மலையாள நடிகர் சங்கம் கலைப்பு!

விசுவரூபம் எடுக்கும் பாலியல் விவகாரம்

உலகில் அனைத்து துறைகளிலுமே பாலியல் சீண்டல்கள் புரையோடிக்கொண்டுதான் உள்ளன. வெளிநாட்டு அதிபர்கள் மீதே பகிரங்கமாக பாலியல் புகார்கள் சுமத்துப்பட்டுள்ளதை அறிவோம்.

கவர்ச்சி மிகுந்தது என்பதால் சினிமா பிரபலங்கள் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கள் கூடுதல் வெளிச்சம் பெறுகின்றன.மலையாள திரை உலகமும் அதற்கு விதி விலக்கு அல்ல.

தமிழ், மலையாள சினிமாக்களில் நடித்துப் புகழ்பெற்ற நடிகை, ஓடும் காரில் கடந்த 2017 ஆம் ஆண்டு பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. நடிகர் திலீப் உள்ளிட்டோர் இந்த வழக்கில் சிக்கியுள்ளனர்.

அந்த அதிர்வில் இருந்து கேரள சினிமா, ஓரளவு மீண்டுள்ள நிலையில், கடந்த சில நாட்களாக அங்குள்ள நட்சத்திரங்கள் உள்ளிட்டோர் மீது நாளொரு பாலியல் புகார்கள் எழுந்து, மலையாள சினிமா உலகைக் கதற வைத்துள்ளது.

மலையாளத் திரையுலகில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து விசாரித்த நீதிபதி ஹேமா கமிட்டியின் அறிக்கை, சில தினங்களுக்கு முன் வெளியானது.

“மலையாள சினிமாவில் பாலியல் துன்புறுத்தல்கள் உள்ளன – இது நடிகைகளுக்கு பெரும் சவாலாக உள்ளது” என ஹேமா கமிட்டி குற்றம் சாட்டி இருந்தது.

அறிக்கை வெளியான பிறகு, பல நடிகைகள், தங்களுக்கு பாலியல் துன்புறுத்தல்கள் நடந்ததாகக் கூறி வருகிறார்கள்.

பிரபல நடிகரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ.வுமான ஜெயசூர்யா, நடிகர்கள் சித்திக், ரியாஸ் கான் உள்ளிட்டோர் மீதும் புகார்கள் கூறப்பட்டுள்ளன.

வங்காள சினிமா நடிகை ஸ்ரீலேகா மித்ரா, பிரபல இயக்குநரும் மலையாள சினிமா அகாடமி தலைவருமான ரஞ்சித் மீது பாலியல் புகார் கூறியிருந்தார். இதனை அவர் மறுத்துள்ளார். எனினும் சினிமா அகாடமி தலைவர் பொறுப்பிலிருந்து ரஞ்சித் விலகினார்.

மலையாள நடிகர்கள் சங்கமான ‘அம்மா’ அமைப்பின் பொதுச்செயலாளர் சித்திக் மீது பாலியல் புகார் அளிக்கப்பட்டதால், அவரும் பதவியை ராஜினாமா செய்தார்.

விவகாரம் கை மீறிப்போனதால், ஹேமா கமிட்டி அறிக்கையின் அடிப்படையில் பாலியல் புகார்கள் குறித்து விசாரிக்க, சிறப்புக் புலனாய்வுக் குழுவை கேரள அரசு அமைத்துள்ளது.

மோகன்லால் விலகினார்:

குற்றவாளிகளைப் பாதுகாப்பதாக ‘அம்மா’ அமைப்பின் தலைவர் மோகன்லால் மீது சில நடிகைகள் புகார் கூறினார். இதனால் அவர், தனது தலைவர் பொறுப்பை ராஜினாமா செய்தார். அவருடன் மற்ற செயற்குழு உறுப்பினர்களும் ராஜினாமா செய்துள்ளனர்.

‘அம்மா’ சங்கம் மீது சிலர் புகார் சொல்வதால், சங்கத்தின் செயற்குழு கலைக்கப்படுகிறது. இரண்டு மாதத்தில் தேர்தல் நடத்தப்பட்டு, புதிய கமிட்டி ஏற்படுத்தப்படும்’ என அம்மா அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

“மலையாள திரையுலகத்தினர் மீதான பாலியல் புகார் தொடர்பான அனைத்து குற்றச்சாட்டுகளும் ஊடகங்களால் புனையப்பட்டவ. குற்றச்சாட்டுகள் வடிவில் உள்ள புகார்களுக்கும் நீதிமன்றம் தீர்வு காணும்” என நடிகரும், மத்திய இணை அமைச்சருமான சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து வினாக்கள் எழுப்பிய செய்தியாளர்கள் மீதும் அவர் பாய்ந்தார்.

“இந்த புகார்களால் ஊடகங்களுக்கு மிகப்பெரிய தீனி கிடைத்துள்ளது – இதை வைத்து நீங்கள் நிறைய பணம் சம்பாதிக்கலாம் – ஊடகங்கள் இதுபோன்ற செய்திகளைத் தூண்டிவிடுவது மட்டுமல்லாமல், சமூகத்தின் மனநிலையைத் தவறாக வழிநடத்துகின்றன.

அனைத்து விவகாரங்களும் நீதிமன்றத்தின் முன்னிலையில் உள்ளன. நீதிமன்றத்துக்கு நுண்ணறிந்து ஆராயும் திறன் உள்ளது” என்று சுரேஷ் கோபி ஆவேசமாக கூறினார்.

இதனிடையே பாதிப்புக்குள்ளான மேலும் சில நடிகைகள், ‘மனம் திறக்க’ ஆயத்தமாகி வருவதால் மலையாளப் பிரபலங்கள் கதி கலங்கி உள்ளனர்.

– பாப்பாங்குளம் பாரதி.

You might also like