ப்ளூலாக்: ‘ஸ்போர்ட்ஸ் ஸ்டார்’ ஆன சோம்பேறியின் கதை!

விளையாட்டை மையமாகக் கொண்ட படங்கள் இப்படித்தான் இருக்குமென்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் உண்டு.

காட்சிகள், கதையமைப்பு மட்டுமல்லாமல் வசனங்கள் கூட இப்படித்தான் இருக்கும் என்று சொல்லத்தக்க வகையிலேயே இதுவரை பல படங்கள் தமிழிலும் இதர இந்திய மொழிகளிலும் வெளியாகியிருக்கின்றன.

அந்த பார்முலாவில் உலகெங்கும் படங்கள் வெளியாகி வருகின்றன. அவற்றில் ஒன்றாக, அனிமேஷன் ரசிகர்களுக்குப் பிடித்தமானதாக வெளியாகியிருக்கிறது ஜப்பானியப் படமான ‘ப்ளூலாக்: எபிசோடு நாகி’.

இந்தப் படம் தரும் காட்சியனுபவம் எப்படிப்பட்டதாக உள்ளது?

ஒரு சோம்பேறியின் கதை!

பள்ளியொன்றில் படித்துவரும் செஷிரோ நாகி, எடுத்ததற்கெல்லாம் சோம்பேறித்தனப்படும் குணம் கொண்டவர்.

வெளியே சிறுவர்களோடு விளையாடச் சென்றால் உடல் வலியும் அலுப்பும் ஏற்படும் என்று வீடியோகேமில் கவனம் செலுத்துகிறார்.

சாப்பாடு, குளியல் எல்லாமே வீண் என்று நினைக்கும் அளவுக்கு அதுவே கதி என்று மூழ்கிக் கிடக்கிறார் நாகி. பள்ளியில் அவரைத் தேடி வந்து நட்பு கொள்கிறார் ரியோ மிகாகே. அவர் ஒரு கோடீஸ்வரர் வீட்டுப் பிள்ளை.

ஆனால், ஜப்பான் கால்பந்து அணிக்காக ஆட வேண்டும் என்பது அவரது கனவு. அந்தப் பயணத்தில் தன்னோடு நாகியும் இருக்க வேண்டுமென்று விரும்புகிறார். காரணம், நாகியின் புத்திசாலித்தனமான செயல்பாடு அப்படி இருக்கும்.

ரியோ கெஞ்சிக் கூத்தாட, வேறு வழியில்லாமல் அவரோடு ஒரு கால்பந்து அணியுடன் மோதுகிறார் நாகி. அப்போது, ரியோ என்ன சொல்கிறாரோ அதனைச் செய்கிறார்.

ஆனால், அவரது துல்லியமான ஷாட்கள் கோல்களைப் பரிசளிக்கிறது. தொடர்ந்து அவர்களது அணியின் செயல்பாடு சிறப்பாக அமைகிறது.

அதையடுத்து, தேசிய இளையோர் கால்பந்து அணிக்கான முகாமுக்கு ரியோவும் நாகியும் தேர்வாகின்றனர்.

அங்கு கிட்டத்தட்ட 300 வீரர்கள் இருக்கின்றனர். அவர்களில் இருந்து ஒரு சிலரே தேசிய அணிக்குத் தேர்வாக முடியும் என்பது சூழல்.

அந்த நிலையில், நாகியும் ரியோவும் சிலருடன் சேர்ந்து ஒரு அணியாகப் பங்கேற்று பயிற்சிப் போட்டிகளில் வாகை சூடுகின்றனர். ஒருநாள், குறிப்பிட்ட ஒரு அணியுடன் மோதும்போது நாகியின் எண்ணவோட்டமே முற்றிலுமாக மாறுகிறது.

அந்த ஆட்டம், ‘நான் யார்’, ’எதற்காக கால்பந்து ஆடுகிறேன்’ என்ற கேள்விகளை எழுப்புகிறது.

அதுவே, ரியோவுக்கு எதிராக நிற்கும் நிலைக்கு அவரைத் தள்ளுகிறது.

அதன்பிறகு என்னவாகிறது என்று சொல்கிறது இந்த ‘ப்ளூலாக்: எபிசோடு நாகி’யின் மீதி.

