ஜமா: நல்ல கதை சொல்லல் முயற்சி!

கவிஞர் கவின்மலர்

தமிழ் சினிமா எப்போதும் மாநிலத்தின் சில பகுதிகளை மட்டுமே சுற்றி வருகிறது. அலுக்கும் அளவுக்கு மதுரையைப் பார்த்தாயிற்று. கோவையும் கூட. தஞ்சை கூட இன்னமும் சரியாகச் சொல்லப்படவில்லை (ஒரு சில படங்கள் தவிர்த்து).

அந்த வகையில் திருவண்ணாமலையை ஒட்டிய திரைப்படங்கள் அரிது. அப்படியொரு திரைப்படமாக ஜமா வந்திருக்கிறது.

குந்தியின் ஒப்பாரியில் கரைந்துபோன நான் இன்னும் மீளவே இல்லை. உயிரை உருக்கும் குந்தியின் அந்தக் குரலுக்குப் பின்னான தாண்டவனின் தெண்டனிடல் அவன்மீது நமக்கு ஏற்படும் கோபத்தைக் காணாமலாக்குகிறது. எத்தனை கோபம் இருந்தாலும் உண்மையான கலை ஒருவனை அசைத்துவிடும்.

எதிரியே ஆனாலும் அவனிடமிருந்து உள்ளார்ந்த நுணுக்கமான கலை வேலைப்பாடு தொழிற்படுமாயின் அந்தக் கலைக்கு முன் அதன் நேர்மைக்கும் உண்மைக்கும் முன் கண்ணீரோடு வணங்கி நிற்கவே செய்யும் மனம். தாண்டவனுக்கும் அதுவே நிகழ்கிறது.

நிகழ்த்துக் கலைகளுக்கான மிகபெரிய பாராட்டென்பது கண்ணீரே. அதை அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன். கைத்தட்டலை விட கண்ணீரே வெகுமதியானது.

அவ்வகையில் துயரல்லாமல், கலைவெளிப்பாடு தரும் அந்த வியப்பும் பிரமிப்பும் மன எழுச்சியும் கண்ணீரைக் கோருமானால் அது நிகழ்த்துக் கலையின் மாபெரும் வெற்றி.

அது ஜமாவில் குந்தி பாத்திரத்திற்கு நிகழ்கிறது. கதை மாந்தர்கள் மட்டுமல்ல நாமும் நம் பாராட்டை கண்ணீராகத் தருகிறோம்.

இயக்குனர் பாரி இளவழகன் ஏற்று நடித்திருப்பது நான்கு வேறு கதாபாத்திரங்கள் என்று சொல்லும்படியாக அத்தனை வேறுபாடு காட்டி நடித்திருக்கிறார்.

உடல்மொழி அப்படியே மாறுகிறது. கூடவே குரலும். விருதுகள் வெல்லப்போகும் நடிப்பு. ராஜபார்ட்டாக, பெண் வேடமிடத் தொடங்கிய கல்யாணமாக, அதற்கு முன்பான கல்யாணமாக, குந்தியாக இப்படி ஒரே படத்தில் அத்தனை பாத்திரங்களுக்கும் தன் நடிப்பால் உயிர் கொடுத்துள்ள கதாநாயகனும் இயக்குனருமான பாரி இளவழகனின் திசை நோக்கி தாண்டவனைப் போலவே வணங்குகிறேன்.

அன்புக்கும் மதிப்பிற்கும் உரிய இசைஞானி இளையராஜா தன் பின்னணி இசை மூலம் படத்தை வேறு தளத்திற்கு எடுத்துச் சென்றுவிட்டார்.

கதைமாந்தர்களின் உணர்வுகளை அவர்கள் முகத்தில் காட்டும் உணர்வுகளை இசையும் பிரதிபலிக்கிறது.

தாண்டவன், இளவரசன், ஜெகா என மனதிற்குள் நிற்கும் கதைமாந்தர்கள். அந்தப் பெண் ஜெகா… ஆங்காரமும் அன்பும் பிடிவாதமும் கலந்த அந்த நடிப்பு ஆயிரம் கதை சொல்கிறது. சத்யா மருதாணி நிறைவாக பங்களித்திருக்கிறார்.

திரையரங்கத்தில் பார்க்காமல் விட்டுவிட்டோமே என யோசிக்கவைக்கிறது படம். என்னவொரு கதைசொல்லல்! எப்படியான நடிப்பு! எவ்வளவு அற்புதமான இசை! வாழ்த்துகள் இயக்குநரே!

நன்றி: முகநூல் பதிவு

You might also like