ஷங்கரின் ‘பார்முலா’வில் கனகச்சிதமாக அமைந்த ‘காதலன்’!

காதலன். தொண்ணூறுகளில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஒரு திரைப்படம். ரசிகர்களை மட்டுமல்லாமல், அப்போதைய திரையுலக ஜாம்பவான்கள் பலரை நகம் கடிக்க வைத்த படம். ஏனென்றால், அதுவரை திரையில் காட்டப்பட்ட கமர்ஷியல் படங்களில் பிரமாண்டத்திற்கு இன்னொரு அர்த்தத்தைக் காட்டியிருந்த்து ஷங்கரின் முதல் படமான ‘ஜெண்டில்மேன்’. அதன் உள்ளடக்கத்தை மீறிக் காட்சியாக்கம் பலரை வியப்படைய வைத்திருந்தது.

அதே இயக்குனர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர் என்று மீண்டும் அந்த கூட்டணி ஒரு படம் தர முனையும்போது எதிர்பார்ப்பு எகிறுவது இயல்புதானே. அதையும் தாண்டி ‘காதலன்’ படத்தைக் கொண்டாடத் தூண்டியது இரண்டு பேரின் இருப்பு. அவர்கள் நக்மா மற்றும் பிரபுதேவா.

காதுல பூ..!

‘என்னப்பா, கலர் கலரா ரீல் விடுறீங்க’ என்று கவுண்டமணி ஒரு படத்தில் ‘டயலாக்’ பேசியிருப்பார். அதனை அப்படியே மொழிபெயர்த்தது போல, ‘காதலன்’ படத்தை உருவாக்கியிருந்தார் இயக்குனர் ஷங்கர். ஒரு மாநிலத்தின் ஆளுநராக இருப்பவரே ஆட்சியைக் கவிழ்க்கச் சதி செய்வதாகவும், அவரது மகளை ஒரு சாதாரண அரசுப் பேருந்து ஓட்டுநரின் மகன் காதலிப்பதாகவும் காட்டியிருந்தார். இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள், ‘என்னப்பா காதுல பூ வைக்கறதுக்குப் பதிலா ஒரு பூக்கடையவே கவுத்து வைக்குறீங்க’ என்று கேட்கும் தொனியில் அமைந்திருந்தன.

‘லாஜிக் பார்த்தால் நோ மேஜிக்’ என்ற வகையில், இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது. சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடைபெறும் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சிக்குச் சென்னை ராஜ்பவனில் இருந்து ரகசியமாக நாயகியை நாயகன் பைக்கில் அழைத்துச் செல்லும் காட்சிகள் அந்த ரகம் தான். அக்காட்சிகளில் நாயகன் பிரபுதேவா, நாயகி நக்மாவோடு வைகைப்புயல் வடிவேலுவும் இடம்பெற்றிருப்பார்.

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இதில் நாயகனின் தந்தையாக நடித்திருப்பார். ‘என்னடா மகனே சோகமா இருக்கே’ என்று நாயகனோடு சேர்ந்து அவர் பீர் அருந்துவதாகவும் ஒரு காட்சி உண்டு. அன்றைய தேதியில், அது ‘கூஸ்பம்ஸ்’ மொமண்ட்களை 90’ஸ் கிட்ஸுக்கு அளித்தது அந்தக் காட்சி. இதில் பிரபுதேவாவின் தாயாக நடிகை பத்மப்ரியா வருவார்.

கிரிஷ் கர்னாட் இதில் வில்லனாக நடித்திருப்பார். இன்னொரு வில்லனாக, அதிகம் பேசாமல் மிரட்டியிருப்பார் ரகுவரன்.

இன்னும் அல்லு ராமலிங்கையா, மனோரமா என்று சில ‘பெரிய தலைக்கட்டு’களும் இதிலுண்டு.

கதை, காட்சியமைப்பு, நடிப்புக்கலைஞர்களின் பங்களிப்பைத் தாண்டி தொழில்நுட்பக் கலைஞர்களின் அபார உழைப்பும் ‘காதலன்’ படத்தில் கலந்திருந்தது. அதுவே, இன்றுவரை பல கமர்ஷியல் பட இயக்குனர்களால் கொண்டாடப்படுகிற ‘ஷங்கர் பார்முலா’வை இப்படத்தில் கெட்டியாக்கக் காரணமாக இருந்தது.

