‘கண்ணே மீனா.. மீனே கண்ணா..’ என்று பார்த்திபன் ‘கவிதைத்தனமாக’ வர்ணித்ததற்கு இணையாக, ரசிகர்களால் இன்றும் ஆராதிக்கப்படுபவர் நடிகை மீனா. அவரைப் போற்றிப் புகழ் பாடுகிற அளவுக்கு, இன்றும் சில படங்களில் நடித்து வருகிறார். தாய் வழியில் அவரது மகள் நைனிகாவும் கூட இன்னும் சில ஆண்டுகளில் நாயகியாக உருமாறலாம்.
ஆனால், அப்போதும் நாயகியாக நடிப்பாரோ என்று சந்தேகப்படும் அளவுக்குத் தோற்றப் பொலிவோடும், சினிமாவுலகம் குறித்த அப்டேட்களோடும் இருந்து வருபவர்.
அதனாலேயே, அவரது பிறந்த நாளன்று திரைத்துறைக்கு அவர் அளித்த பங்களிப்பை நினைவுகூர்வது அவசியமாகிறது.
தொடர் ஓட்டம்!
குழந்தை நட்சத்திரமாக அறிமுமாகி, பதின்ம வயதில் சிறு பாத்திரத்தில் தோன்றி, சட்டென்று ஹீரோயின் அவதாரம் எடுத்தவர் மீனா.
தொடக்கத்தில் சின்ன பட்ஜெட் படங்களில் தோன்றியவர், வெற்றிகளைச் சுவைக்கத் தொடங்கியதும் கதைத்தேர்வில் காட்டிய கவனமே அவரை முன்னணி நடிகைகளில் ஒருவராக ஆக்கியது. அதுவும் தமிழ், தெலுங்கு திரையுலகில் தவிர்க்க முடியாதவராகச் சுமார் பத்தாண்டு காலம் வரை திகழ்ந்தார்.
’நவயுகம்’ என்ற தெலுங்கு படத்தில் நாயகியாக அறிமுகமானவர் மீனா. 1990-ல் அப்படம் வெளியானது. அந்த ஆண்டே தமிழில் ‘ஒரு புதிய கதை’ எனும் படத்தில் நாயகியாக நடித்தார்.
அதற்கடுத்த ஆண்டு வெளியானது ராஜ்கிரண் நடித்த ‘என் ராசாவின் மனசிலே’. அதில் வரும் ‘குயில் பாட்டு..’ பாடல் அவரை ‘யார்’ என்று அடையாளம் காட்டியது.
அதே காலகட்டத்தில் தெலுங்கில் ‘சீதராமய்யா காரி மனவரலு’, இந்திர பவனம்’, ‘ஜகநாடகம்’, படங்களில் நடித்தார். மலையாளத்தில் ‘சந்த்வதனம்’ எனும் படத்தில் அறிமுகமானார். இந்தியிலும் ‘பர்தா ஹை பர்தா’ எனும் படத்தில் நாயகியாக இடம்பிடித்தார்.
சின்னதம்பி படத்தின் தெலுங்கு ரீமேக்கான ‘சண்டி’, ‘அல்லாரி மொகுடு’, ‘பிரசிடெண்ட் காரி பெல்லம்’, ‘முட்டா மேஸ்திரி’ என்று தொடர்ந்து படங்கள் ஹிட் ஆக, தெலுங்கு படங்களில் மட்டுமே அவரை ரசிகர்கள் காண வேண்டியிருந்தது.
தமிழில் ரஜினிகாந்த், விஜயகாந்த், பிரபு, சத்யராஜ், சரத்குமார் என்று முன்னணி நாயகர்களோடு மட்டுமே நடித்தார். கே.பாக்யராஜ், கார்த்திக்கோடும் அவர் ஜோடி சேர்ந்தார்.
1996-ல் அர்ஜுனோடு ‘செங்கோட்டை’யிலும், கமல்ஹாசனோடு ‘அவ்வை சண்முகி’யிலும் நடித்தார்.
மேற்சொன்ன விஷயங்களே இயக்குனர், தயாரிப்பு நிறுவனம், நாயகன் போன்றவற்றுக்கு அவர் தந்த முக்கியத்துவத்தை நமக்குணர்த்துகிறது. அந்த வகையில், தனக்குப் பின் வந்த பல நாயகிகளுக்கான ‘ரோல்மாடல்’ ஆகவும் மீனா விளங்குகிறார் என்றே சொல்ல வேண்டும்.
இடையிடையே கன்னடம், மலையாளப் படங்களிலும் நடித்தார். அதனால், சிறு இடைவெளிக்குப் பிறகு எந்த மொழியில் மீனா நடித்தாலும் அங்கு அவருக்கு வரவேற்பு இருந்தது. அது இப்போது வரை தொடர்வது சிறப்பு.
அந்த தொடர் ஓட்டமே மீனாவிடம் பிடித்தது. அதற்காக, அவர் தன்னைத் தயார்படுத்திக் கொண்டதும், பட வாய்ப்புகளுக்கு ஏற்ப கதைத் தேர்வில் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டதும் தொடர்ந்து அவருக்கு ஏற்றங்களைத் தந்தது.
வித்தியாசமான பாத்திரங்கள்!