இந்தக் கதையில் ‘வாழைப்பழ சோம்பேறி’ என்று சொல்லத்தக்க வகையில் இருக்கும் நாகி, எப்படி ஒரு சிறந்த விளையாட்டு வீரராக மாறினார் என்பதைச் சொல்லியிருக்கும் விதம் அருமை.

சொல்லப்போனால், கால்பந்து விளையாட்டில் அவர் பயன்படுத்தும் உத்திகள் மிகச்சிறப்பானதாக இருக்கின்றன; அவற்றை மிக லாவகமாகவும் எளிதாகவும் களத்தில் வெளிப்படுத்துவது சக வீரர்கள் மத்தியில் அவரை ‘ஸ்டார்’ ஆக மாற்றிக் காட்டுகிறது.

அதனைத் திரையில் சொன்ன விதமே படத்தைப் பார்த்தே ஆக வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்துகிறது.

வழக்கமான படம்!

முனேயுகி கனேஷிரோ எழுதிய ‘ப்ளூலாக்’ எனும் அனிம் தொடரைத் தழுவி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. டகு கிஷிமோடோ இதன் திரைக்கதையாக்கத்தைச் செய்துள்ளார். சுன்சுகே இஷிகவா இதனை இயக்கியிருக்கிறார்.

வழக்கமான அனிமேஷன் படங்களுக்கும், ‘மங்கா’ பாணி படங்களுக்கும் சிறிது வித்தியாசம் இருக்கும்.

வழக்கமான உலகமே ‘அனிமேஷன்’ பாணியில் வடிவமைக்கப்பட்டாற் போலிருக்கும். இப்படத்திலும் அது நிகழ்ந்துள்ளது.

அது தவிர, கால்பந்து விளையாடும் காட்சிகளும் சரி, அதன் இடையே ஸ்கோர் போர்டு முதல் இதர வீரர்கள் குறித்த விவரங்களை விஎஃப்எக்ஸில் தெரியப்படுத்துவதும் சரி, வழக்கமான திரைப்படங்களைப் போன்றே இருக்கின்றன.

’ப்ளூலாக்’ மங்கா சீரிஸை படித்தவர்களுக்கு இதில் வரும் நாகி, ரியோ பாத்திரங்கள் மட்டுமல்லாமல் சாண்டெட்சு, இசாகி, பசிரா, குனிகாமி, சிகிரி, இடோஷி, ஜின்பாசி ஈகோ பாத்திரங்கள் பரிச்சயமாக இருக்கும். அவை வரும் காட்சிகளில் அந்த ரசிகர்களின் ஆர்ப்பரிப்பு அதிகமாக உள்ளது.

அகிரா ஹிரோசவாவின் கலை வடிவமைப்பு, யசுஹிரோ அசாகியின் ஒளிப்பதிவு, ஜுன் முரயாமாவின் இசையமைப்பு ஆகியன ஒன்றிணைந்து காட்சியனுபவத்தைச் செறிவானதாக மாற்றுகின்றன.

ஒரு பணியைச் செய்யும்போது நூறு சதவிகிதம் அதில் ஒன்றியிருக்க வேண்டும் என்பதையே மனித வாழ்வின் உய்வுக்கான அடிப்படையாக முன்வைக்கிறது ஜென்.

போலவே, கால்பந்து போட்டியில் விளையாடும் ஒவ்வொரு கணத்தையும் தனது வாழ்வின் உயிர்மூச்சாக நாகி கருதத் தொடங்குவதோடு இப்படம் முடிவடைகிறது.

நாகியிடம் ஏற்படும் மாற்றங்களைப் படிப்படியாகக் காட்சிப்படுத்தியிருக்கும் விதமே இப்படத்தின் யுஎஸ்பி.

அதனை ஒரு குடும்பத்தில் இருக்கும் பெரியவர்கள், சிறியவர்கள் அனைவரும் ரசிக்க வேண்டுமென்று நினைப்பவர்கள் இந்த ‘ப்ளூலாக்: எபிசோடு நாகி’யை பார்த்து ரசிக்கலாம்!

உதயசங்கரன் பாடகலிங்கம்

You might also like