வளர்ச்சியின் பலன்கள் மக்களைச் சென்று சேர வேண்டும்!

விஐடி வேந்தர் விஸ்வநாதன் கோரிக்கை

முதுபெரும் மருத்துவரும், அரசியல் வித்தகரும், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சருமான டாக்டர் ஹெச்.வி.ஹண்டே அவர்கள் எழுதிய இரண்டு நூல்களின் வெளியீட்டு விழா, நேற்று (27.08.2024) காலை 10 மணிக்குச் சென்னை அடையாறில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர் அரங்கில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் “நமது அரசியலமைப்பு: நெருக்கடி காலத்தில் இந்திரா காந்தி செய்த மாற்றங்கள்” (Our Constitution) என்ற நூலும் “சட்டமேதை அண்ணல் அம்பேத்கர்” என்ற நூலும் பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் கே.அண்ணாமலை மற்றும் வேலூர் விஐடி பல்கலைக் கழகத்தின் வேந்தர் ஜி.விஸ்வநாதன் ஆகியோர் வெளியிட, நீதிபதிகள் பி.என். பிரகாஷ், கே. ஜெயசந்திரன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் வி.ஜி.பி. குழுமத்தின் நிறுவனர் வி.ஜி.பன்னீர்தாஸ், வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே, பேராசிரியர் ஆசீர்வாதம் ஆச்சாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர்.

விழாவில் பேசிய வி.ஐ.டி., வேந்தர் விஸ்வநாதன், அம்பேத்கர் பற்றியும், அவரால் உருவாக்கப்பட்ட இந்திய அரசியல் சாசனம் குறித்தும் பேசினார்.

1949, நவம்பர் 25ம் தேதி அரசியல் நிர்ணய சபையில், அம்பேத்கர் ஆற்றிய கடைசி உரையில், ஜாதி, மதப் பிரச்னைகள் ஏற்கனவே உள்ளன.

இனி அதிகமான கட்சிகள் உருவாகும் என்றும், என்னென்ன பிரச்னைகளை நாடு எதிர்கொள்ளப் போகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

உலகிலேயே அதிக அரசியல் கட்சிகள் உள்ள நாடு இந்தியா தான். 100 ஆண்டுகளுக்கு முன், ஆங்கிலேயர்களால் ஜாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு கைவிடப் பட்டது.

இப்போது, மீண்டும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. 

இப்படியெல்லாம் நடக்கும் என்பதை எதிர்பார்த்தே அம்பேத்கர், ‘அரசியல் சாசனத்தை முன்வைத்து, ஜாதி, மதங்களை பின்னால் வைக்க வேண்டும்’ என்றார்.

இதை இன்றைய அரசியல் கட்சிகளுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உலகின் ஐந்தாவது பொருளாதார நாடாக, இந்தியா வளர்ந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், அந்த வளர்ச்சியின் பலன்கள் அனைத்து மக்களையும் சென்று சேரவில்லை.

தனிநபர் வருமானத்தில் மிகவும் பின்தங்கிய இடத்தில் இந்தியா உள்ளது.

அரசியலமைப்பு சட்டத்தில், சோஷலிச நாடு என உள்ளது. ஆனால், முதலாளித்துவத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம். 1 சதவீதம் பேரிடம் 54 சதவீத சொத்துக்கள் உள்ளன. இது ஆபத்தானது. இந்த ஏற்றத் தாழ்வுகளை மத்திய, மாநில அரசுகள் சரிசெய்ய வேண்டும் எனப் பேசினார்.

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பேசும்போது, கடந்த 1975ல் தேர்தல் முறைகேடு வழக்கில், எம்.பி., பதவியை இழக்கும் நிலை ஏற்பட்டதால், எமர்ஜென்சி என்ற அவசர நிலையை அன்றைய பிரதமர் இந்திரா அமல்படுத்தினார்.

அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்புச் சட்டத்தை முடக்கிவிட்டு, எதிர்க்கட்சி எம்.பி.,க்களை சிறையில் அடைத்து விட்டு, அரசியவமைப்பில் பல திருத்தங்களை செய்தார்.

சோஷலிசம், மதச்சார்பின்மை ஆகிய வார்த்தைகள், அப்போதுதான் சேர்க்கப்பட்டன.

எமர்ஜென்சி காலத்தில் இந்திராவால் அரசியலமைப்புச் சட்டம் எப்படியெல்லாம் சிதைக்கப்பட்டது என்பதை, ஹண்டே யாராலும் மறுக்க முடியாத ஆதாரங்களுடன் எழுதியுள்ளார். என்று பேசினார்.

மூத்த வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் பேசும்போது, அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியதில் பி.என்.ராவ் அவர்களின் பங்களிப்பு மிக முக்கியம் என்பதையும் ஆனால், அவரது பணியை நாம் போற்றவில்லை என்றும் பேசினார்.

நிறைவாக, ஹண்டேவின் மகன் டாக்டர் கிருஷ்ணா ஹண்டே நன்றியுரை ஆற்றினார். முன்னதாக விழாவுக்கு வந்திருந்த சிறப்பு விருந்தினர்களுக்கு ஹண்டே எழுதிய கம்பராமாயணம் ஆங்கில நூல் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது.

You might also like