திரையுலகை வாட்டும் வீடியோ ‘லீக்’ பிரச்சனை!

ஒரு திரைப்படம் என்பது பல நூறு பேர்களின் உழைப்பில் உருவாவது. இரவு பகலாக உடலுழைப்பைச் செலுத்துவதோடு, பலரது கூட்டுச் சிந்தனையில் விளைந்த கலைப்படைப்பாகவும் அது இருக்கும். அப்படிப்பட்ட திரைப்படமொன்று தயாரிப்பு நிலையில் இருந்து நிறைவு பெற்று திரையரங்குகளுக்கு வருவதும், அங்கு பார்வையாளர்களால் வரவேற்கப்படுவதும், பின்வரும் காலங்களில் அது தொடர்ந்து ரசிக்கப்படுவதுமாகப் பல நிலைகளைத் தாண்ட வேண்டியிருக்கும். அப்போது பல தடைகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். இதனை மீறியே ஒரு படம் வெற்றி தோல்வியைச் சந்திப்பது, கொண்டாடப்படுவது அல்லது புறக்கணிக்கப்படுவது உள்ளிட்டவை நிகழ்கின்றன.

தயாரிப்பு நிலையிலேயே தடைகளைக் கடக்க முடியாமல் சில திரைப்படங்கள் தேங்கி விடுவதுமுண்டு. மிகச்சில படங்களே பெரிதாகப் பிரச்சனைகளை எதிர்கொள்ளாமல் திரைக்கு வருகின்றன. பெரிய நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்களின் படங்கள் அப்படிப்பட்ட அந்தஸ்தைப் பெற்றவையாகக் கருதப்படுகின்றன. சில நேரங்களில் அவையும் கூடச் சில வகையில் சங்கடங்களை, பிரச்சனைகளை எதிர்கொள்கின்றன.

அந்த வரிசையில் சமீபகாலமாகப் பிரமாண்டமான பெரிய தயாரிப்புகள் சந்திக்கும் முக்கியப் பிரச்சனைகளில் ஒன்றாக விளங்குகிறது, படப்பிடிப்புத்தளத்தில் எடுக்கப்பட்ட வீடியோக்கள் அல்லது படம்பிடிக்கப்பட்ட காட்சிகள் இணையதளங்களில் வெளியாவது. இந்த ‘லீக்’ பிரச்சனை உலகெங்கும் உள்ளது என்றாலும், தென்னிந்திய சினிமாவுலகில் அதிகமாகவே இருந்து வருகிறது.

’லீக்’ வீடியோ வைரல்!

சமீப ஆண்டுகளாகவே ‘லீக் வீடியோ வைரல்’ எனும் பிரச்சனை தமிழ் திரையுலகை ஆட்டிப் படைத்து வருகிறது. குறிப்பிட்ட தேதியில், நேரத்தில் ட்ரெய்லர் அல்லது சிங்கிள் பாடல் வெளியாவதாக தயாரிப்பு தரப்பு அறிவிக்க, அதற்கு முன்னதாகவே அவை வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தும்.

எந்திரன் 2.0 ட்ரெய்லர் முன்கூட்டியே வெளியானதாகச் சில ஆண்டுகளுக்கு முன்னர் செய்திகள் வெளியானது. பிகில் படத்தின் ’வெறித்தனம்’, துணிவு படத்தின் ‘சில்லா சில்லா’ முன்கூட்டியே வெளியானதாகப் பரபரப்பு உண்டானது. ஷங்கரின் ‘கேம் சேஞ்சர்’ படத்தில் ‘ஜாபிலம்மா’ பாடலும் அப்படி இணையத்தில் வெளியாகி வைரலானதாக சொல்லப்பட்டது.

சில ஆண்டுகளுக்கு முன்னர் விஜய் தேவரகொண்டாவின் ‘டாக்ஸிவாலா’ திரைப்படம், தியேட்டரில் வெளியாவதற்கு முன்னரே சில இணையதளங்களில் வெளியானது. தொண்ணூறுகளின் இறுதியில், கார்த்திக் நடித்த ‘சுந்தரபாண்டியன்’ படத்தின் வீடியோ கேசட் சில ஆசிய நாடுகளில் வெளியானது; அதனால், அந்த திரைப்படமே ரிலீஸ் ஆகாமல் போனது.

இப்படி இந்த ‘லீக்’ விவகாரம் ரொம்பவே திரையுலகை ஆட்டிப் படைத்து வருகிறது.

த்ரிவிக்ரம், பவன் கல்யாணின் ‘அத்தாரிண்டிகி தாரிதி’ திரைப்படத்தின் ஒரு பாதி இணையதளத்தில் வெளியானபோது தெலுங்கு திரையுலகமே கொந்தளித்தது.

ஆனால், அதுவே படத்திற்கு ‘ப்ப்ளிசிட்டி’யாகி பெரிய வெற்றியைப் பெற்றுத் தந்தது தனிக்கதை. ஆனால், இதுபோன்ற நிகழ்வுகள் ரொம்பவே அரிது. பெரும்பாலும், இந்தப் பிரச்சனையால் சம்பந்தப்பட்ட படக்குழுவினர் அவதியைத்தான் சுமக்கின்றனர்.

