விருந்து – கொஞ்சம் ‘பழைய’ பாணி த்ரில்லர்!

சில படங்களின் ட்ரெய்லர் – கதை அல்லது திரைக்கதையின் அடிநாதத்தை நமக்குச் சொல்வதாக இருக்கும். சில ட்ரெய்லர்கள் மிக அழகாகக் குறும்படம் போலிருக்கும்.

மிகச்சில மட்டுமே படத்தைப் பார்க்கத் தூண்டும் வகையில் இருக்கும்; ஆனால், படத்தில் என்ன இருக்கிறது என்றே நம்மால் கணிக்க முடியாது. கிட்டத்தட்ட அப்படியொன்றாக இருந்தது ‘விருந்து’ பட ட்ரெய்லர்.

கண்ணன் தாமரக்குளம் இயக்கியுள்ள இப்படத்தில் அர்ஜுன், நிக்கி கல்ராணி, பைஜு சந்தோஷ், அஜு வர்கீஸ் உட்படப் பலர் நடித்துள்ளனர்.

இப்படம் மலையாளம், தமிழ் இரு மொழிகளிலும் உருவாக்கப்பட்டதாக விளம்பரங்கள் வெளியாகின.

சில ஆண்டுகளாகத் தயாரிப்பில் இருந்த இப்படம் தற்போது தியேட்டர்களில் வெளியாகியுள்ளது. ‘விருந்து’ தரும் காட்சியனுபவம் எப்படி உள்ளது?

அடுத்தடுத்து இரு மரணங்கள்!

ஜான் ஒரு வெற்றிகரமான தொழிலதிபர். அவரது நிறுவனத்தில் பல்வேறு பங்குதாரர்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர். ஒருகட்டத்தில் அவரது தந்தை ஆன்மிகத்திற்குச் செல்கிறேன் என்று நிறுவனப் பொறுப்பை விட்டு விலகுகிறார்.

அதன்பிறகு, அவர் எங்கு சென்றார் என்றே தெரியவில்லை. அதனால் மட்டுமே, அதன் பொறுப்பை ஏற்று நடத்தி வருகிறார் ஜான்.

ஒருகட்டத்தில் அவரது நிறுவனத்தில் நஷ்டம் அதிகமாகிறது. அதனைச் சமாளிக்க முடியாமல் அவர் திணற, நிறுவனத்தை விற்றுவிடுமாறு நெருக்கடி தருகின்றனர் பங்குதாரர்கள்.

இந்த நிலையில், நிதி ஆலோசகர் தேவநாராயணனைச் சந்தித்து ஆலோசனைகள் கேட்கிறார் ஜான்.

அதனைச் செயல்படுத்தவும் முடிவெடுக்கிறார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவர் மரணமடைகிறார்.

ஒரு ஏரியில் இருந்து அவரது கார் கண்டெடுக்கப்படுகிறது. அதையடுத்து, ஜான் தற்கொலை செய்துகொண்டதாகச் செய்திகள் வெளியாகின்றன.

ஜானுக்கு அடுத்தபடியாக நிறுவனப் பொறுப்பை ஏற்கிறார் அவரது மனைவி எலிசபெத். அதன்பிறகு நிறுவனம் பழையபடி இயங்குகிறது.

ஒருநாள் தேவநாராயணனைச் சந்திப்பதற்காக, வீட்டில் இருந்து கிளம்புகிறார் எலிசபெத்.

அப்போது, அவரது மகள் பெர்லி வீட்டில் இருக்கிறார். போனில் ‘நான் சில நிமிடங்களில் வந்து விடுகிறேன்’ என்று எலிசபெத் சொன்னது அவரது காதில் விழுகிறது.

ஆனால், அடுத்த சில நிமிடங்களில் ஒரு விபத்தில் எலிசபெத்தின் கார் உருக்குலைந்து போகிறது. அந்த வழியாக வந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் அதனைப் பார்க்கிறார்.

காரில் இருந்து எலிசபெத்தை வெளியே இழுத்து, அவரை மருத்துவமனையில் சேர்க்க நினைக்கிறார். அவரால் முடியவில்லை.

அடுத்த சில நிமிடங்களில் தனக்குத் தெரிந்தவர்களை அழைத்துக்கொண்டு விபத்து நடந்த இடத்திற்குச் செல்ல முயல்கிறார். அடுத்த நாள் காலையில், அந்த ஆட்டோ டிரைவரின் தங்கைக்குத் திருமணம்.

போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றால் கல்யாண வேலைகள் நின்றுவிடும்’ என்று அவரது நண்பர் தடுக்கிறார். அடுத்த சில நாட்களில் இறந்துபோன எலிசபெத் பற்றிச் செய்திகள் வருகின்றன.

அதனைக் கேள்விப்பட்டபிறகு, நிம்மதி இன்றித் தவிர்க்கிறார் அந்த ஆட்டோ டிரைவர். எலிசபெத் விபத்து நடந்தவுடன், அவரை அழைத்து ‘கட்சி அலுவலகத்தில் இருக்கும் பாலன் அண்ணாவிடம் ‘ஏழுமலையில தான் பிரச்சனைக்கான காரணம் இருக்குன்னு சொல்லிரு’ என்று கூறிவிட்டு மரணித்திருக்கிறார்.

அதனால், எப்பாடுபட்டாவது பாலனிடம் அந்த விஷயத்தைச் சொல்ல வேண்டுமென்று முடிவெடுக்கிறார்.

அதற்குள் பெர்லியைக் கடத்தச் சிலர் முயற்சிக்கின்றனர். ஆனால், தகுந்த நேரத்தில் அங்கு வரும் பாலன் அவரைக் காப்பாற்றுகிறார். ரகசியமாக ஓரிடத்தில் தங்க வைக்கிறார்.