1997-ம் ஆண்டு சேரன் முதன்முதலாக இயக்கிய ‘பாரதி கண்ணம்மா’வில் நாயகியாகத் தோன்றினார் மீனா. ’இப்படிப்பட்ட பாத்திரங்களிலும் அவர் நடிப்பாரா’ என்று ரசிகர்களை வியந்து பார்க்க வைத்த படம் அது. அதன் தொடர்ச்சியாக வள்ளல், பாசமுள்ள பாண்டியரே, பொற்காலம் படங்களில் கிராமத்துப் பெண்ணாக வந்து போனார்.
அந்த காலகட்டத்தில், ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ படத்தில் கவர்ச்சிகரமாகத் தோன்றி ரசிகர்களைக் கிறங்கடித்தார் மீனா. ஏனென்றால், அதுநாள் வரை அவரை அப்படிப் பார்க்க வேண்டுமானால் தெலுங்கு ‘டப்பிங்’ படங்கள் ஓடும் தியேட்டருக்கு ரசிகர்கள் ஓட வேண்டியிருந்தது. அதனைப் போக்கி, அவர்களை ‘ஐலேசா.. ஐலேசா..’ பாட வைத்தார் இயக்குனர் சுந்தர்.சி.
ஆனந்தப் பூங்காற்றே, உன்னருகில் நானிருந்தால், மனம் விரும்புதே உன்னை, வானத்தை போல, வெற்றிக்கொடி கட்டு, இரணியன், மாயி, சிட்டிசன், பாறை, ஷாக் போன்ற படங்களில் நடித்த மீனா, மலையாளத்தில் உதயநானு தாரம், கத பறயும்போல் போன்ற படங்களில் மறக்க முடியாத நடிப்பைத் தந்திருக்கிறார்.
த்ருஷ்யம், முந்திரிவல்லிகள் தளிர்க்கும்போல், ப்ரோ டாடி என்று அக்கரையில் இன்றும் தொடர்கிறது மீனாவின் ஓட்டம்.
இந்த நேரத்தில், மீனாவுக்காகச் சமீபத்தில் நடத்தப்பட்ட பாராட்டு விழா ஒன்றில் சேரன் பேசியதை இங்கு நினைவுகூர வேண்டியிருக்கிறது.
பொக்கிஷம் படத்தில் பத்மப்ரியாவின் பாத்திரத்திற்கு ‘டப்பிங்’ பேச கலைஞர்கள் பலர் வந்து போயிருக்கின்றனர். எதிலும் சேரனுக்குத் திருப்தி இல்லை. திடீரென்று மீனாவைப் பேச வைக்கலாமா என்ற எண்ணம் அவருக்குத் தோன்றியிருக்கிறது.
சேரன் பேசியபோது, எதிர்முனையில் இருந்த மீனா திருமண களேபரத்தில் இருந்திருக்கிறார். இரண்டு நாட்களில் திருமணம் நடைபெறவிருந்த நிலையில், அவர் கேட்ட காரணத்திற்காக அப்படத்தில் ‘டப்பிங்’ பேசியிருக்கிறார். சேரனின் மூன்று படங்களில் நாயகியாக நடித்ததற்கான கைமாறு அல்ல அது. ஒரு நல்ல படத்தில் தான் இருந்தாக வேண்டுமென்கிற உந்துதலே அதற்குக் காரணம்.
அந்த எண்ணமும் உழைப்பும் தான் மீனாவை இன்றும் நாம் நினைவுகூரக் காரணமாக உள்ளது. இன்றும் அவரைத் தேடிப் பல பட வாய்ப்புகள் வருகின்றன.
அது நிகழும் வகையில், வாழ்க்கை குறித்த சிறந்த திட்டமிடலையும் தன்னை முன்னிறுத்துகிற பாங்கையும் சிறப்பாகச் செய்து வருகிறார் மீனா. அழகு, ஆரோக்கியத்தோடு நடிப்பு, நடனம் குறித்தான சமகால ரசிகர்களின் விருப்பங்களையும் தெரிந்து வைத்துக்கொள்வதில் ஆர்வம் காட்டுகிறார்.
நாயகி என்றில்லை, நீங்கள் நடிக்க இன்னும் பல நல்ல பாத்திரங்கள் உங்களைத் தேடி வரும். கடந்த காலத்தைப் போலவே, அப்போதும் உங்கள் முகத்தில் நாங்கள் குழந்தைத்தனத்தைக் காண்போம். நிச்சயமாக அது குழந்தைத்தனம் அல்ல; இதுநாள்வரையில் நீங்கள் ஆற்றி வருகிற சாதனை குறித்த பெருமிதம். அது தரும் ஜொலிப்பு மேலும் உயர வேண்டுமென்பதே ரசிகர்களின் விருப்பம்..!
- மாபா
#மீனா #ejaman #பாரதி_கண்ணம்மா #நடிகை_மீனா #என்_ராசாவின்_மனசிலே #வெற்றிக்கொடி_கட்டு #இரணியன் #மாயி #சிட்டிசன் #பாறை #ஷாக் #bharathi_kanmma #actress_meena #en_rasavin_manasile #vetrikodi_kattu #iraniyan #mayi #citizen #paarai #shak