வெளியானது நாகார்ஜுனா காட்சி!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘கூலி’ படத்தில் உபேந்திரா, ஸ்ருதிஹாசன், நாகார்ஜுனா, சௌபின் ஷாகிர் உட்படப் பலர் நடித்து வருவது நாமறிந்த தகவல்.

சமீபத்தில் இப்படத்தின் சண்டைக்காட்சி படப்பிடிப்பில் கலந்துகொண்டிருக்கிறார் நாகார்ஜுனா. அந்த காட்சி இணையத்தில் ‘லீக்’ ஆனது; அது வைரலாகவும் மாறியது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சமூகவலைதளத்தில் பதிவிட்டிருக்கிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். ’இரண்டு மாத உழைப்பு இது’ என்றும், ‘தயவுசெய்து எவரும் இது போன்ற விஷயங்களுக்கு ஆதரவு தர வேண்டாம்’ என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், இப்படி இணையதளத்தில் கசிந்த காட்சிகள் எல்லாமே பெரும்பாலும் பிரமாண்ட தயாரிப்புகளாகத்தான் இருக்கின்றன. காரணம், அந்த படங்களின் அப்டேட்களையே ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். அதற்காக, தங்களது வேலைகளை மறந்து காத்துக் கிடக்கின்றனர். அதனைப் பயன்படுத்திக் கொள்கின்றன சில பத்திரிகைகள், இணையதளங்கள்.

சம்பந்தப்பட்ட படக்குழுவில் இருக்கும் சிலரைப் பயன்படுத்தி, அந்த காட்சிகளைப் பெற்று ‘வைரல்’ செய்திகளைத் தருகின்றன. இதற்காக, அந்த நபர்களுக்குப் பணம் கூடத் தரப்படுவதாகச் சொல்லப்படுகிறது.

அதற்காகவே, சில படப்பிடிப்புத்தளங்களில் மொபைல் பயன்படுத்தக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாகக் கூட செய்திகள் வந்துள்ளன.

உண்மையைச் சொன்னால், இந்தப் பிரச்சனையின் பின்னணியில் மறைமுகமாகச் சம்பந்தப்பட்ட படக்குழுவினரே இருக்கின்றனர். எப்போதும் ரசிகர்களைத் தங்கள் படத்தோடு ஒன்றியிருக்கும் வகையில், அவர்கள் செய்யும் சில ‘விளம்பர’ வேலைகள் எல்லை மீறியதன் ஒரு வடிவமாகத்தான் இந்த ‘லீக்’ பிரச்சனையைக் கருத வேண்டும். ஏனென்றால், கடந்த காலத்தில் சில திரைப்படங்களின் காட்சி இணையத்தில் வெளியானபோது, அதன் பின்னணியில் சம்பந்தப்பட்ட படக்குழுவினரே இருப்பதாகக் கூறப்பட்டது.

அது உண்மையாக இருந்தால், சிறு குழந்தைகள் நெருப்பைக் கொண்டு விளையாடுவது போலத்தான் அவர்களது மனநிலையும் இருந்திருக்க வேண்டும். அப்படித்தான் யூகிக்க வேண்டியிருக்கிறது.

இந்த ‘லீக் வீடியோ வைரல்’ பிரச்சனை தற்போது இன்னொரு எல்லைக்குச் சென்று கொண்டிருக்கிறது. இதனைத் தடுத்து நிறுத்தவும், மட்டுப்படுத்தவும் சில வழிகள் இருக்கின்றன.

அவற்றுள் ஒன்று, சம்பந்தப்பட்ட படக்குழுவினர் ‘எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் படம் பார்க்க வாருங்கள்’ என்று ரசிகர்களிடம் உரக்கச் சொல்வது. இன்றைய ‘பாஸ்ட்புட்’ யுகத்தில் எவரும் அதற்குத் தயாராக இல்லை என்பதே நிஜம்.

குறைந்தபட்சமாக, அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்காமல் பார்த்துக்கொண்டால் போதும்; படம் நன்றாக இருக்கும்பட்சத்தில், நீண்ட நாட்களுக்குத் திரையரங்குகள் ‘ஹவுஸ்ஃபுல்’ ஆகும். சிறிய பட்ஜெட் படங்களுக்கு இது பொருந்தாது’; ஆனால் பெரிய பட்ஜெட் தயாரிப்புகள் அதனை நிச்சயம் செய்யும்.

அதனை மனதில் கொண்டு, அதீத எதிர்பார்ப்புகளை ‘அப்டேட்’ என்ற பெயரில் உருவாக்காமல் இருந்தால், இப்பிரச்சனையை மட்டுப்படுத்தலாம். இல்லையென்றால், இன்னொரு ‘லீக் வீடியோ வைரல்’ பற்றி ஏதேனும் ஒரு தகவலை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்..!

– மாபா

#வீடியோ_லீக்_பிரச்சனை #எந்திரன்_2_0 #பிகில் #துணிவு #கேம்_சேஞ்சர் #விஜய்_தேவரகொண்டா #லோகேஷ்_கனகராஜ் #ரஜினிகாந்த் #கூலி #உபேந்திரா #ஸ்ருதிஹாசன் #நாகார்ஜுனா #சௌபின்_ஷாகிர் #Lokesh_Kanagaraj #movie_scenes_leaked_issues #rajini #coolie_movie #ubendra #nagarjuna #sruthihaasan

You might also like