ஒளிப்பதிவாளர் ஜீவா, இப்படத்தில் ஒவ்வொரு பிரேமையும் செதுக்கியிருந்தார் என்றே சொல்ல வேண்டும். நக்மாவை பிரபுதேவா முதன்முறையாகப் பார்க்கும் காட்சியானாலும் சரி, ரகுவரன் ரௌத்திரத்தோடு கிளைமேக்ஸ் காட்சியில் அதகளம் பண்ணும் இடமாக இருந்தாலும் சரி, வழக்கத்திற்கு மாறான வண்ணங்களைத் திரையில் நிரப்பி ஒவ்வொரு பிரேமையும் ஓவியம் ஆக்கியிருந்தது அவரது ஒளிப்பதிவு.

இன்னும் பி.லெனின் – வி.டி.விஜயனின் படத்தொகுப்பு, தோட்டா தரணியின் கலை வடிவமைப்பு, ஆடை வடிவமைப்பு, ஒப்பனை, கிராபிக்ஸ் பங்களிப்பு என்று பல தொழில்நுட்ப அம்சங்கள் இதில் சிறப்பாக இருக்கும்.

அனைத்தையும் தாண்டி ஏ.ஆர்.ரஹ்மானின் இசை இப்படத்தின் உயரத்தைப் பல மடங்கு உயர்த்தியது.

‘என்னவளே அடி என்னவளே’, ‘காற்று குதிரையிலே’, ‘கொல்லையிலே’, ‘இந்திரையோ இவள் சுந்தரியோ’ போன்ற பாடல்கள் மயிலிறகால் வருடிய சுகத்தைத் தர, ‘கோபாலா கோபாலா’, ‘முக்காலா முக்காபுலா’, ‘ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈஸி ஊர்வசி’, ‘பேட்டை ராப்’ பாடல்கள் தியேட்டரில் இளைஞர்களைத் துள்ளலாட்டம் போட வைத்தன. அதனால், சில பெருநகரங்களில் இருந்த தியேட்டர்களில் ரசிகர்கள் கேட்ட ‘ஒன்ஸ்மோர்’ருக்காக இரண்டு, மூன்று முறை பாடல்கள் திரையில் காட்டப்பட்டன.

அனைத்துக்கும் மேலே எல்லா பொழுதுபோக்கு அம்சங்களையும் சரியான விகிதத்தில் நிறைத்து, அடுத்தடுத்த காட்சிகளைக் காண வைத்தது. அடுத்தடுத்த நாட்களில் தியேட்டர் வாசலில் திரள வைத்தது. அதுவே வாரக்கணக்கில், மாதக்கணக்கில், தியேட்டர்களில் ‘ஹவுஸ்ஃபுல்’ பலகை மாட்ட வைத்தது.

ஷங்கரின் படங்களில் ‘தி பெஸ்ட்’ என்று ‘இந்தியன்’ படத்தைக் கூறலாம். அவரது பார்முலாவில் கனகச்சிதமாக உருவான படம் என்றால் ‘காதலன்’ படத்தைத்தான் கைகாட்ட வேண்டும். பிரமாண்டத் தயாரிப்பு என்பதையும் தாண்டி, அவரது படங்களில் ஒரு ‘பீல்குட்’ அனுபவத்தைத் தருவது இப்படம் மட்டுமே..! இன்றும் கூட பல தெலுங்கு படங்கள் இதனை முன்மாதிரியாகக் கொண்டு உருவாக்கப்படுகின்றன.

அனைத்தையும் தாண்டி, ‘இனி வரும் படங்களை இப்படித்தான் பிரமாண்டமாகத் தயாரிக்க வேண்டும்’ என்ற சிக்கலைத் தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோனுக்குத் தந்தது ‘காதலன்’. தான் தயாரித்த எல்லா படங்களிலும் அவர் அப்படியொரு பிரமாண்டத்தைப் புகுத்த முனைந்ததும், அதுவே அவரது முன்னெடுப்புகளுக்குத் தடையாக மாறியதும் தனிக்கதை.

