பன்முகத் தன்மையால் மிளிர்ந்த ‘சிஐடி’ சகுந்தலா!

சினிமாவில் ஒற்றைப் பாடலுக்கு மட்டும் ஆடி, ஒட்டுமொத்த ரசிகர்களையும் கட்டிப்போட்ட ‘சில்க்’ ஸ்மிதாவின் முன்னோடியான ‘சிஐடி’ சகுந்தலா, தனது 84–வது வயதில் மறைந்திருக்கிறார்.

சேலம் மாநகரில் அடங்கியுள்ள அரிசிபாளையம், சகுந்தலாவின் சொந்த ஊர். அவரது பெற்றோருக்கு திரைப்படங்கள் மீது அலாதி பிரியம் உண்டு.

அதனால், அந்த காலத்தில் வெளியான ‘சாகுந்தலம்’ என்ற தமிழ்ப் படத்தின் பெயரை மகளுக்கு சூட்டினார்கள். அந்த சகுந்தலா தான், பிற்காலத்தில் ‘சிஐடி’ சகுந்தலா ஆனார்.

சின்ன வயதிலேயே சகுந்தலாவுக்கு சினிமா ஆசை உருவானது. அரசியலில் நுழைவதற்கு இப்போது, சினிமா முதல் படியாக இருப்பது போல், அப்போது, திரை உலகில் அடி எடுத்து வைக்க நாடகங்கள் திண்ணைப் பள்ளிகளாக விளங்கின. 

எனவே நாடகங்களில் நடிக்கும் திட்டத்தோடு ‘மாங்கனி’ நகரில் இருந்து மதராசுக்கு வந்தார் சகுந்தலா.

அப்போது பிரபலமாக இருந்த ‘நாட்டியப் பேரொளி’களான லலிதா, பத்மினி, ராகினி ஆகியோர் நடத்தி வந்த நடன நாடகங்களின், பாடல்களுக்கு நடனம் ஆடி, தனது கலைப் பயணத்தை தொடங்கினார் சகுந்தலா.

துள்ளலான அவரது நடனத்தோடு கூடிய முகபாவனைகள் அப்போது பெரும் வரவேற்பைப் பெற்றது. பின்னர் நாடகங்களில் சிறிய சிறிய வேடங்களில் நடித்து வந்தார். ‘சூரியன் மேற்கேயும் உதிக்கும்’  அவர் நடித்த முதல் நாடகம்.

1970 ஆம் ஆண்டு ஜெய்சங்கர் நடிப்பில் வெளியான சிஐடி சங்கர் தான் சகுந்தலா நடித்த முதல் படம். கதாநாயகி வேடம். மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த அந்தப் படத்தை ஆர்.சுந்தரம் இயக்கி இருந்தார். 

அந்தப்படத்துக்கு பிறகு அவர் சிஐடி சகுந்தலா என்று அழைக்கப்பட்டார். அதன் தொடர்ச்சியாக, திரை உலகில், அவரது ஆட்டம் அல்லது குத்தாட்டம் ஆரம்பமானது.

கதாநாயகியாக கலை உலக வாழ்க்கையை ஆரம்பித்தவர், கவர்ச்சி நடிகையாக அவதாரம் எடுக்க நேரிட்டது. 

தொடக்கத்தில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த அவருக்கு பின்னர், படங்களில் ’குத்தாட்டம்’ ஆடும் வாய்ப்புகள் தேடி வந்தன.

அதை அவர் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார்.

தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் சுமார் 600 படங்களில் நடித்துள்ளார் சகுந்தலா.

சிவாஜி கணேசனுடன் அதிக சினிமாக்களில் (40 படங்கள்) நடித்தவர் என்ற பெருமை கே.ஆர்.விஜயாவுக்கு உண்டு. அவரை அடுத்து, சிவாஜியுடன் அதிக படங்களில் நடித்தவர் சிஐடி சகுந்தலா. 

படிக்காத மேதை, கை கொடுத்த தெய்வம், திருடன், தவப்புதல்வன், வசந்த மாளிகை, நீதி, பொன்னூஞ்சல், தாய், கிரஹப்பிரவேசம், வைர நெஞ்சம், ரோஜாவின் ராஜா, எங்கள் தங்க ராஜா, ராஜ ராஜ சோழன், தில்லானா மோகனாம்பாள், அவன் ஒரு சரித்திரம், அன்பைத்தேடி, பாரத விலாஸ், ஜஸ்டிஸ் கோபிநாத் உள்ளிட்டவை குறிப்பிடத்தக்கவை.

சிவாஜியை சித்ரவதை செய்தவர்:

சிவாஜியுடன் சிஐடி சகுந்தலா நடித்த முதல்படம் ‘தவப்புதல்வன்’. மாலைக்கண் நோயால் அவதிப்படும் சிவாஜியின் பலவீனத்தைப் பயன்படுத்தி, அவரது சொத்துக்களை அடையத் துடிக்கும் வில்லி வேடம்.

ஒவ்வொரு காட்சியிலும், சிவாஜியை சித்ரவதை செய்து, ரசிகர்களின் சாபத்தை சம்பாதித்துக்கொண்டார்.

சினிமாவிலிருந்து விலகிய பிறகு டிவி சீரியல்களில் நடித்து வந்தார் சகுந்தலா.

குடும்பம், சொந்தம், வாழ்க்கை, அக்னி சாட்சி, கல்யாண பரிசு போன்ற தொடர்கள் குறிப்பிடத் தகுந்தவை.

அதன்பிறகு வயது மூப்பு காரணமாக பெங்களூருவில் உள்ள தனது மகள் வீட்டில் தங்கியிருந்தார் சகுந்தலா.

இந்த நிலையில் அவருக்கு, நேற்று (17.09.2024 – செவ்வாய்க்கிழமை) திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.

அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சகுந்தலா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

சகுந்தலாவின் மறைவுக்கு திரையுலகத்தினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

– பாப்பாங்குளம் பாரதி

You might also like