் வேறொரு தளத்தைத் தொட்டிருக்கும்.
இயக்குனர் சீனு ராமசாமி அதனைக் கொஞ்சம் கருத்தில் கொண்டிருக்கலாம்.
அசோக் ராஜின் ஒளிப்பதிவு, கதைக்களங்களையும் கதாபாத்திரங்களின் உணர்வுகளையும் பார்வையாளர்களுக்குத் தெளிவுறக் காட்டுவதில் கவனம் செலுத்தியிருக்கிறது.
வழக்கத்திற்கு மாறான பாத்திரப் பின்னணி திரைக்கதையில் இடம்பெற்றிருப்பதால், காட்சிகள் நீட்டி முழக்குவதைக் கட்டுப்படுத்தியிருக்கிறார் படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத். நல்லவேளையாக, அது படத்தின் நீளத்தின் குறைத்திருக்கிறது.
ஆர்.சரவண அபிராமனின் கலை வடிவமைப்பில் ‘சந்தை செட்’ செயற்கையாகத் தெரியவில்லை.
ரகுநந்தனின் இசையில் ‘காத்திருந்தேன் உனக்குதான்’, ’பொன்னான பொட்டப்புள்ள’, ‘ஏலே ஏலே’, ‘தேவதையைப் போல’, ‘கையேந்தி நிற்பான்’ என்று ஐந்து பாடல்களும் சேர்ந்து அற்புதமான ‘ஆல்பம்’ ஆக இதனை மாற்றியிருக்கிறது.
மேற்சொன்ன பாடல்கள் அனைத்துமே பின்னணியில் ஒலிப்பதால் காட்சிகளுக்கான இடங்களை அவை எடுத்துக்கொள்கின்றன. மீதமுள்ள இடத்தில் மனதைத் தைக்கிற பின்னணி இசையைத் தந்திருக்கிறார் ரகுநந்தன்.
‘ஜோ’ படத்தில் நாயகனின் நண்பனாக நடித்த ஏகன், இதில் நாயகனாகத் தோன்றியிருக்கிறார். ‘அசமந்தமான ஆளோ’ என்று எண்ணும்படியான உடல்மொழியை வெளிப்படுத்தியிருந்தாலும், சில காட்சிகளில் கண்ணீரை வரவழைக்குமளவுக்கு நடித்திருக்கிறார்.
நாயகனைச் சுற்றிச் சுற்றி வந்து காதலிக்கிற வழக்கமான நாயகியாக வந்து போயிருக்கிறார் பிரிகிடா சாகா. ஆனால், அவரது புன்சிரிப்பும், சிற்பம் போன்ற உடல்வாகும் அதனை மறக்கடிக்கின்றன.
சத்யா தேவி இதில் நாயகனின் தங்கையாக வந்திருக்கிறார். மன்னிப்பு கேட்பதற்கு இணையாகத் தானாக முன்வந்து பேசுகிற அண்ணனிடம் கதறலை வெளிப்படுத்துகிற காட்சியில் கலக்கியிருக்கிறார்.
சத்யாவின் ஜோடியாக வருகிற லியோ சிவகுமார் அழகாகச் சிரிக்கிறார். சில இடங்களில் ‘ஸ்டாண்ட் அப்’ காமெடியன் போலத் தென்படுகிறார்.
யோகிபாபுவுக்கு இதில் நகைச்சுவை பாத்திரம் தரப்படவில்லை. அதையும் மீறி ஆங்காங்கே நம்மைச் சிரிக்க வைத்திருக்கிறார்.
நாயகனோடு எப்போதும் திரிகிறவராக, உயரக்குறைபாடுள்ள ஒரு கலைஞர் நடித்திருக்கிறார். அவரது ‘கவுண்டர்கள்’ தியேட்டரில் சிரிப்பலைகளை ஏற்படுத்துகின்றன.
ஐஸ்வர்யா தத்தாவுக்கு இதில் வித்தியாசமான பாத்திரம். ஆனால், அவருக்கான ஒப்பனையைத்தான் சகிக்க முடியவில்லை.
இவர்கள் தவிர்த்து பவா செல்லதுரை உட்பட சுமார் ஒரு டஜன் பேர் இதில் நடித்திருக்கின்றனர்.
நல்ல முயற்சி!
சில பாத்திரங்கள். அவற்றின் வாழ்க்கை. அதனூடாகச் சமூகத்திற்குத் தேவையான சேதியொன்றைச் சொல்வது அற்புதமான படைப்பை உருவாக்குவதற்கான அடிப்படை விஷயங்கள்.
கூடல்நகர், தென்மேற்குப் பருவக்காற்று தொடங்கி தர்மதுரை, மாமனிதன் என்று பல படங்களில் அதனை நிகழ்த்தியிருக்கிறார் இயக்குனர் சீனு ராமசாமி.
இதிலும் பெரிதாகப் பிரபலமில்லாத சில நடிப்புக்கலைஞர்களைக் கொண்டு, பெரிதாகக் குறைகள் சொல்ல முடியாத ஒரு படைப்பொன்றைத் தந்திருக்கிறார். நிச்சயமாக இது ஒரு நல்ல முயற்சி.
இதே போல, தமிழ்நாட்டின் ஒவ்வொரு வட்டாரத்தில் இருந்தும் சில நல்ல திரைப்படங்கள் பின்வரும் காலத்தில் உருவாக்கப்படலாம்.
ஏற்கனவே சொன்னது போல, இதன் கிளைமேக்ஸை ஒட்டிய காட்சிகளில் தொற்றும் பரபரப்பு முன்பாதியில் சுத்தமாக இல்லை.
போலவே, ‘வந்தாங்க.. போனாங்க..’ பாணியில் சில பாத்திரங்கள் திரையில் இடம்பெற்றிருக்கின்றன. அவற்றை முறைப்படுத்தியிருந்தால், ஒரு நேர்த்தியான ’பீல்குட்’ படம் பார்த்த திருப்தி கிடைத்திருக்கும். இப்போது ‘ஜஸ்ட் மிஸ்’ என்ற சத்தத்தோடு எழுந்து வர வேண்டியிருக்கிறது..!
– உதயசங்கரன் பாடகலிங்கம்