30 ஆண்டு காலம்!

‘காதலன்’ படத்தில் பிரபுதேவாவுக்கு விக்ரம் குரல் கொடுத்திருப்பார். முதலில் அந்த பாத்திரத்தில் பிரசாந்த் நடிப்பதாக இருந்திருக்கிறது. அவரது கால்ஷீட் கிடைக்காத காரணத்தால், நடனமாடுபவராக அறியப்பட்ட பிரபுதேவா அதில் நடித்தார். அப்போது, பவித்ரனின் ‘இந்து’ படத்தில் மட்டுமே அவர் நடித்து வந்தார்.

அதுவரை ஒரு பாடலில் மட்டுமே பார்த்தவரை படம் முழுக்க எப்படி ரசிக்க முடியும் என்ற சந்தேகத்திற்கு, படத்தில் தனது நடிப்பை வெளிக்காட்டிப் பதிலளித்திருந்தார் பிரபுதேவா. நடனம், சண்டைக்காட்சிகள் மட்டுமல்லாமல் காமெடி, செண்டிமெண்ட் காட்சிகளிலும் அசரடித்திருந்தார். அதுவே, தொடர்ந்து அவரை வெற்றிப் படங்களில் இடம்பெற வைத்தது.

நக்மா இந்தப் படத்தில் ஒரு தேவதை போன்றே காட்டப்பட்டிருந்தார். அதுவே தொடர்ச்சியாகத் தனக்கு வாய்க்கும் என்று அவர் நம்பினாரா? தெரியவில்லை. ஒருவேளை அவ்வாறு யோசித்திருந்தார் என்றால், அவருக்கு பெரும் ஏமாற்றமே கிடைத்திருக்கும். ஏனென்றால், அதன்பின் ஒரு படத்தில் கூட அவருக்கு அப்படிப்பட்ட காட்சிகள் வாய்க்கவில்லை. எல்லாமே அவரது கவர்ச்சிகரமான தோற்றத்தை முன்னிலைப்படுத்தவே முயன்றன. அதனால், எதுவும் ரசிகர்கள் மனதோடு ஒட்டவில்லை.

‘காதலன்’ படத்திற்குப் பிறகு, அதே பாணியில் எத்தனை பேர் காதல் ஜோடிகள் ஆனார்களோ, நமக்குத் தெரியாது. அவ்வாறு யோசிக்கும் அளவுக்கு, ஒரு பெருங்கனவை நனவுதானோ என்ற எண்ண வைக்கிற மயக்கத்தை உண்டுபண்ணியது அந்தப் படம்.

உண்மையைச் சொன்னால், ஒரு வெற்றிகரமான கமர்ஷியல் படம் அந்த மாயாஜாலத்தை செய்தாக வேண்டும். அந்த வகையில், இன்றும் ‘காதலன்’ திரைப்படம் கொண்டாடக்கூடியது. அப்படம் வெளியாகி 30 ஆண்டுகள் ஆகின்றன என்பது நம்ப வேண்டிய ஒரு உண்மை.

2கே கிட்ஸ்களுக்கு அப்படம் மிகச்சாதாரணமாகத் தோன்றலாம். ஆனால், முப்பதாண்டுகளுக்கு முன்னர் ‘காதலன்’ படத்தை தியேட்டரில் கண்டதைக் காட்டிலும், அதன் பாடல் கேசட்டை, போஸ்டரை, செய்தித்தாள் விளம்பரங்களைக் கண்டு சிலாகித்தவர்களுக்கே, அப்படம் மனதுக்குள் ஏற்படுத்திய பிரமாண்ட பிம்பம் எத்தகையது என்று தெரியும்..!

அந்த நினைவுகளை அவ்வப்போது மீட்டெடுக்கக் காரணமாக இருக்கும் ‘காதலன்’ படக்குழுவினருக்கு வாழ்த்துகள்!

– மாபா

You might also like