இந்த நிலையில், தன்னைத் தேடி வந்த ஆட்டோ டிரைவர் உடன் பெர்லியைச் சந்திக்க வருகிறார் பாலன்.

எலிசபெத் சொன்னதை பெர்லியிடம் சொல்கிறார் அந்த ஆட்டோ டிரைவர். அவருக்கும் ஏழுமலை பற்றி எந்த ரகசியமும் தெரியவில்லை.

வேறு வழியில்லாமல் ஏழுமலைக்கு பெர்லியையும் அந்த ஆட்டோடிரைவரையும் அனுப்பி வைக்கிறார் பாலன். செல்லும் வழியில், அவர்களை மீண்டும் அந்தக் கும்பல் தாக்க முயற்சிக்கிறது. அப்போது, தேவநாராயணன் அவர்கள் இருவரையும் காப்பாற்றுகிறார்.

அதன்பிறகு மூவரும் ஏழுமலைக்குச் சென்றார்களா? அங்கு எலிசபெத், ஜான் மரணத்திற்கான காரணகர்த்தா யார் என்பது தெரிய வந்ததா என்று சொல்கிறது ‘விருந்து’ படத்தின் மீதி.

அடுத்தடுத்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பேர் மரணத்தில் இருந்து ‘விருந்து’ திரைக்கதை சூடு பிடிக்கிறது.

ஆனால், அதனைச் சொன்ன விதத்திற்கும் கிளைமேக்ஸுக்கும் இடையே சில கிலோமீட்டர் தூர இடைவெளி இருக்கிறது. அவை இரண்டும் தாமரை இலையும் தன்ணீருமாகச் சேர்ந்து நிற்பதை ஏற்பவர்களுக்கு இப்படம் பிடிக்கும்.

பழையபாணி கதை சொல்லல்!

விருந்து படத்தின் கதை திரைக்கதை வசனத்தைத் தினேஷ் பள்ளத் எழுதியிருக்கிறார். கொலைகள், அது தொடர்பான விசாரணை, மூலக்காரணம் அறிதல் என்று சொல்லும் கதைக்குத் திரைக்கதை வடிவம் தந்தபோது ‘கமர்ஷியல் மசாலா’ பாணி ட்ரீட்மெண்டை பயன்படுத்தியிருக்கிறார். அந்த கதை சொல்லல், இது பழைய பாணி ‘த்ரில்லர்’ படம் என்ற உணர்வை ஏற்படுத்துகிறது.

பிரதீப், ரவிச்சந்திரனின் ஒளிப்பதிவு, ரதீஷ் வேகாவின் பின்னணி இசை, வி.டி.ஸ்ரீஜித்தின் படத்தொகுப்பு, சஹஸ் பாலாவின் தயாரிப்பு வடிவமைப்பு போன்றவையும் கூட அக்கருத்தை அடிக்கோடிடும்விதமாகவே இருக்கின்றன.

அதனால், பத்தாண்டுகளுக்கு முந்தைய மலையாளப் படமொன்றைப் பார்த்த எண்ணம் வலுப்படுகிறது.

இந்தப் படத்தில் சுமார் 50 நிமிடங்கள் கழித்தே அர்ஜுனின் ‘ஆக்‌ஷன்’ ஆரம்பமாகிறது.

போலவே, அவரது பாத்திரம் வித்தியாசமானதாகத் தென்படுவதற்கான அறிகுறிகள் திரைக்கதையில் சிறிதும் இல்லை.

நிக்கி கல்ரானி இந்தப் படத்தின் நாயகி. அதனால், பெரும்பாலான காட்சிகள் அவரைச் சுற்றியே நிகழ்வதாக உள்ளன.

தயாரிப்பாளர் கிரிஷ் நெய்யார் இதில் ஆட்டோ டிரைவராகவும், பைஜு சந்தோஷ் பாலனாகவும், முகேஷ் ஜானாகவும், சோனா நாயர் எலிசபெத்தாகவும் நடித்துள்ளனர்.

முகேஷின் தந்தையாக இதில் ஹரீஷ் பேரடி வருகிறார். இவர்கள் தவிர்த்து அஜு வர்கீஸ், தர்மஜன் போன்ற சிலர் இப்படத்தில் உண்டு.

அர்ஜுன் தமிழில் ‘டப்’ பேசியிருந்தபோதும், சில வசனங்கள் தமிழில் அமைந்தபோதும், முக்கால்வாசிப் படம் அவ்வாறு இல்லை என்பதே உண்மை.

அதனால், இது மலையாளத்தில் எடுக்கப்பட்டு தமிழில் ‘டப்’ செய்யப்பட்ட படம் என்ற உண்மை தெரிய வருகிறது.

கண்ணன் தாமரக்குளம் இப்படத்தின் கிளைமேக்ஸ் மக்களுக்கு அதிர்ச்சி தரும் என்று நம்பியிருக்கிறார். ஆனால், அது போன்ற கதைகளைக் கடந்த சில ஆண்டுகளாகப் பார்த்த காரணத்தால், அந்த விஷயம் இப்படத்தின் யுஎஸ்பி ஆக அமையவில்லை.

தொலைக்காட்சியில் பழைய படங்கள் ஒளிபரப்பாகும்போது, அவ்வப்போது டிவியைப் பார்த்து படம் பார்த்த திருப்தியைப் பெறுவது சிலரது வழக்கம். அவர்களுக்கு ஏற்ற படமாக ‘விருந்து’ நிச்சயம் இருக்கும். மற்றவர்களுக்கு இது அலுப்பு தரும்..

-உதயசங்கரன் பாடகலிங்கம்

You might also like